வரகூர் வெங்கடேச பெருமாள் கோவில்
துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு பொடிக் கலவை பிரசாதமாக தரப்படும் பெருமாள் கோவில்
தஞ்சையிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும், திருவையாற்றிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள வரகூர் என்னும் ஊரில் இருக்கின்றது வெங்கடேச பெருமாள் கோவில். ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. மூலவர் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள். இடது மடியில் மகாலட்சுமித் தாயாரை அமர்த்திக்கொண்டு, காட்சி தருகிறார். உற்சவர் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கிராம்பு முதலான மூலிகைகளைக் கொண்டு இடித்துச் செய்த பொடியானது, பெருமாளின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மூலிகை பொடி பிரசாதமானது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்
வெண் பன்றியாக வந்து பக்தருக்கு தன் கோவிலை காட்டி அருளிய பெருமாள்
ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர்(1650-1745). இசையிலும், நாட்டியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், 'திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்' என அசரீரி கேட்டது. இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. 'விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்' எனக் கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர். ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோவிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது. சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான 'ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.
இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியின் போது நடைபெறும் உறியடி உற்சவம் மிகவும் பிரசித்தம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உற்சவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். கிருஷ்ண ஜயந்தி விழாவின் போது, சுவாமியின் மடியில் குழந்தை கிருஷ்ணரை கிடத்துவதும் பெருமாளையே, யசோதையாக அலங்கரிப்பதும் வேறு எந்தத் தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்று.
பிரார்த்தனை
தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் . இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில்
தாயின் வயிற்றில், குழந்தையின் வளர்ச்சியை விளக்கும் வியப்பூட்டும் சிற்பங்கள்
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில், பல்லடத்திலிருந்து 28 கி.மீ தூரத்திலும் தாராபுரத்திலிருந்து 16 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி கோவில். இறைவன் திருநாமம் விடங்கீசுவரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. இந்தக் கோவிலில் உள்ள காலபைரவ வடுகநாத சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். காசி சென்று கால பைரவ சுவாமியை வணங்க முடியாதவர்கள் இவரை வணங்கினால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவில் தூண்களில். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, வெவ்வேறு காலகட்டங்களில், அதாவது குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இந்த விதமான நிலையில் (Position) இருக்கும் என்பதை சிற்பங்களாக தூணில் வடித்து வைத்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, ஸ்கேன் கருவி போன்ற நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்து, அதை சிற்பத்திலும் வடித்து வைத்திருப்பது நம் முன்னோர்கள் மருத்துவத் துறையிலும், அறிவியல் துறையிலும் அடைந்திருந்த உன்னத நிலையை விளக்குகின்றது. நம் முன்னோர்கள் கட்டிடக்கலை, சிற்பக்கலை, அறிவியல் துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் அடைந்திருந்த வளர்ச்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில்
எமனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம்
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி-செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள தூசி கிராமத்தில் இருந்து பிரியும் சாலையில் 1½ கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற தலம் குரங்கணில்முட்டம் வாலீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் இறையார் வளையம்மை.. மறுபிறவி வேண்டாதவர்களுக்கு அருள்பாலிக்கும் தலம் இது, மகரிஷிகளின் சாபத்தால் வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் முட்டமாக (காகம்) பூலோகத்தில் பிறப்பெடுத்தனர். இதனால், மனம் வருந்திய மூவரும் திருக்கயிலாயம் சென்று உமையொருபாகனான சிவபெருமானை சரணடைந்து தங்களுக்கு சாப விமோசனம் அருளும்படி வேண்டி நின்றனர். சிவபெருமானின் கட்டளையை ஏற்று இத்தலத்து இறைவனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
சனி தோஷ நிவர்த்தி தலம்
சனி கிரகத்தின் அதிபதியாக யமன் கருதப்படுகிறார். அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும். எமனுக்கே சாப விமோசனம் கிடைத்த தலம் இது என்பதால், சகலவிதமான சனி தோஷங்களும் இங்கு நிவர்த்தியாகும்.
செந்தூர்புரம் வடசெந்தூர் முருகன் கோவில்
வடக்குத் திருச்செந்தூர் என்று போற்றப்படும் முருகன் தலம்
சென்னை-பூந்தமல்லி சாலையில் காட்டுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது செந்தூர்புரம். திருச்செந்தூரில் செந்திலாண்டவன் அருள்வதைப் போல வட தமிழ்நாட்டிலும் அவன் அருள் கிடைக்க எண்ணிய பக்தர்கள் காஞ்சி முனிவரிடம் சென்று தம் எண்ணத்தைத் தெரிவித்தனர். “நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவனை தாராளமாக பிரதிஷ்டை செய்யலாம்” என்று அவர் அருளாசி வழங்கினார். கூடவே, சுமார் 6 அடி உயரமுள்ள அழகான முருகன் சிலையை வைக்க ஏற்பாடும் செய்து கொடுத்து, இத்தலத்தின் அமைப்பு எப்படி இருக்கலாம் என்றும் ஆலோசனையும் தெரிவித்தார். அவருடைய அறிவுரைப்படி, இந்தக் கோவில் அமைந்தது. கருவறையில் மூலவர் வடசெந்தூர் முருகன் ஆறடி உயர திருமேனியுடன் வலது கையில் வஜ்ரம், இடது கையில் ஜபமாலை மற்றும் அபய வரதக் கரங்களோடு அருட்பாலிக்கிறார். மூலவருக்கு கிருத்திகை அன்று ராஜ அலங்கார உடையும், சஷ்டி நாளில் சந்தன அலங்காரமும் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயம் உருவாகுவதற்கு முன் பல அதிசய நிகழ்வுகள் இத்தளத்தில் நிகழ்ந்தன. இந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்ற ஒரு பெண்மணி விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருசமயம் இவ்வழியே சென்ற அவள், வழியில் ஆறு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டாள். ஒரு குழந்தை அவளிடம் வந்து வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தது. அதை வியப்பு கலந்த அன்போடு பெற்றுக்கொண்ட அந்தப் பெண், அதில் பாதியைத் தான் சாப்பிட்டுவிட்டு மீதியை அந்தக் குழந்தைக்கே கொடுத்துவிட்டாள். பிறகு அந்த ஆண் குழந்தையை ஆசையோடு முத்த மிட்டு, 'எங்கள் வீட்டுக்கு வருகிறாயா?' என்று கேட்டாள். 'நிச்சயமா ஒருநாள் உங்கள் மகனாகவே வருவேன்' என்றதாம் அந்தக் குழந்தை.. குழந்தை பேறில்லாத அவள் கண்களில் நீர் பெருகிட அந்தக் குழந்தையை அள்ளி உச்சி முகர்ந்தாள். பிறகு அந்த இடத்தைவிட்டுச் செல்ல அவள் முயன்றபோது அவளுடைய புடவை ஒரு முள் செடியில் சிக்கியது. அதை விடுவித்துவிட்டு திரும்பினால், அந்தக் குழந்தைகளை காணவில்லை. இந்த அதிசயத்தை அவள் ஊர்ப் பெரியோர்களிடம் தெரிவித்தாள். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பெண் தனக்காக ஒரு வீடு கட்டும் பணி தொடங்கிய போது, அங்கே முருகன் சந்நதி அமையப் போகிறது என்ற அசரீரி உத்தரவும் அவளுக்கு கிடைத்தது.
பிரார்த்தனை
முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதிரிகள் எளிதாக விலகுவர். ஞாயிற்றுக்கிழமைகளில் 'வித்யாசர்வண பிரார்த்தனை' நடைபெறுகிறது. தங்கள் பிள்ளைகள் கல்வியில் உயர்வடைய வேண்டுமென்று எண்ணும் பக்தர்கள் இந்த வித்யாசர்வண பூஜையில் கலந்து கொண்டு பஞ்சாமிர்த பிரசாதம் பெற்றுச் செல்கிறார்கள்.
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்
சப்த கன்னியருக்கு உபதேசம் செய்த 'கன்னியர் குரு' தட்சிணாமூர்த்தி
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்ட சிறப்பினை உடையது. அதனால் இறைவன் வாலீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி இறைவன் சன்னதி சுற்றுச்சுவரில், தனது நான்கு சீடர்களுடன் அருள் பாலிப்பார். ஆனால் இத்தலத்தில், தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பதற்கும் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்ததற்கும் தொடர்புண்டு.
மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். "சப்தகன்னியர்' எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.
இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். .இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படியும், குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாகவும்கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, "கன்னியர் குரு' என்று அழைக்கிறார்கள். வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.
பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராகியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில்
இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
திருமணத் தடை நீக்கும் ரதி மன்மத பூஜை
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்குள்ள தாயார் சன்னதி மண்டபத்தில், ரதி மன்மதன் சிலைகள் உள்ளன. திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக்கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜைக்கான சங்கல்பம், காலை முதல் நண்பகல் வரை, சூடிக் கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள் உற்சவர் திருமேனி முன் செய்யப்படுகிறது. ரதி, மன்மதன் ஆகிய இருவரின் கைகளிலும் ஐந்து விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமை பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு ரதி தேவிக்கும், பெண்கள் தங்களின் திருமண தடை நீங்குவதற்கு மன்மதனுக்கும் பூஜை செய்கிறார்கள்.
ஆண்களுக்கு ரதி பூஜை
திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு ஐந்து-வியாழக்கிழமைகள் தொடர்ந்து.முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவி, பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும் . அடுத்து வரும் வாரங்களில் ஒரு மாலை கொண்டு சென்றால் போதும்.
பெண்களுக்கு மன்மதன் பூஜை
திருமணம் தாமதமாகும் பெண்கள் மன்மதனுக்கு மேற்கண்ட பூஜையை செய்ய வேண்டும். திருமணமாகத கன்னி பெண்கள் மன்மதனுக்கு ஐந்து வியாழக்கிழமைகள் தொடர்ந்து, முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்து, சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து, வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும்.
