ஓதிமலை ஆண்டவர் கோவில்

முருகப்பெருமான் ஐந்து முகங்களோடு தோற்றமளிக்கும் அபூர்வ காட்சி

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பொறை. அங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஓதிமலை.

முருகன் கோவில் அமைந்த மலைகளிலேயே இந்த ஓதிமலைதான் மிகவும் உயரமான மலை. இது சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலையாகும். இந்த மலையில் ஏறி, முருகப்பெருமானை தரிசனம் செய்ய நாம், 1800 படிகளை கடந்து செல்ல வேண்டும்.

முருகப்பெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டான கதை

பிரம்மதேவனுக்கு, உயிர்களின் உருவாக்கத்திற்கு மூலமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் தெரியவில்லை. இதனால் அவரை, முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு பிரம்மன் செய்து வந்த படைப்புத் தொழிலை தானே இந்த ஓதிமலையிலிருந்து மேற்கொண்டார்.

படைப்புத் தொழிலை செய்து வந்த காரணத்தால், இந்தல முருகப்பெருமானுக்கு, நான்முகனின் நான்கு முகங்களோடு சேர்த்து மொத்தம் ஐந்து முகங்கள் உண்டு. ஐந்து முகத் தோற்றத்தில் அருளும் முருகப்பெருமானை வேறு எந்த தலத்திலும் காண முடியாது என்பது இந்த தலத்தின் கூடுதல் சிறப்பு.

ஒதி மலை என்ற பெயர் ஏற்பட்டதின் பின்னணி வரலாறு

முருகப்பெருமான் படைப்புத் தொழிலை செய்துவந்த கால கட்டத்தில், அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பது நியதி. எனவே தேவர்கள் அனைவரும் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அவரும் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்தார். எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்று அழைக்கப்பட்டது. அது இந்த ஓதி மலைக்கு அருகிலேயே இருக்கிறது. இரும்பறை என்பது மருவி இரும்பொறை என்று அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது இந்தப் பகுதி மக்களிடம் வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இருக்கிறது.

இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
Previous
Previous

கிருபா சமுத்திரப் பெருமாள் கோவில்

Next
Next

வில்வவனேசுவரர் கோவில்