மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்
அக்கினியை கிரீடமாக அணிந்திருக்கும் பத்ரகாளி அம்மன்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம் காளியம்மன் கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையுள்ள சக்திவாய்ந்த இக்கோவில், மதுரையில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இங்குள்ள பத்ரகாளியம்மன் அக்கினியை கிரீடமாக கொண்டு காட்சியளிக்கிறாள். அதனால் அம்மனை குளிர்விக்க எலுமிச்சபழ மாலை அம்மனக்கு இந்த கோவிலில் சார்த்துவது வழக்கம்.வலக்கையில் பற்றிய திரிசூலம் கீழ்நோக்கியவாறு அநீதியை அழிப்பதாகவும், தலையில் சூடிய அக்கினி அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் சாம்பலாக்குவதாகவும் உள்ளது. காளிக்கு பின்றம் 13 அடி உயர பெரிய குதிரை சிலை ஒன்று உள்ளது. குதிரை காளிக்கு நிழல் கொடுக்கும் விதமாக தன் பின்னங்கால்களை கீழே ஊன்றி முன்னங்கால்களை தூக்கி காளியின் இரு புறங்களில் உள்ள பூதகணங்களின் தோள்கள் மீது வைத்துள்ளன. அம்மனும் குதிரையும் திறந்தவெளியில் இருக்கிறார்கள்.
பிரளய காலத்தில் மதுரை முற்றிலும் அழிந்த போது மீனாட்சி அம்மன், சிவ பெருமானிடம் மதுரையின் எல்லையை வகுக்க கோரியபோது சிவபெருமான் தன் கழுத்திலுள்ள ஆதிசேடனை எடுத்து மதுரையை வளைத்தார். அப்பொழுது வடக்கே திருமாலிருஞ்சோலையும், தெற்கே திருபரங்குன்றமும் மேற்கே திருவேடகமும் மதுரையின் எல்லையாக வகுத்தார். கிழக்கில், மடப்புரத்தில் ஆதிசேடனின் தலையும் வாலையும் இணைத்து எல்லையை காட்டினார். ஆதிசேடனின் விஷ்த்தை உண்டு அம்மன் காளியாக இங்கு எழுந்தருளினாள்.
காசு வெட்டிப் போட்டு முறையிடும் வினோதமான பிரார்த்தனை
கொடுக்கல் வாங்கல் சிக்கல், சொத்து தகராறு, குடும்ப சண்டை போன்றவற்றில் நீதி கிடைக்காது ஏமாந்தவர்கள் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் வந்து நீதியின் தேவதையாக காளியை கருதி, அவள் முன்னால் காசு வெட்டிப்போட்டு காளியிடம் முறையிடும் பழக்கம் உள்ளது. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே கொடூரம் செய்பவர்கள், அடுத்தவரை ஏமாற்றுபவர்கள் பயந்து நடுங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணைகள், கோர்ட் விவகாரங்கள் இவைகளுக்கு மடப்புரம் காளியம்மனை வணங்கினால் உடனே கைமேல் பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.
பில்லி,சூனிய,ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம், திருமணம் நடைபெறாமல் தவிப்பவர்கள், மன நிம்மதி இல்லாதவர்கள், ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.
ஆடி மாத வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில், இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்,