உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவில்
பக்தர்கள் விரும்பிய வரத்தை தரும் முருகன்
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது, சுமார் 700 ஆண்டுகள் பழமையான உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவில். சிறிய குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல சாலை வசதியும் உண்டு. கற்கள் கொண்டு கட்டப்படும் பழமையான கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது இக்கோவில். அற்புதமான வேலைப்பாடுகளுடன் ஒரே நேர்கோட்டில் தூண்கள், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கருவறையில் முத்து வேலாயுத சுவாமி, நின்ற கோலத்தில் வலது கையில் தண்டத்தை ஏந்தி, இடது கையை இடுப்பில் ஊன்றியபடி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் 15,16,17 தேதிகளில் இங்குள்ள மூலவர் மீது சூரியனின் கதிர்கள் படுவதால் இந்த முருகன், உதயகிரி வேலாயுத சுவாமி என அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள முருகனை மனமுருகி வேண்டும் பக்தர்களுக்கு, அவர்கள் விரும்பிய வரத்தை முருகப்பெருமான் தருவதாக அனுபவம் வாய்ந்த பக்தர்கள் கூறுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சாத்தி, 108 தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்ச வாழ்வு வாழலாம். உடலில் தேமல், கட்டி போன்ற தோல் வியாதிகளால் அவதிப்படுவோர் இத்தலத்து தீர்த்தப் பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலை இட்டு முருகப்பெருமானை வழிபட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.