வீரட்டானேசுவரர் கோவில்
சிவபெருமான் நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வக் காட்சி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவதிகை. இத்தலத்து . இறைவன் திருநாமம் வீரட்டானேசுவரர். இறைவி பெரியயநாயகி.. சிவபெருமான் வீரச் செயல் புரிந்த அட்ட வீரட்ட திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலம் திருவதிகை. முப்புரத்தை எரித்து சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்றி அருளிய திருத்தலம் திருவதிகை.
பொதுவாக சிவாலயங்களில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் தான் தரிசனம் தருவார்.சில சிவத்தலங்களில் உள்ள கருவறைகளில் அதுபோன்ற சிவலிங்கத்திற்கு பின்னால் ஈசனின் திருமணக்கோலம் அல்லது ஈசனின் ஏதேனும் ஒரு திருவிளையாடல் ஓவியமாக தீட்டப்பட்டிருக்கும் .ஆனால் திருவதிகை திருதலத்தில் மட்டும் ஈசனை, நின்ற கோலத்தில் தனிச்சன்னதியயில் தரிசிக்கலாம் .மேருவை வில்லாகவும் வாசுகியை நானாகவும் கொண்டு நின்ற நிலையில் மூன்று அசுரர்களின் மீது அம்பு எய்தி வதம் செய்யும் திரிபுர சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் அங்கு காட்சி தருகிறார் சிவபெருமானின் இந்த அபூர்வ கோலத்தை நாம் வேறு எங்கும் தரிசிக்க முடியாது்.
ரங்கநாத பெருமாள் கோவில்
மிக உயரமான திருமேனி உடைய தாயார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருவதிகை. இத்தலத்தில் ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தாயார் திருநாமம் ரங்கநாயகி.
இத்தலத்தில் ரங்கநாயகி தாயார் இரண்டடி பீடத்தில் ஆறடி உயர திருமேனியுடன் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் காட்சி தருகிறார். இத்தகைய மிக உயரமான திருமேனி உடைய தாயாரை வேறு எந்த பெருமாள் கோவிலிலுல் நாம் தரிசிக்க முடியாது. தாயார் மேலிரு கரங்களில் தாமரை மலரை தாங்கியும், கீழிரு கரங்கள் அபய வரத முத்திரையுடனும் நமக்கு அருள்பாலிக்கிறார்.
தலை சாய்த்தபடி இருக்கும் ஆண்டாள் நாச்சியாரின்அபூர்வ தோற்றம்
பொதுவாக பெருமாள் கோயில்களில் ஆண்டாள் நாச்சியார் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ, நேரான திருமுக மண்டலத்துடன் காட்சி தருவார்.ஆனால் இத்திருத்தலத்தில் ஆண்டாள் நாச்சியார் மூலவர் ரங்கநாதரை நோக்கியபடி தன் தலையை ஒரு புறம் சாய்த்தபடி நமக்கு காட்சி தருகிறார். ஆண்டாள் நாச்சியாரும் ஆறடி உயர திருமேனியுடன் காட்சி தருவது இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும்.