ஆத்மநாதசுவாமி கோயில்

ஆவுடையார் மட்டுமே உள்ள சிவாலயம்

வித்தியாசமான அம்சங்கள் உள்ள சிவாலயம்

சிவாலயங்களில் உள்ள சிவலிங்கம் இரண்டு பகுதிகளால் ஆனது. கீழ்ப்பகுதி ஆவுடையார் என்றும் மேல்பகுதி பாணம் என்றும் கூறப்படும். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் என்னும் தலத்தில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவில் மூலவர் சன்னதியில், ஆவுடையார்(லிங்கத்தின் கீழ் பகுதி) மட்டுமே உள்ளது. மேல் பகுதியான பாணம் கிடையாது. இங்கு பாணம் அரூபமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தலத்து அம்பிகை யோகாம்பிகை, அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது. இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள கருங்கல் பலகணி வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும். மேலும் மற்ற சிவாலயங்களில் இருப்பது போல நந்தி, கொடிமரம், பலிபீடம் போன்றவை இங்கு கிடையாது.

சிற்பக்கலையின் பொக்கிஷம்

இத்தலத்து சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கலைநயம் உடையவை. முற்காலத்தில் சிற்பிகள் தங்கள் சிற்ப வேலைக்கு ஒப்பந்தம் போடும்போது, ஆவுடையார் கோவில் கொடுங்கை தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழி பலகணி போன்ற வேலைப்பாடுகளை தவிர வேறு எந்த சிற்ப வேலைப்பாடுகளையும் தங்களால் செய்ய முடியும் என்று உறுதி அளிப்பார்களாம்.

கோவிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் (Raft),எப்படி ஒரு வீட்டில் கொடுங்கைகளை, தேக்கு மரச் சட்டங்களை இணைத்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பார்களோ, அதேபோல அத்தனை அம்சங்களையும் கல்லிலே வடிவமைத்து இருப்பது காண்போரை வியக்க வைக்கும். இந்த கொடுங்கைக்கூரையில், கற்கள் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டரையடி கனமுள்ள கற்களை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி, அவற்றை செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கனமுள்ள மேலோடு அளவிற்குச் மெல்லிய தாக்கியிருப்பது, சிற்பக் கலையின் உச்சக்கட்ட திறனாகும்.

தற்கால நாகரீகப் பெண்கள் அணியும் நவீன அணிகலன்கள், தங்க நகைகள், சங்கிலிகள் போன்ற விதவிதமான வடிவமைப்பு உள்ள அணிகலன்கள், இங்குள்ள சிற்பங்களில் காணப்படுவது நம்மை பிரமிக்க வைக்கும். சுருங்கச் சொன்னால் இத்தலமானது சிற்பக்கலையின் பொக்கிஷமாகும்.

Oct 29 Avudaiyarkovil.jpg
 
Previous
Previous

சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

மொட்டை விநாயகர் கோவில்