திருமணமானவுடன் புதுமணத் தம்பதியர் வந்து பெருமாளை வணங்க வேண்டும். இக்கோவிலில் நடைபெறும் திருமண தடை நீக்கும் ரதி, மன்மதன் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. பல வெளி ஊர்களில் இருந்தும் திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் வந்து இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
பெரியதிருமங்கலம் அருங்கரை அம்மன் கோவில்
பெண்கள் வந்து வணங்க அனுமதி இல்லாத அம்மன் கோவில்
கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய திருமங்கலம். இந்த ஊரில் பாயும் அமராவதி ஆற்றின் கரையில் அம்மன் கோவில் உள்ளது. நல்லதாய் என்று முதலில் பெயர் பெற்றிருந்த இந்த அம்மன், பின்னர் ஆற்றின் கரையில் எழுந்தருளி இருப்பதால் அருங்கரை அம்மன் என்று அழைக்கப்படுகின்றார்.
இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்ல பெண்களுக்கு அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்று வழிபடலாம். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, தலை முடியாமல், ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். ஆண்கள் மட்டுமே கோவிலுக்குள் சென்று வழிபடுகின்றனர். மேலும், இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும்.
மஞ்சள், குங்குமம் பிரசாதத்திற்கு பதிலாக மடப்பள்ளி அடுப்பு சாம்பல் பிரசாதம்
அம்பாள் கோயில்களில் வழக்கமாக தரப்படும் மஞ்சள், குங்கும பிரசாதமும் இங்கு தரப்படுவதில்லை. அவளுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் அடுப்பிலுள்ள சாம்பலையே தருகின்றனர். அம்பாளுக்கு பூஜை முடிந்தபின்பு, படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள், மற்றும் நேர்த்திக்கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவற்றை கோயில் முன் மண்டபத்தில் இருந்து "சூரை' (எறிதல்) விடுகின்றனர். இதனை பெண்கள் தங்களது சேலையில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருளுவதாக நம்பிக்கை.
கோவில் வரலாறு
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த மீனவர்கள், அமராவதி ஆற்றில் வலைவீசிய போது, பெட்டி ஒன்று சிக்கியது. அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. ஆற்றங்கரையிலுள்ள மரத்தின் அடியில் அம்பாளை வைத்து வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் அவர்கள் அவ்விடத்தை விட்டு சென்றுவிடவே, மணல் மூடி பெட்டி மண்ணுக்குள் புதைந்து விட்டது. பின்னர் நல்லதாய் என்ற கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்து வந்த சிறுமி, ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது ஒரு பசு மட்டும் மரத்தின் அடியில் இருந்த மணல் மேட்டின் மீது பால் சொரிந்ததைக் கண்டாள் வியப்புற்று அருகில் சென்று பார்த்தபோது ஒரு மேடு இருந்தது அதன் மீது அவள் அமர்ந்தாள் அதன்பின் எழவில்லை. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள் அவளைத்தேடி இங்கு வந்தபோது சிறுமி மணல் திட்டில் அமர்ந்திருந்ததைக் கண்டனர் அவர்கள் சிறுமியை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர் அங்கிருந்த வர மறுத்த சிறுமி அவர்களிடம், "நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன் என்னைக்கண்ட இந்தநூளில் இதே நேரத்தில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள் என்று சொல்லிவிட்டு ஜோதியாக மாறி மறைந்துவிட்டாள் பின் அவர்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி உருவம் ஏதுமில்லாமல் வழிபட்டு வந்தனர் பிற்காலத்தில் இங்கு கோயில் கட்டப்பட்டது.
மருங்கப்பள்ளம் மருந்தீசுவரர் கோவில்
மருந்து கல்வம் மற்றும் குழவியே சிவலிங்கமாக இருக்கும் தலம்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கப்பள்ளம். இத்தலத்து இறைவன் திருநாமம் மருந்தீசுவரர், ஔஷதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் மருத்துவ நாயகி ,பெரியநாயகி. சகல நோய்களையும் இறைவன் குணப்படுத்துவதால் இந்த பெயர் ஏற்பட்டது. இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமையானது.
சூரியனுக்கும் உஷா தேவிக்கும் பிறந்த குழந்தைகள் நசத்யா மற்றும் தசரா. அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இவர்கள், பிரம்மாவின் ஆணைப்படி, தேவலோக மருத்துவர் பதவியை அடைவதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள். அவர்கள் முதலில் மூலிகைகளை அரைக்க பயன்படுத்திய, கல்வம் (கல்வம் என்பது கல்லினாலான ஆன முட்டை வடிவமான குழியுள்ள அம்மி) மற்றும் குழவியையே, உலக உயிர்கள் யாவும் ஆரோக்கியமாக வாழும் பொருட்டு சிவலிங்கமாக பிரதிஷ்டைசெய்து, "ஸ்ரீ மருந்தீசுவரர்" என்று திருநாமம் வைத்து வழிபட்டார்கள். மருந்தீசுவரர் லிங்கத்தில், குழவியின் விளிம்பு இருப்பது, நாம் வேறு எந்த தலத்து சிவலிங்கத் திருமேனியிலும் காண முடியாது.
