இராமநாதர் கோவில்
காலில் சங்கிலியுடன் காட்சியளிக்கும் பெருமாள்
இராமேஸ்வரம் இராமநாதர் கோவிலில் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி உள்ளது.இவர் காலில் சங்கிலியுடன் காட்சியளிக்கிறார். சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குழந்தை பாக்கியம் இல்லா குறையைத் தீர்க்க மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார். மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான். பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.
பிதுர்தோஷம் நீக்கும் பூஜை
கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் கடுமையான பிதுர்தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.