திருவேட்டீசுவரர் கோவில்
வேடுவனாக வந்த சிவபெருமான்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஜாம் பஜார் மார்கெட் அருகில் அமைந்துள்ளது திருவேட்டீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் திருவேட்டீசுவரர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருநாவுக்கரசரால் தேவார வைப்புத் தலமாக காப்புத் திருத் தாண்டகத்தில் பாடப்பட்டுள்ளது.
செண்பக வனத்தில் தவம் செய்த செண்பகவல்லியை மணந்த சிவபெருமான் திருவேடீஸ்சுவரர் என்று அழைக்கப்படுகிறார் . இவர் இங்கு சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இவர் தலையில் வெட்டு தழும்புடன் காட்சி தருகிறார் . இந்த தழும்பு அர்ச்சுனனால் உண்டாக்கப்பட்டது . அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற வழிபட்டபோது வேடுவனாக வந்த சிவனை உணராமல் , அவரின் தலையில் அடிக்க , தலையில் வெட்டுண்டு தழும்பு உருவானது . வேடுவனாக இறைவன் காட்சி தந்ததால் வேட்டீசுவரன் என பெயர் பெற்றார் .
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு வேட்டகம் (மாமியார் வீடு) ஆன தலம்
இலக்குமி தாயார் திருமாலை அடைய இங்கு இருந்து தவம் செய்தாள் .திருமால் பார்த்தசாரதியாக வந்து இங்கு இருந்த இலக்குமி தாயாரை கைபிடித்ததால், பார்த்தசாரதிக்கு இத்தலம் வேட்டகம் (மாமியார் வீடு) ஆனது, அதனால் திருவேட்டக ஈஸ்வரன் பேட்டை என அழைக்கப்படுகிறது.
மொகலாயர், ஆங்கிலேயர்களால் மான்யங்கள் வழங்கப்பட்ட கோவில்
இக்கோவிலானது 7 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் . மொகலாய பேரரசர் காலத்தில் மான்யங்கள் இத்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சிக்காலத்தில் 1.11.1734ல் இக்கோவில் நிலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அமீர் மஹாலிலிருந்து வரும் அர்த்தசாம பூஜைப் பொருட்கள்
ஆற்காடு நவாப் காலத்தில் மான்யங்கள் தரப்பட்டு இத்தலம் விருத்தி அடைந்ததாக வரலாற்றுச் செய்திகள் சொல்கின்றன. இன்றும் அர்த்தசாம பூஜைக்கு, ஆற்காடு நவாப் பரம்பரையினர் மூலமாக, அவரகள் தற்போது வசித்து வரும் அமீர் மஹாலிலிருந்து, பால், புஷ்பம் இத்தலத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.