பொய்யாமொழி பிள்ளையார் கோவில்
லிங்கத்தில் காட்சி தரும் விநாயகர்
திண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில், செஞ்சி செல்லும் சாலையில் உள்ள தலம் தீவனூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் பொய்யாமொழி பிள்ளையார் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். அதனால் இவருக்கு கணபதி லிங்கம் என்ற பெயரும் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர்களில் இவரும் ஒருவர.
பல நூறு ஆண்டுகளுக்கு முன், ஆடுமேய்க்கும் சிறுவர்கள் நெல் குத்த கல் தேடிய போது, யானைத்தலை வடிவில் ஒரு கல் கிடைத்தது. அது விநாயகரின் உருவம் போல் தெரியவே, அதை விநாயகராகக் கருதி பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயக வடிவைத் தரிசிக்கலாம். இவருக்கு மூன்று வாகனங்கள் இருக்கின்றன. லிங்க ரூபத்தில் இருப்பதால் நந்தி ஒரு வாகனம், வழக்கமான மூஞ்சூறு இரண்டாவது வாகனமாகவும், யானை தலையர் என்பதால் யானை மூன்றாவது வாகனமாகவும் உள்ளன.
விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி, மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வழிபடுகின்றனர்.
இத்தலத்தோடு தொடர்புடைய அதிசய நிகழ்ச்சிகள் ஏராளம். அவற்றில் சில
கொம்பு முளைத்த தேங்காய்
ஒருசமயம் இக்கோவிலுக்கு வந்து கொண்டிருந்த பக்தர் ஒருவர், மரக்காணத்தில் இருந்த தென்னந்தோப்பில் பொய்யாமொழி பிள்ளையாருக்கு உடைக்க என்று ஒரு தேங்காய் கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த தோப்புக்காரர்கள் 'பிள்ளையாருக்குத் தேங்காய் கொடுக்காவிட்டால் அவற்றுக்கு என்ன கொம்பா முளைத்துவிடும்' என்று பரிகாசம் செய்து அனுப்பிவிட்டனர். மறுநாளே தோப்பில் இருந்த எல்லாத் தேங்காய்களுக்கும் தும்பிக்கை போன்ற கொம்பு நிஜமாகவே முளைத்துவிட்டதாம். இதனால் பயந்துபோன தோப்பின் சொந்தக்காரர்கள் இந்தப் பிள்ளையாரை வேண்டி வணங்கித் தேங்காய்களை வழிபாட்டுக்குக் கொடுத்தார்களாம். கொம்பு முளைத்த தேங்காய்களில் ஒரு குலை இன்றும் இங்கு கட்டப்பட்டுள்ளது.
மிளகு உளுந்தாகிய அதிசயம்
மிளகு வணிகர் ஒருவர், பொதி மாடுகளின் மீது மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இக்கோயிலின் வழியே சந்தைக்குச் சென்றார். அப்போது இந்த கோயில் நிர்வாகிகள் விநாயகருக்குப் பொங்கல் நிவேதனம் செய்வதற்காக அவரிடம் கொஞ்சம் மிளகு கேட்டனர். அதற்கு வணிகர், 'மூட்டையில் உளுந்துதான் இருக்கிறது. என்னிடம் மிளகு இல்லை' என்று பொய் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னபடியே மூட்டைகளை அவிழ்த்துப் பார்த்தால் மிளகுக்கு பதில் உளுந்துதான் இருந்தது. வணிகர் கதறி அழுது விநாயகரிடம் மன்னிப்பு கேட்டதும் மீண்டும் மிளகாகி விட்டது.