அஸ்திரபுரீஸ்வரர் கோவில்
சங்கீத விநாயகர்
செங்கல்பட்டு அருகில் உள்ள ஆனூர் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது, அஸ்திரபுரீஸ்வரர் கோவில், இத்தலத்து இறைவன் அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் ஏற்பட்டது. இக்கோவிலின் மதிலில் சங்கீத விநாயகரைத் தரிசிக்கலாம். இந்த விநாயகர் அமர்ந்த நிலையில் வலக்கையால் தொடையில் தாளம் போடும் பாவனையில் அருள்கிறார். இவரை தொடர்ந்து ஏழு நாள்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சங்கீதக் கலையில் சிறப்படையலாம் என்பது நம்பிக்கை.
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
பஞ்சமுக விநாயகர்
பொதுவாக விநாயகர் அரசமரத்தடியில்தான் அமர்ந்து அருள்பாலிப்பார். ஆனால், கோவை மருதமலையில், முருகன் கோயிலுக்கு அருகில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கின்றன. இம்மரங்களுக்கடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர்தான் பஞ்சமுக விநாயகப் பெருமான். நடைப்பயணமாக மருதமலையேறி வருவோர் இந்த விநாயகரைத் தாண்டிதான் முருகன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும்.
விநாயகருக்கு ஐந்து முகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருப்பதும். வலம்புரி இடம்புரி துதிக்கைகள் இருப்பதும் சிறப்பு அம்சமாகும். பஞ்சமுக விநாயகர் பஞ்ச விருட்சத்தின் கீழ் காட்சி தருவது காணக்கிடைக்காத ஒன்றாகும். இந்த விருட்சத்தின்கீழ் அமர்ந்து தியானம் செய்யும்போது இதன் காற்று பல்வேறு பிணிகளைத் தீர்க்கும் வல்லமை பெற்றது என்பதும், பாம்பாட்டி சித்தர் உள்பட பல்வேறு சித்தர்களும் இங்கு தவம் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.
முருகனுக்கரிய விழா தினங்களிலும், விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு பூஜை. ஆராதனைகள் வெகுவிமர்சையாக நடைபெறுகின்றது.
ஈச்சனாரி விநாயகர் கோவில்
தன் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்த விநாயகர்
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னயில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இங்கு விநாயகர் அருள்பாலிப்பதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது.இங்குள்ள மூலவர் சிலையை பேரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து கொண்டு வந்தனராம். வழியில் வண்டியின் அச்சு முறிந்து தற்போது கோவில் இருக்கும் இடத்தில் நின்று விட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் வண்டியை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. பின்னர் விநாயகர் இவ்விடத்திலேயே இருக்க விரும்புகிறார் என எண்ணி அங்கேயே கோவிலை நிர்மாணித்தனர். ஈச்சனாரி எனும் இடத்தில் வாசம் செய்வதால் ஈச்சனாரி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.கோவையில் புதிதாக வாகனங்களை வாங்குவோர் தங்கள் வாகனங்களுக்கு முதல் பூஜை போடுவது இங்குதான் என்பது சிறப்பம்சமாகும.
காயாரோகணேஸ்வரர் கோவில்
நாக தோஷம் போக்கும் நாகாபரண விநாயகர்
நாகப்பட்டினத்தில் உள்ள காயாரோகணேஸ்வரர் கோவிலின் நுழைவாசலில், நாகாபரண விநாயகர் தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே ஐந்து தலை நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இவர் நாகத்தையே தன்மார்பினில் பூணூலாகவும், இடையில் கடி சூத்திரமாகவும் அணிந்திருக்கிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, 'நாகாபரண விநாயகர்' என்று பெயர் வந்தது.
சர்ப்ப ராஜன் தனக்கிருந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய இத்தலத்து இறைவனை வழிபட வந்தபோது,முதலில் இந்த நாகாபரண பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அவருக்கு பூஜை செய்தான். பின்னர் காயாரோகணரை வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தான்.
சர்ப்ப ராஜனே பிரதிஷ்டை செய்து வணங்கிய விநாயகர் இவர் என்பதால், ராகு-கேது சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்தும் இவரை வழிபடுவதால் விலகும். கால சர்ப்ப தோஷம், நாகதோஷம், களத்திர சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
பொய்யாமொழி பிள்ளையார் கோவில்
லிங்கத்தில் காட்சி தரும் விநாயகர்
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் உள்ள தலம் தீவனூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் பொய்யாமொழி பிள்ளையார் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். அதனால் இவருக்கு கணபதி லிங்கம் என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர்களில் இவரும் ஒருவர.பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவருக்கு மூன்று வாகனங்கள் இருக்கின்றன. லிங்க ரூபத்தில் இருப்பதால் நந்தி ஒரு வாகனம், வழக்கமான மூஞ்சூறு இரண்டாவது வாகனமாகவும், யானை தலையர் என்பதால் யானை மூன்றாவது வாகனமாகவும் உள்ளன. விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வழிபடுகின்றனர். இத்தலத்தோடு தொடர்புடைய அதிசய நிகழ்ச்சிகள் ஏராளம். அவற்றில் சில
கொம்பு முளைத்த தேங்காய்
ஒருசமயம் இக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த பக்தர் ஒருவர், மரக்காணத்தில் இருந்த தென்னந்தோப்பில் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று பரிகாசம் செய்து அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது.
மிளகு உளுந்தாகிய அதிசயம்
மிளகு வணிகர் ஒருவர், பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இக்கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில் நிர்வாகிகள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், 'மூட்டையில் உளுந்துதான் இருக்கிறது. என்னிடம் மிளகு இல்லை' என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விட்டது.
காரண விநாயகர் கோவில்
கருவறையில் விநாயகரும் நந்தியும் சேர்ந்து காட்சி தரும் தலம்கோயம்புத்தூர் மாவட்டம் காரமடையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மத்தம் பாளையத்தில் அமைந்துள்ளது காரண விநாயகர் கோவில். ஏதோ ஒரு காரணத்தால் விநாயகர் இந்த இடத்தில் அமர்ந்ததால் காரண விநாயகர் என அழைக்கப்படுகிறார். கருவறையில் விநாயகரின் அருகில் நந்தி இருப்பது ஒரு அரிதான காட்சியாகும். காரண விநாயகரின் சந்நிதி அருகில் அவரது தம்பியான காரண முருகனும், மாமாவான பெருமாளும், ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவில், கால்நடைகளின் விருத்திக்காகவும், நோயற்ற வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை தலமாக விளங்குகிறது.
சௌந்தரநாதர் கோவில்
பக்தனுக்காக நைவேத்தியத்தை சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார்சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோயில் செல்லும் வழியில் 18 கி.மீ. தூரத்தில், தேவாரத்தலமான திருநாரையூர் உள்ளது. இறைவன் திருநாமம் சௌந்தரநாதர். இறைவி திரிபுரசுந்தரி..தேவாரப் பாடல்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி இத்தலத்தில் பிறந்தவர். இவரது தந்தை சௌந்தரநாதர் கோவிலில் உள்ள பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்வார். ஒருமுறை, தந்தை வெளியூர் சென்று விட்டதால், நம்பி கோயிலுக்கு பூஜைக்கு கிளம்பினார். பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின், அவரைச் சாப்பிடும்படி வற்புறுத்தினார். பிள்ளையாரோ அமைதியாக இருந்தார். மனம் வருந்திய நம்பி, பிள்ளையாரின் மடியில் முட்டி அழுதார். நம்பியாண்டார் நம்பியின் உண்மையான பக்திக்கு மகிழ்ந்த பிள்ளையார் அவர் கொண்டு வந்த சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டார். இந்த தகவலைக் கேள்விப்பட்ட மன்னன் ராஜராஜசோழன் இதை நம்பவில்லை. இருப்பினும், நம்பியின் பேச்சை ஏற்று, பலவகையான பலகாரங்களுடன் கோயிலுக்கு வந்து, பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்யச் சொன்னான். பிள்ளையார் சாப்பிடவில்லை. உடனே நம்பி பக்தியுடன் அவர் மீது பாடல்களைப் பாடினார். இதுவே இரட்டை மணிமாலை என்று பெயர் பெற்றது. பாடல் கேட்டு மகிழ்ந்த பிள்ளையார், தன் பக்தன் அவமானப் படக்கூடாதே என்பதற்காக நைவேத்யத்தை அனைவர் முன்னிலையிலும் சாப்பிட்டார். இந்த பிள்ளையார் சிலை உளியால் செதுக்கப்படாத சுயம்பு விநாயகர் என்பதால் பொள்ளாப் பிள்ளையார் எனப்பட்டார். பொள்ளா என்றால் செதுக்கப்படாத என்பது பொருள். காலப்போக்கில் இது பொல்லாப்பிள்ளையார் ஆகி விட்டது.
