மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் தலம்

திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில், குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோவில். இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மூலவர் வைகுண்ட நாராயணப் பெருமாள், நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்களில், வலது கரத்தில் பிரயோக நிலையில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தி, கீழ் இரு கரங்கள் வரத, அபய முத்திரையோடும் எழுந்தருளி இருக்கிறார். பெருமாள் வைகுண்ட லோகத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் இங்கு எழுந்தருளி இருப்பதால் இத்தலம் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான், மானுட வடிவில் இந்த தலம் வந்து இங்கு அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டு அலர்மேல் மங்கை தாயாரை திருமணம் செய்ய கடன் பெற்று சென்று தாயாரை திருமணம் செய்து கொண்டு,இழந்த செல்வத்தை பெருமாள் மீண்டும் பெற காரணமாக அமைந்த கோவில் இது

கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இக்கோவில் சேதமடைந்தது. இந்த ஊரைச் சேர்ந்த, சென்னை மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றியவரும், பிரபல அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சிவராமன் கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு கோவில் கட்டி புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் சிவராமன் கோவிலை புதுப்பித்து, 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

சுக்கிர தோஷ நிவர்த்தி தலம்

மார்கழி மாதம் அதிகாலையில் சுக்கிர பகவான் தனது ஒளியால் இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை தரிசிப்பதாக ஐதீகம். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன் பலம் இழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றிருந்தாலோ, அதனை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த தலத்திற்கு வந்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும். காதல் திருமணம் கைகூட நினைப்பவர்கள், இத்தலத்து பெருமாளின் காலடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து அர்ச்சித்து பின்னர் அந்த எலுமிச்சம்பழச் சாறை அருந்தினால், அவர்களது வேண்டுதல் நிறைவேறும்.

பிரார்த்தனை

இந்த தலத்தில் உள்ள லட்சுமி குபேரர் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி திருமணத்திற்கு பணம் தந்து உதவியதால் இவரை வழிபட சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இந்த தலத்தில் உள்ள குபரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்ள சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை வழிபட்ட 90 நாட்களில், திருமணம் நிச்சயம் கைகூடும்.

இத்தலத்தில் உள்ள அபிமுக்தீஸ்வரர் கோவில் பற்றிய முந்தைய பதிவு (29.04.2022)_

அபூர்வ கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன்

https://www.alayathuligal.com/blog/znr2lj2393hx2l3c4t26hjjkem7m2b

 
Previous
Previous

உதயகிரி முத்து வேலாயுத சுவாமி கோவில்

Next
Next

காமரசவல்லி சௌந்தரேஸ்வரர்(எ) கார்கோடேஸ்வரர் கோவில்