கும்பகோணம் ராமசாமி கோவில்

தென்னக அயோத்தி - கும்பகோணம் ராமசாமி கோவில்

சீதையும் ராமரும் திருமண கோலத்தில் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து இருக்கும் அபூர்வ காட்சி

கும்பகோணம் ராமசாமி கோவில் தென்னக அயோத்தி என்னும் சிறப்பை பெற்றது. இக்கோவில் கி.பி.1600 முதல் கி.பி.1645 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கும்பகோணத்திற்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது கிடைத்த ராமன், சீதையின் சிலைகளைத் தான் இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

கருவறையில் பட்டாபிஷேகக் கோலத்தில் ராமர், சீதை, லட்சுமணன், சத்ருகனன், அனுமார் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். மூலவர் இராமரும் சீதைப்பிராட்டியும் பீடத்தில் அமர்ந்திருக்க, பரதன் குடை விரிக்க, லட்சுமணன் அஞ்சலி பந்தத்துடன் நிற்க, சத்துருக்கனன் வெண்சாமரம் வீச, அனுமன் கையில் வீணையையும், சுவடியையும் ஏந்தியிருக்க காட்சி தருகின்றனர். ராமபிரான் தனது சகோதரர்களோடு எழுந்து அருளி இருக்கும் தலங்கள் மிகவும் அரிது. உத்தரப்பிரதேசம் அயோத்தி, சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் மற்றும் இத்தலத்தில் தான் நாம் இந்த அபூர்வ காட்சியை தரிசிக்க முடியும். அயோத்தியில் சீதா ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருப்பர். இங்கே இருவரும் திருமண கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மற்ற கோவில்களில் ராமர், சீதையை தனித்தனி ஆசனத்தில் தான் காண முடியும்.

இத்தலத்தை தரிசனம் செய்தாலே குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத் தடையுள்ள ஆண், பெண்கள் இக்காட்சி கண்டால் தடை நீங்கி என்றும் தியாக மனப்பான்மையுள்ள வாழ்க்கைத் துணையைப் பெறுவர்.

அயோத்தியில் கும்பாபிஷேகம் நடைபெறும் இன்று (22.01.2024), கும்பகோணம் ராமசாமி கோயிலில் சீதாராமருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம"

"ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்"

Previous
Previous

அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோவில்

Next
Next

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவில்