தில்லை நடராசர் கோயில்
சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்
சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.
சகல தீர்த்தமுடையவர் கோவில்
விசேடத் தீர்த்தம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் சகல தீர்த்தமுடையவர்.இறைவி பெரியநாயகி. இத்தலத்து தீர்த்தமான கடலில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.