ஆஞ்சநேயப் பெருமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து செல்லும்போது மருந்தீஸ்வரர் திருவருளால் அதிலிருந்து ஒர் பெரும் பாறை இவ்வூரில் விழுந்து சிதறியது. விழுந்ததினால் ஏற்பட்ட பள்ளம், மருந்து தீர்த்தம் என்று அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளமானது. பாறையிலிருந்து சிதறிய மூலிகைகள் இவ்வூரெங்கும் மருத்துவ தாவரங்கள் ஆகவும், முக்கிய மூலிகையான பாதிரி தல விருட்சமாகவும் ஆனது. இதனாலையே இவ்வூர் மருந்து + பள்ளம் = மருந்துப்பள்ளம் என பெயர்பெற்றது. இதுவே மருவி மருங்கப்பள்ளம் என் அழைக்கப்படுகிறது. மருந்துபுரி, ஒளஷதபுரி என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த, திருக்குளத்து நீரே( மருந்து தீர்த்தம்) தீராத நோய் தீர்க்கும் மஹாஔஷத பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.
மருத்துவத் துறையைச் சார்ந்த அனைவரும் வழிபட வேண்டிய தலம்
மருந்தீசுவரர், அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருத்துவராக விளங்குவதால், சகல துறை வைத்தியர்களும், அறுவை சிகிச்சை நிபுணர்களும், சித்த மருத்துவர்களும், நாட்டு வைத்தியர்களும், மருத்துவத் துறையில் படிப்பவர்களும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், விற்பனையாளர்களும், செவிலியர்களும் வழிபட வேண்டிய தெய்வமாக திகழ்கிறார். மருத்துவர்கள் தங்களது மருத்துவ சாதனங்களை இறைவன் திருபாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்துச்சென்றால் அவர்களது அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வெற்றியடையும். உடல்நிலை பாதிக்கபெற்ற அன்பர்கள் தங்களது மருந்துப் பொருட்களை இறைவன் திருவடியில் வைத்து வணங்கி, மருந்துப் பொருட்களை இறைவன் திருபிரசாதமாக உண்ணும்பொழுது வியாதி உடனே நிவர்த்தியாகும்.
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன் தரும் தலம்
அசுவினி, ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் மற்றும் ஞாயிறு ,செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் வழிபடவண்டிய தலம் இது. பிறந்தநாள், திருமண நாள், ஜன்ம நட்சத்திர நாள், ஆகிய தினங்களில் இங்குள்ள மருந்து தீர்த்தத்தில் நீராடி ஆயுஷ்ய ஹோமம் செய்து கொண்டால் நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது ஐதீகம். நோய்கள் நிவர்த்தியாகும்.
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
பாம்பு ஊர்ந்த தழும்பு கொண்ட சிவலிங்கத் திருமேனி
திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம்.
ஒரு சமயம், திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன், தனது சாப விமோசனத்திற்காக இத்தலத்து இறைவனான சேஷபுரீஸ்வரரை வணங்கி, விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கத்தின் பாணத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம்.
ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும், நாக தோஷ நிவர்த்திக்காகவும் இத்தலத்தில் பிரார்த்திக்கிறார்கள். இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்.
திண்டுக்கல் அபயவரத ஆஞ்சநேயர் கோவில்
மார்பில் சிவலிங்கமும், கால்களில் பாதரட்சையும், இடுப்பில் கத்தியும் கொண்டு காட்சி தரும் அபூர்வ ஆஞ்சநேயர்
திண்டுக்கல் நகரில், மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக, 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் அபயவரத ஆஞ்சநேயரின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இவர் காட்சியளிக்கிறார்.
முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.
ராமாவதாரத்தின் போது, விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.
கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வழிபாடு
தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக, இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.
பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில்
மரகத திருமேனியுடன், நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் சத்ருசம்ஹார கோலம் கொண்ட அம்பிகை
சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில், 31 கி.மீ தொலைவில், செங்குன்றம், காரனோடை ஊர்களைக் கடந்தால் வரும் தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து, சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது பஞ்சட்டி அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. அகத்தியர் வந்து வழிபாடு செய்ததால் இறைவனுக்கு, அகத்தீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.
அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு நோக்கி, இடது காலை முன்வைத்து நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள்.அம்பிகையின் திருமேனி பச்சை மரகதக்கல்லால் ஆனது. அம்பிகையின் நெற்றியில், சிவபெருமானைப் போல் மூன்றாவது கண் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
அகத்திய முனிவர், சுகேது என்ற அரக்கனுடைய சாப விமோசனத்திற்காக இத்தலத்தில் ஐந்து யாகங்கள் செய்தார். அவர் செய்த ஐந்து யாகங்களுக்கு பஞ்ஜேஷ்டி என்று பெயர். இஷ்டி என்றால் யாகம். ஐந்து யாகங்கள் என்பதால் பஞ்ச இஷ்டி. அதுவே இத்தலப் பெயரானது.