ஜலகண்டேஸ்வரர் கோவில்
ஜலகண்டேஸ்வரர் கோவில்
தவழும் குழந்தையாக காட்சி தரும் விநாயகர்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை விநாயகர், பார்ப்பவரை பரவசம் அடைய செய்பவர். தவழும் கண்ணனைப் போல, இங்கு துதிக்கையில் கொழுக்கட்டையுடன், தவழ்ந்தபடியே பின்புறம் திரும்பிப் பார்க்கும் கோலத்தில் அமைந்துள்ளார் விநாயகர்."
கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
தன்னைத்தானே சங்கல்பம் செய்து கொண்ட விநாயகர்
மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் தலத்தில் சங்கல்ப விநாயகர் அருள் புரிகின்றார். ஒரே பீடத்தில் இரண்டு விநாயகர்கள் அருகருகே அமர்ந்து காட்சி கொடுக்கிறார்கள். ஒரு சமயம், பார்வதி தேவி சிவபெருமானப் பிரிந்து தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார். அதனால் இவருக்கு சங்கல்ப விநாயகர் என்ற பெயர் வந்தது. மேலும் இவர் ஆதி இரட்டை விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில், அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மொட்டை விநாயகர் கோவில்
வியாபார விநாயகர்
மதுரை கீழ மாசி வீதியில் அமைந்திருக்கும் மொட்டை விநாயகர் கோவில் மிகவும் பிரபலமானது. பாண்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. மதுரையின் மையப்பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்த பிள்ளையார் அமைந்துள்ளதால், இவரை வியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
ஒரு சமயம், அந்நியர் படையெடுப்பின்போது, மீனாட்சியம்மன் ஆலயத்தை சேதப்படுத்த திட்டமிட்டனராம்.அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்கு சென்று விட்டு, விபூதி பூசிக்கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளை திறப்பதைப் பார்த்து கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசை துண்டாக்கி, ஆற்றில் தூக்கி வீசினான்.பிறகு சிவனாரின் பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதே இடத்துக்கு வந்ததைக்கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச்சென்று விட்டான். அதனால், மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப்போற்றுகின்றனர் பக்தர்கள், புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்
தோப்புக்கரணம் போடும் வழிபாட்டு முறைக்கு வித்திட்ட விநாயகர்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் விகட சக்ர விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவர் காஞ்சிபுரத்தின் பிரதான விநாயகராக போற்றப்படுகிறார். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழிபாட்டு முறைக்கு இவர்தான் காரணகர்த்தர் ஒருசமயம் மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தை இவர் விழுங்கிவிட மஹாவிஷ்ணு இவர் முன் கூத்தாடி தோப்புக்கரணம் போட்டு சிரிக்க வைத்தபோது, சக்ராயுதம் வெளியில் வந்து விழுந்ததாம். இந்த விகடம் செய்ததால் இவருக்கு விகட சக்ர விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது.
வாலீஸ்வரர் கோவில்
காரிய தடையை நீக்கும் கணபதி
சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்செட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காரிய சித்தி கணபதி, தொந்தியில்லா கணபதியாகக் காட்சித் தருகிறார். பிரம்மனுக்கு அருளிய இவர், முக்கண்ணணாக ருத்திராட்ச மாலை,பரசு ஏந்தி ஓங்காரவடிவில் தாமரை மொட்டில் அமர்ந்துள்ளார். இவரை வணங்குவதால் நாம் எடுத்த காரியம் நல்லபடியாக முடியும். திருமணத்தடை, உத்தியோகத்தடை, பிள்ளைப்பேறு, போன்ற தடைகளுக்கு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது.
முத்தீசுவரர் கோவில்
மனித முகம் கொண்ட பிள்ளையார்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தேவாரத் தலமான திலதைப்பதி முத்தீசுவரர் கோவிலில் ஆதி விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கு பிள்ளையார் மனித முகத்துடன் காட்சி அளிக்கிறார்.அப்படி மனித முகத்துடன் கூடிய பிள்ளையாரை வேறு எங்கும் காணமுடியாது
ஆதிகேசவ பெருமாள் கோவில்
வீணை வாசிக்கும் விநாயகர்
பவானியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் பெண் விநாயகி உள்ளார். இங்கு நாம் விநாயகரை பெண் வடிவில் தரிசனம் செய்யலாம். விநாயகரின் இந்த தோற்றம் ஒரு அரிதான காட்சியாகும்.
வில்வ நாதேஸ்வரர் கோவில்
கனி வாங்கிய பிள்ளையார்
ராணிப்பேட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருவலம். விநாயகப் பெருமான் சிவபெருமான் பார்வதியை, வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகர் மாங்கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில், துதிக்கையில் மாங்கனியுடன் காட்சி தருகிறார். அதனால், இவரை கனி வாங்கிய பிள்ளையார் என்கின்றனர்.
