ரங்கநாத பெருமாள் கோவில்
மிக உயரமான திருமேனி உடைய தாயார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருவதிகை. இத்தலத்தில் ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் ரங்கநாயகி.
இத்தலத்தில் ரங்கநாயகி தாயார் இரண்டடி பீடத்தில் ஆறடி உயர திருமேனியுடன் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார். இத்தகைய மிக உயரமான திருமேனி உடைய தாயாரை வேறு எந்த பெருமாள் கோவிலிலுல் நாம் தரிசிக்க முடியாது. தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலரை தாங்கியும், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரையுடனும் நமக்கு அருள்பாலிக்கிறார்.
தலை சாய்த்தபடி இருக்கும் ஆண்டாள் நாச்சியாரின்அபூர்வ தோற்றம்
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஆண்டாள் நாச்சியார் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ, நேரான திருமுக மண்டலத்துடன் காட்சி தருவார்.ஆனால் இத்திருத்தலத்தில் ஆண்டாள் நாச்சியார் மூலவர் ரங்கநாதரை நோக்கியபடி தன் தலையை ஒரு புறம் சாய்த்தபடி நமக்கு காட்சி தருகிறார். ஆண்டாள் நாச்சியாரும் ஆறடி உயர திருமேனியுடன் காட்சி தருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.