அந்த யாகத்துக்கு அசுரர்கள் தடை ஏற்படுத்திட முயல, அகத்திய முனிவர் அம்பிகையிடம் காத்தருள வேண்டினார். உடனே அம்பிகை மூன்று கண்களைக் கொண்ட திரிநேத்ரதாரணியாக இத்தலத்தில் தோன்றி, தனது இடது காலை முன் வைத்து, மூன்றாவது கண்ணால் அந்த அசுர சக்திகளை எரித்துச் சாம்பலாக்கினாள். தீய சக்திகளை அழிக்க புறப்பட்டதினால், அம்பிகை இங்கு இடது காலை முன்வைத்து காட்சி தருகிறாள். அம்பாளின் இத்திருக்கோலம் சத்ருசம்ஹார திருக்கோலம் ஆகும். பிறகு அகத்திய முனிவர், அம்பிகைக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டும், அவள் சாந்த நிலைக்குத் திரும்பவும் அம்பாளுக்கு முன்பாக மிகப் பெரிய துர்க்கா மகா யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
அம்பாள் ஆனந்தவல்லியாக ஆனந்தத்தையும், அதே நேரத்தில் நம்மை வாட்டி வதைக்கும் தீய சக்திகளைப் பொசுக்கிக் காத்தருளும் முக்கண்ணுடையவளாகவும் அருள் பாலிக்கிறாள்.இங்கு யாகங்கள் செய்தால் பலன்கள் பல மடங்காக கூடும் என்று கூறப்படுகிறது. அகத்தியரால் செய்யப்பட்ட ஐந்து யாகங்களில், அன்னதானத்தையே மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். எனவே இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும் , உயர் பதவிகள் தேடி வரும் என்பது ஐதீகம். அம்பாளின் அருள் நம் செயல்களில் ஏற்படும் தடங்கல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் விலக்கி விடும்.
அம்பாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ராஜகோபுரம் தெற்கு நோக்கி அம்பாளின் முன் அமைந்திருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும். இவ்வாறு தெற்கு நோக்கி ராஜகோபுரம் அமைந்திருந்தால் அத்தலத்தை பரிகார தலம் என்பார்கள. ராஜகோபுரத்தில் இருக்கும் நவக்கிரகங்கள், அட்டதிக்கு பாலகர்கள் ஆகியோர், அம்பாளுக்கு எதிரில் கட்டுப்பட்டு இருக்கின்றனர். அதனால் திருமண தோஷம் ,நவக்கிரக தோஷம் ,சத்ரு தோஷம் ,வாஸ்து தோஷம் ஆகியவைகளுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகின்றது.
திரிசூலம் திரிசூலநாதர் கோவில்
அபூர்வ கோலத்தில் கோலத்தில்அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி
சென்னை விமான நிலையம் எதிரில் அமைந்துள்ள திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திரிசூலநாதர் கோவில். கோவிலின் பிரதான அம்பிகையான திரிபுரசுந்தரி அம்மன் தனிச் சன்னதியிலும், மற்றொரு அம்பிகையான சொர்ணாம்பிகை மூலவர் திரிசூல நாதரின் கருவறையிலும் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில், தட்சிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, தனது இடது காலை குத்திட்டு வைத்திருக்கிறார். வழக்கமாக அவர் ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் நிலையிலிருந்து மாறுபட்டு இப்படி இடது காலை குத்திட்டு அமர்ந்திருப்பது ஒரு அபூர்வ காட்சியாகும். இப்படி அமர்ந்திருக்கும் கோலத்தினால், அவர் வீராசன தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மேலும் வலது செவியில் மகர குண்டலமும், இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவதால் தட்சிணாமூர்த்தி, இங்கே அர்த்தநாரீஸ்வர கோலத்தில் வீற்று இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள், வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் இல்லாமல், சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இதுவும் ஒரு அபூர்வமான அமைப்பாகும்.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு சீர் வரிசை கொண்டு வந்த நந்தியம்பெருமான்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி, மாதங்கி. இக்கோவிலில் வேறு எந்த தலத்திலும் காண முடியாத வகையில், அரிய நிலையில் இரண்டு நந்திகள் எழுந்தருளிய உள்ளன. இவைகள் முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றில் மதங்க நந்தி இறைவனை பார்த்தபடியும், மற்றொரு நந்தியான சுவேத நந்தி கோவில் வாசலை பார்த்தபடி திரும்பியும் இருக்கின்றது. இதனை நந்தி, சிவ பார்வதி திருமணத்திற்கு சீர் பொருட்களை கொண்டு வந்த கோலம் என்கிறார்கள். இதன் பின்னணியில் சுவையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.
மதங்க முனிவரின் மகளாக அவதரித்த பார்வதிதேவி மாதங்கி என்ற திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தக்க வயது வந்ததும், மதங்க முனிவர் தம் மகளை சிவபெருமானுக்கு முடிக்க எண்ணினார். சிவபெருமான், மாதங்கியின் திருமணம் திருநாங்கூருக்கு அருகில் உள்ள திருவெண்காட்டில் நடந்தது. சிவபெருமான் திருமணத்திற்காக மதங்கரிடம் சீர் எதுவும் வாங்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் உட்பட அனைவரும் மதங்கர் சீர் தராத்தை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தி பேசினர். அவர்களது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், தட்சணை வாங்குவது தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினார். ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே சிவபெருமான் அவர்களிடம் "மாதங்கியை மணப்பதால் அவள் வேறு, நான் வேறு இல்லை. எங்கள் இருவர் பொருளும் ஒன்றுதான்" என்று சொல்லி, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும் பகுதியை நந்தியை அனுப்பி எடுத்து வரும்படி கூறினார். அதை பார்வதிக்கு கொடுத்தார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோவிலில் முன்னும், பின்னுமாக திரும்பியபடி இரண்டு நந்திகள் இருக்கின்றன. பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகம் நடக்கின்றது. அந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்
ராஜபோக வாழ்க்கை அருளும் ராஜமாதங்கி அம்மன்
சென்னையில் இருந்து 45 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோவில். கோவிலுக்குள் நுழைந்தவுடன் விநாயகரை தரிசித்து விட்டு செல்லும்போது தனி சன்னதியில் நமக்கு காட்சி தருபவள் ஸ்ரீ சர்வ சந்தோஷ சக்தி மாதங்கி அம்மன். இவள் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகின்றாள். மாதங்கி அம்மனை வணங்கிவிட்டு தான், கருவறையில் உள்ள பவானி அம்மனை வணங்கத் செல்ல வேண்டுமென்பது ஐதீகம். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கையில் இருக்கும் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக உருவெடுத்தது என்றும் கூறப்படுகிறது.
குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத் தருவதால் இந்த அம்மனுக்கு ராஜமாதங்கி என்ற சிறப்பு பெயர் வந்தது. கலைமகள், மலைமகள், அலைமகள் என மூவரின் அம்சமும் கொண்டவள் ராஜ மாதங்கி. அம்மன் ஒரு கரத்தில் வீணையும் , மறுகரத்தில் கிளியுடனும் காட்சி தருபவள். வீணையின் அம்சம் கலைகளில் வெற்றியும் , கிளியின் அம்சம் வாக்கு வன்மையும் குறிக்கும் . மதுரை மீனாட்சி அன்னையே ராஜ மாதங்கியின் அம்சம்தான் என்பதால், மீனாட்சியை வணங்குவதே, ராஜ மாதங்கியை வணங்குவது போல்தான். இதனால் அரச பதவி வேண்டுவோர், அன்னை ராஜ மாதங்கியை முக்கிய தெய்வமாக எண்ணி வழிபடத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை தோறும். ராஜமாதங்கி அம்மனை வழிபட்டால் கலைகளில் மேன்மையும் , ராஜபோக வாழ்க்கையும் கிடைக்கும். இந்த அம்மனை நாம் மனதில் உருகி வழிபட ,செல்வத்திற்கு அதிதேவதையான குபேரரின் கடைக்கண் பார்வையை பெற்றுத்தருவதற்கும்,கல்வி, கலை ,ஞானம்,வீரம் ஆகிய கலைகளில் சிறந்து விளங்குவதற்கும் பாக்கியம் கிட்டும்.
சிந்துப்பட்டி வேங்கடேச பெருமாள் கோவில்
துளசி, தீர்த்தம் ஆகியவற்றோடு விபூதியும் பிரசாதமாக தரப்படும் பெருமாள் தலம்
திருமங்கலம்- உசிலம்பட்டி சாலையில், 18 கி.மீ. தொலைவில் உள்ள சிந்துப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது வேங்கடேச பெருமாள் கோவில். 1000 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீவேங்கடாசலபதி. தாயார் அலர்மேல் மங்கை. திருப்பதியில் உள்ளது போன்ற அமைப்புடன் இக்கோவில் விளங்கினாலும்,. பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி என உபயநாச்சிமாரோடு காட்சி தருகிறார். இக்கோவிலில் துளசியும், தீர்த்தமும் பிரசாதமாக கொடுப்பதோடு விபூதியும் பிரசாதமாக தருவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
வெங்கடேச பெருமாள் இத்தலத்தில் எழுந்தருளிய வரலாறு
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப் பிறகு, திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சந்திரகிரிக் கோட்டை பகுதி,சுல்தான்கள் வசமானது. அப்பகுதி மக்கள் சுல்தான்களால், பல்வேறு கொடுமைகளை அனுபவித்தனர். பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, அந்தப்புரத்தில் தள்ளினார்கள். சுல்தான்களின் அந்தப்புரத்தில் அவதியுறுவதை விரும்பாத சில குடும்பங்கள், இரவோடு இரவாக நாட்டை விட்டுக் கிளம்பி தெற்கு நோக்கிச் சென்றன. அப்போது, தாங்கள் பூஜித்து வந்த வேங்கடாசலபதி பெருமான், ஸ்ரீதேவி- பூதேவி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர். வைகை ஆற்றையும் தாண்டி தொலைவுக்குச் சென்றுவிட வேண்டும் என்பது அவர்கள் எண்ணம். வழியில், ஒரு கிராமத்தில் அன்று இரவு தங்க நேர்ந்தது. தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை ஓர் இடத்தில் வைத்தனர்.
பொழுது விடிந்ததும், பெருமாள் உற்சவ விக்கிரகங்களை வைத்திருந்த பெட்டிகளை தூக்க முயன்றனர். ஆனால், அந்தப் பெட்டிகளை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், பெட்டிகளை அங்கேயே வைத்துவிட்டு அங்கேயே தங்கினர். அன்று இரவு, அந்தக் குழுவிலிருந்த பெரியவர் ஒருவரின் கனவில் பெருமாள் காட்சி தந்தார். ''நீங்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம். இந்தப் பகுதி மக்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். நான் உங்களைக் காப்பேன். நாளை காலை பெட்டியிலிருந்து ஓர் அங்கவஸ்திரத்தை கருடன் தூக்கிச் சென்று கண்மாய்க்குக் கீழ்ப்புறத்தில் உள்ள ஒரு புளிய மரத்தில் போட்டுவிட்டு, மூன்று முறை குரல் எழுப்பிச் செல்லும். அந்த இடத்தில் என் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புங்கள்' என்று சொல்லி மறைந்தார். பெரியவர், தனது கனவு பற்றி அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, எல்லோரும் பெருமாளின் திருவருளை வியந்து போற்றி விடியலுக்காகக் காத்திருந்தனர்.