மாணிக்கவண்ணர் திருக்கோவில்
கைகாட்டி விநாயகர்
திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத்தலம் திருநாட்டியாத்தான்குடி.இக்கோவிலின் கிழக்கு கோபுர வாயிலின் முன், விநாயகர் கை விரலை நீட்டியபடி, மேற்கு பார்த்த சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
ஒருசமயம் சுந்தரமூர்த்தி நாயனார், இத்தலத்து இறைவனை தரிசிக்க வந்தபோது, இறைவனையும் இறைவியையும் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க, அவர் வாய் திறந்து பேசாமல் ஈசான்ய திசையை நோக்கிக் கை காட்டினார். அவ்வழியே சென்று பார்த்த போது, அங்குள்ள ஒரு வயலில் சுவாமியும் அம்பிகையும் விவசாயிக் கோலத்தில், நடவு நட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதைக் கண்டு சுந்தரர், நடவு நட்டது போதும், கோவிலுக்கு வாருங்கள் என்று அழைக்க, சுவாமியும் அம்பிகையும் மறைந்து கோயிலுக்குச் சென்றனர்.
சுந்தரருக்கு இறைவன் இருந்த திசையை சுட்டிக் காட்டியதால் இத்தலத்து விநாயகருக்கு, கைகாட்டி விநாயகர் என்ற பெயர் வந்தது.
ஐராவதீஸ்வரர் கோவில்
விருச்சிக விநாயகர்
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆடுதுறை என்ற ஊரில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மருத்துவக்குடி என்ற தலத்தில் அபிராமியம்மை சமேத ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேவார வைப்புத் தலமாகும். இங்குள்ள விநாயகரின் திருமேனி தேளின் செதில் போன்ற அமைப்பில் இருப்பதால் இவரை ‘விருச்சிக விநாயகர்’ என்கின்றனர். விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து இவரை வணங்கி வழிபட்டால் நலம் பெறலாம்.
வேதபுரீஸ்வரர் கோவில்
வேதம் கேட்கும் விநாயகர்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருவேதிக்குடி. பிரம்மன்(வேதி) வந்து தங்கி சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம், திருவேதிக்குடி என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தன் நான்கு முகங்களால் நான்கு வேதங்களையும் அருளி செய்ததால்,அவருக்கு வேதபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இத்தலத்து விநாயகர், இடது காலை உயர்த்திக் கொண்டு, உள்ளே வேதபுரீசுவரரால் அருளப்படும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்து கூர்மையாக கேட்டுக் கொண்டிருக்கும் தோரணையில் இருக்கின்றார். அதனால் இவர், வேத விநாயகர் என்பதோடு செவி சாய்த்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
மீனாட்சி அம்மன் கோவில்
முக்குறுனி விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், எட்டடி உயரத்தில், நான்கு திருக்கரங்களோடு அமர்ந்த கோலத்தில் பிரமாண்டமாகக் காணப்படுபவர் முக்குறுனி விநாயகர். மதுரை தெப்பக்குளத்தில், திருமலை நாயக்கரால் கண்டெடுக்கப்பட்ட இந்த விநாயகருக்கு முக்குறுணி அரிசியில் பிரம்மாண்டமான கொழுக்கட்டை தயாரித்து படைக்கிறார்கள் (ஒரு குறுணி என்பது 6 படி. முக்குறுணி என்பது 18 படி) எனவே இவர் முக்குறுணி விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.
தாணுமாலயன் கோவில்
பெண் தோற்றத்தில் காட்சி தரும் விநாயகர்
பெண் தோற்றத்தில் காணப்படும் விநாயகரை விநாயகி, விக்னேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி என்ற பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள, சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில், ஒரு தூணில் விநாயகியின் சிற்பமுள்ளது. விநாயகி, அமர்ந்த கோலத்தில் வலக்காலை மடித்து, இடக்காலைத் தொங்கவிட்ட நிலையில் இருக்கின்றார். தலையில் வேலைப்பாடுடன் கூடிய அழகிய மகுடம் விளங்குகிறது. மேற்கைகளில் அங்குச, பாசம் உள்ளன. கீழ்க்கைகள் அபய, வரத ஹஸ்தங்களாக விளங்குகின்றன. கழுத்திற்குக்கீழ் பெண்ணுருவம் கொண்ட இவர், கழுத்தணியும், கால்களில் சிலம்புகளும், இடையில் புடவை அணிந்தும் காட்சி தருகிறார்.