இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
வேலுக்கென்று தனிச் சன்னதி உடைய முருகன் தலம்
காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் உள்ள இளையனார்வேலூர் என்ற ஊரில் அமைந்துள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். இக்கோவிலில் முருகப் பெருமான் தனிச் சந்நிதி கொண்டு, தேவியர்கள் இன்றி தனி முருகப்பெருமானாக (பிரம்ம சாஸ்தா கோலத்தில்) சுமார் ஆறடி உயரத்தில் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில் கருங்கல்லிலான வேலானது, தனிச் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த முருகன் கோவிலிலும் வேலுக்கென்று தனிச் சன்னதி கிடையாது. இந்த வேல் சன்னதிக்கும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பாதி வள்ளியும், பாதி தெய்வானையும் ஒருங்கே அமைந்த கஜவள்ளியாக இங்கே எழுந்தருளி இருக்கிறார்கள். வள்ளி, தெய்வயானை இணைந்த கஜவள்ளி தோற்றத்தை நாம் ஒரு சில தலங்களில்தான் தரிசிக்க முடியும்
தல வரலாறு
காசிப முனிவர், சேயாற்றங்கரையில் தங்கி உலக நலன் கருதி வேள்வி செய்யத் தொடங்கினார். அவ்வேள்வியை மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தடுத்து இடையூறு விளைவித்தனர். இவ்விரு அசுரர்களும் மாகறல் ஈஸ்வரனிடம் அழியாத வரம் பெற்றவர்களாவர்.
காசிப முனிவர் கடம்பரநாதரையும், அம்பிகை ஆவுடை நாயகியையும் வணங்கி, வேள்விக்கு மலையன், மாகறன் என்ற இரு அசுரர்கள் தொல்லை கொடுப்பதைச் சொல்லி முறையிட்டார். இறைவனும் இறைவியும் காட்சியளித்து முருகக் கடவுளை அழைத்து வேலாயுதம் தந்து வேள்விக்கு ஏற்பட்டுள்ள இடையூறை நீக்கிடக் கட்டளையிட்டனர். முருகப்பெருமானும் அந்த மலையன், மாகறனை வதம் செய்து வேள்வியை நல்ல முறையில் நடத்த உதவினார். அந்த வேலை முருகப்பெருமான் இளையனார் வேலூரில் நாட்டினார். இந்த வேல் எவ்வளவு ஆழத்தில் பதிந்துள்ளது என்பது இன்றுவரை அறியப்படாத தகவலாகச் சொல்லப்படுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை, தமது திருப்புகழ் பாடலில் போற்றிப் பாடியுள்ளார்