கொல்லூர் மூகாம்பிகை கோவில்
கொல்லூர் மூகாம்பிகை அம்மன்
அம்பிகையின் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகிய கொல்லூர் தலம், அம்பிகையின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. கொல்லூர் மூகாம்பிகை திருத்தலம் கர்நாடக மாநிலத்தின் தெற்கே, குடசாத்ரி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ அமைத்துள்ளது. மங்களூரிலிருந்து நூற்றி நாற்பது கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் சௌபர்ணிகையாற்றின் கரையோரமாக அமைந்திருக்கிறது.
மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கன்னியாகுமரியில் பகவதி தேவியின் மூக்கில் மாணிக்க மூக்குத்தி அலங்கரிப்பது போல் கொல்லூரில் அவள் மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
இத்தலத்தில் முதன்முதலில் அம்பாள் மூகாம்பிகையானவள், சிலை வடிவில் இல்லை. மூலவராக சுயம்பு லிங்கம் மட்டுமே இருந்தது. சிவபெருமானின் லிங்கத்தில், அம்பாள் அரூபமாகவே பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார். ஆதிசங்கரர் இந்த கோவிலுக்கு வருகை தந்தபோது சுயம்பு லிங்கத்தை மட்டுமே தரிசனம் செய்தார். இந்த கோவிலில் இருக்கும் சுயம்பு லிங்கத்தை முதன்முதலில் வழிபட்டவர் கோல மகரிஷி ஆவார். லிங்கத்தில் அரூப வடிவில் மறைந்திருக்கும் அம்பாளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆதிசங்கரர் கடும் தவம் மேற்கொண்டார். ஆதிசங்கரரின் வேண்டுதலை ஏற்ற தேவி, மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி தந்தாள். அந்த ரூபத்தை மூகாம்பிகை சிலையாக உருவம் அமைத்து பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் மூகாம்பிகை மேல் தவம் புரிந்து எழ முயன்றார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்காக அம்பாளே கஷாயம் தயாரித்துக் கொடுத்தாள். அன்றிலிருந்து இரவு நேர பூஜைக்கு பின் கஷாயம் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு இருக்கும் அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரமும், ஆராதனையும் மட்டுமே நடைபெறும். அபிஷேகங்கள் எல்லாம் லிங்கத்திற்கு மட்டுமே நடைபெறுகிறது.
காளி தேவியுடனும், சரஸ்வதி தேவியுடனும் காட்சி தரும் மூகாம்பிகை
இத்தலத்தில் இருக்கும் லிங்கத்தின் நடுவே தங்க நிற கோடு இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. தங்க நிற கோடு இருப்பதை அபிஷேக நேரத்தில் மட்டுமே காண முடியும். லிங்கத்திற்கு இடது பக்கமாக பிரம்மா விஷ்ணு சிவன் இவர்கள் மூவரும், வலது பக்கமாக சரஸ்வதி லட்சுமி பார்வதி இவர்கள் மூவரும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் லிங்கத்தை வணங்கினால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
முதன்முதலாக இந்த லிங்கத்தை கோல மகரிஷி வழிபட்டதால் கொல்லூர் என்ற பெயர் இந்த இடத்திற்கு வந்தது. இங்கு காட்சிதரும் ஸ்ரீ மூகாம்பிகையின் இரு பக்கங்களிலும் ஐம்பொன்னாலான காளி தேவியும், சரஸ்வதி தேவியும் காட்சி தருகின்றனர். இதனால் இவர்களுக்கு முப்பெரும் தேவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அம்மனை சீவேலி என்று ஆலயத்தைத் திருவலம் செய்விக்கும் போது காலையில் உலா வருகின்ற தேவி காளியின் அம்சமாகவும், உச்சியில் உலா வருகின்ற தேவி திருமகளின் அம்சமாகவும் இரவில் உலா வருகின்ற தேவி கலைமகள் அம்சமாகவும் பாவிக்கப்படுகிறாள்.
சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகை
கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதியின் அம்சமான மூகாம்பிகையை வழிபட்டால் மிகவும் சிறந்தது.
நவராத்திரி திருவிழாவே இங்கு வெகு சிறப்பான விழாவாக விளங்குகிறது. நவராத்திரியின் ஒன்பது தினங்களும் இங்கு விசேஷமான பூஜைகள் நடத்தப்படும். அம்பிகையை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் மூகாம்பிகையை, சரஸ்வதி தேவியாக நினைத்து வணங்கி 'கால ரோகணம்' பாடி அருள் பெற்றார். இத்தலத்தில் இருக்கும் சரஸ்வதி தேவியின் சிலையானது, சரஸ்வதி பூஜை அன்று வீதி உலா எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு வித்தியாரம்ப நிகழ்ச்சியும் சரஸ்வதி பூஜை அன்று சிறப்பாக இத்தலத்தில் நடத்தப்படுகிறது.
மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர்.
கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக் கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலா அஞ்சலி செய்கிறார்கள்.
தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள்.
ஆலயத்துளிகள் இணைய தளத்தில், சென்ற ஆண்டு நவராத்தரி ஒன்பதாம் நாளன்று வெளியான பதிவு
கூத்தனூர் சரஸ்வதி கோவில்
https://www.alayathuligal.com/blog/s44nerac2p3waedbzhth84byfbe7k5