மறுநாள் காலையில், கனவில் பெருமாள் சொன்னது போல், வானத்தில் வட்ட மிட்ட கருடன், பெட்டியில் இருந்த அங்கவஸ்திரத்தைத் தூக்கிச் சென்று, சற்று தொலைவில் இருந்த புளிய மரத்தில் போட்டது. அந்த இடத்திலேயே விக்கிரகத்தை வைத்து, தேவியர் சகிதராக பெருமாள் மூலவரையும் பிரதிஷ்டை செய்து, கோவிலும் எழுப்பினர். புளியம்பழத்தை தெலுங்கில் சித்தப்பண்டு என்பர். புளிய மரத்தின் அருகே கோவில் அமைந்ததாலும், அங்கவஸ்திரம் புளியமரத்தில் விழுந்து இடத்தைக் காட்டிக் கொடுத்ததாலும், அந்த இடத்தை சித்தப்பண்டூர் என்றார்களாம். அதுவே பின்னாளில் சிந்துப்பட்டி என்றானது. மேலும், இங்குள்ளோர் பெருமாள் மீது சிந்துப் பாடல்கள் நிறைய பாடியிருக் கிறார்களாம். அதனாலும் சிந்துப்பட்டி என்று பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள்.
கொடிமரமும் விபூதி பிரசாதமும்
கோவில் கொடிமரம் சற்று வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக பெருமாள் கோவில்களில், கருடக் கொடியுடனும், கொடி மர உச்சியில் கூப்பிய கரங்களுடன் கருடன் இருப்பது போலும்தான் கொடிமரம் இருக்கும். ஆனால் இங்கே, கொடிமரத்தில் கருப்பண்ணசாமி ஆவாகனம் செய்யப்பட்டுள்ளார். அதனால், இந்தக் கொடிமரத்தின் கீழே விபூதி பிரசாதம்தான் கொடுக்கப்படுகிறது. பக்தர்கள் இந்தக் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் செய்விப்பதாக வேண்டிக் கொண்டு, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெறுகிறார்கள். இதற்கு 'கம்பம் கழுவுதல்' என்று பெயர். விளக்கெண்ணெய் மற்றும் தயிர் கலந்து, கொடிமரத்தின் மேல் உச்சியில் இருந்து தடவி, அதற்கு திருமஞ்சனம் நடக்கிறது. பிறகு, கொடி மரத்துக்கு மிகப் பெரிய வஸ்திரம் சார்த்தி, விபூதி அர்ச்சனை செய்யப்படுகிறது. அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பிரார்த்தனை
திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்ச்சை செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், ஏதாவது அசௌகரியத்தால் திருப்பதி செல்ல முடியாமல் போனால், அதை இங்கே நிறைவேற்றிக் கொள்ளலாம். பெருமாளும் திருப்பதி பகுதியில் இருந்து வந்தவர் என்பதால், இந்தத் தலம் தென்திருப்பதி என்றே போற்றப்படுகிறது. பெருமாளை அங்கப் பிரதட்சிணம் செய்து, இந்திரன் சாப விமோசனம் பெற்றதால், இங்கே அங்கப்பிரதட்சிணம் செய்து, தங்கள் பாவங்கள் நீங்க பிரார்த்திக்கிறார்கள் பக்தர்கள். கம்பத்துக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால், குழந்தைப் பேறு உண்டாகும்; தடைபெற்ற திருமணம் நடந்தேறும்; தொலைந்துபோன பொருள்கள் உடனே கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. புதுமணத் தம்பதியர், அந்த வருடத்தில் வரும் விஜயதசமித் திருநாளில் இங்கே வந்து, நோன்பு எடுத்து, அர்ச்சனை செய்து, பெருமாள்,தாயாரை வழிபட்டு செல்கிறார்கள். இதை மகர் நோன்பு என்கிறார்கள். இந்தப் பழக்கம் இப்போதும் பரம்பரையாக இந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.
வாராப்பூர் அகத்தீசுவரர் கோவில்
கைகள் கட்டப்பட்ட நிலையில் அருள் பாலிக்கும் ராகு, கேது பகவான்
புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வாராப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் அகத்தீசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தராம்பிகை. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
இக்கோவிலில், ராகு பகவான், கேது பகவான் ஆகிய இருவரும் ஒரே திருமேனியாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். இத்தலத்து இறைவன், பக்தர்களின் ராகு கேது தோஷம் நீங்கும் வகையில் அருள்பாலிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதால், அவரது ஆணைக்கு கட்டுப்பட்டு, கைகளை கட்டிக்கொண்டு அருள் பாலிக்கிறார்கள். இதனால் இக்கோவில், காலசர்ப்ப தோஷம், நாக தோஷம் நீங்க வழிபட வேண்டிய சக்தி வாய்ந்த பரிகார தலமாக விளங்குகின்றது. இத்தலத்தில் வழிபட, திருமண தடை விலகும். குழந்தை பாக்கியமின்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீராத நோய்கள் குணமாகும். வயிறு வலி குணமாகும். ராகு கேது பரிகாரத்திற்கு காளஹஸ்தி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம்.
