மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில்
திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் உருவான கோவில்
நாமக்கல்லிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் கோவில். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள், வலதுபுறம் ஶ்ரீதேவி, இடதுபுறம் பூமாதேவியுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்குள்ள உற்சவரும் விசேஷமானவர். பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படும். ஆனால், இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும், அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. தனி சன்னதியில் பத்மாவதி தாயார் எழுந்தருளி இருக்கிறார்.
தல வரலாறு
இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். ஒருசமயம் அவருக்கு வாதநோய் ஏற்பட்டதால், திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக்கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. என்ன காரணத்தாலோ, பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால், பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். பக்தர் மிகுந்த சந்தோஷப்பட்டார். புற்றை உடைத்து பார்த்த போது, உள்ளே பெருமாள் சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு 'கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர்'என்று பெயர் சூட்டப்பட்டது.
திருப்பதியில் ஓர் நாள் என்னும் இத்தலத்தில் மட்டுமே நடைபெறும் தனித்துவமான உற்சவம்
திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் இந்த கோவில் உருவாக்கப்பட்டதால், நவராத்திரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும், 'திருப்பதியில் ஓர் நாள்' என்னும் மகா உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே இத்தலத்திலும் நடைபெறுவது தனிச்சிறப்பாகும் . திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே. அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுவது விசேஷம். அன்று, திருமலை வேங்கடவன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. ருக்மிணியும் கிருஷ்ணனும் இணைந்த அபூர்வ கோலமான சம்மோஹன கிருஷ்ணர் (07.09.2023)
https://www.alayathuligal.com/blog/btwbz99k8pl7at8nhhmwebx49jnp5s-rprbp
2. சன்னதியின் மேற்கூரையில் தங்களுக்குரிய மரத்தினால் செதுக்கப்பட்ட நவக்கிரகங்கள் (26.08.2023)
https://www.alayathuligal.com/blog/btwbz99k8pl7at8nhhmwebx49jnp5s