கந்தர்வகோட்டை கோதண்டராமர் கோவில்
சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் மூன்று தினங்கள் ராமபிரானை வழிபடும் அபூர்வ காட்சி
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வ கோட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது கோதண்டராமர் கோவில். 1000 ஆண்டுகள் பழமையானது. பல சிவாலயங்களை கட்டிய கண்டராதித்த சோழ மன்னன், ராமாயண நாம கீர்த்தனை கேட்டு, அதனால் ராமபிரான் மேல் பக்திக் கொண்டு கட்டிய கோயில் இது.
கருவறையில் ஸ்ரீ கோதண்ட ராமர் சீதா தேவி, லட்சுமணர் சமேதராக காட்சியளிக்கிறார். சில கோவில்களில் சூரிய பகவான் வருடத்தின் ஒரு சில நாட்களில் மட்டும் கோவில் மூலவரை வழிபடுவது போல் அமைத்திருப்பார்கள். ஆனால் இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் காலையில் சூரியனின் ஒளி கோதண்ட ராமரின் காலை தொட்டு செல்கிற செல்கிற முறையில் சோழர்கள் காட்டியுள்ளது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பிரார்த்தனை
இந்த ராமரை தரிசித்தாலே நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இக்கோவிலில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி வழிபட்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் நெய்விளக்கேற்றி, திருமஞ்சனம் செய்து தயிர் சாதம் அல்லது வடைமாலை சாற்றி வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும். எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி. இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, . ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.
பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.
திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை
திருமணத் தடை உள்ளவர்கள்அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்
சகல செல்வங்களையும் தந்தருளும் சொர்ண ஆகர்ஷண பைரவர்
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில். தாயாரின் திருநாமம் கல்யாண சௌந்தரவல்லி.
அஷ்ட பைரவர்களில், சொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோவிலில், சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும். இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து வழிபாடு செய்கின்றனர். அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சார்த்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம்; தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம். தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறும். அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்னைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
கோடியக்காடு அமிர்தகடேசுவரர் கோவில்
அமுதக் கலசம் ஏந்திய அபூர்வ முருகன்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் கோடியக்கரை அமிர்தகடேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மைத்தடங்கண்ணி. கோவில் இருக்கும் இடம் கோடியக்காடு என்றும் கடற்கரை பகுதி கோடியக்கரை என்றும் அழைக்கப்படுகிறது. நவகோடி சித்தர்கள் இன்றும் இத்தலத்தில் வாழ்வதாக நம்பப்படுகிறது.
இத்தலத்து முருகன், மூலவர் அமிர்தகடேசுவரரை விட சிறப்பு வாய்ந்தவர். அவருடன் வள்ளி , தெய்வானை ஆகிய இரண்டு தேவிகளும் இருக்கின்றனர். சுப்பிரமணியர் விக்கிரகம் மிகவும் அழகானது. சுப்பிரமணியர் ஒரு முகமும் ஆறு கைகளும் கொண்டு காட்சி தருகிறார். தன் இடது கையில் அமுத கலசத்துடன் இவர் காட்சி தருகிறார். மற்ற கரங்களில் நீலோத்பலம்,பத்மம், அபயம், வச்சிரம், வேல் முதலியவை ஏந்தியவாறு உள்ளார். இவ்வாறு அமுத கலசத்துடன் உள்ள முருகப் பெருமானை வேறு எங்கும் காண முடியாது. இவருக்கு குழகேசர் என்ற! பெயரும் உண்டு. திருவாசி, மயில், முருகர் மூன்றும் ஒரே கல்லால் உருவானது. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார் இந்த முருகப்பெருமான் 'அமிர்தகரசுப்பிரமணியர்' என்றும் 'கோடிக்குழகர்' என்றும் அழைக்கப்படுகின்றார் .
தேவர்களும் அசுரர்களும் இந்த திருப்பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது .இந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார் வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினார். அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார். அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனர்.எனவே இத்தலத்தில் அருளும் முருகப்பெருமான் தன்னுடைய கரங்களில் நீலோற்ப மலரையும் அமிர்தத்தையும் தாங்கியபடி அருள் பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத்துளிகள் சிவலிங்கமாக உருவானது. அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேசுவரர் ஆவார்.
கோடியக்காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான், சேது பந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனை பெறலாம் என்கிறார்கள். எனவே இது ஆதி சேது என்று போற்றப்படுகிறது. ஆடி, தை மாத அமாவாசைகளில் கடலில் நீராட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பிரார்த்தனை
சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்த தேனை பருகினால் சிறந்த பலனை பெறுகின்றனர். சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமான அபிஷேகம் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொடர்ந்து ஆறு சஷ்டி திதியில் விரதம் இருந்து இத்தல முருகனுக்கு ஆறு நிறத்தில் உள்ள மலர்களை சூட்டி ஆறு நைவேத்தியங்களை படைத்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். இங்கு வழிபட்டால் பித்ரு தோஷம் விலகும்.