இரும்பை மாகாளேசுவரர் கோவில்
மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது
முற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார் அவர் கிழக்கே வந்தபோது இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் 'மகாகாளநாதர்' என்ற பெயர் பெற்றார்.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் சிவலிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து மூன்று முகங்களுடன் இருக்கிறது இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர் இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூரத்திகளை குறிப்பிடுகின்றன. சிவபெருமானின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
மரக்காணம் பூமீசுவரர்கோவில்
நிலம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பூமீசுவரர்
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்து இறைவன் திருநாமம் பூமீசுவரர். இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. இத்தலத்திற்கு மரக்காணம் என்று என்று பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு சுவையான நிகழ்ச்சி உள்ளது. முன்னொரு காலத்தில் சிவபக்தர் ஒருவர் இத்தலத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். சிவபெருமான் முனிவராக உருவெடுத்து அந்த பக்தரின் இல்லத்துக்குச் சென்றார். முனிவரை வரவேற்று உபசரித்த சிவனடியார் அவருக்காக அறுசுவை உணவு தயாரித்தார். பின்னர் முனிவரைப் பசியாற அழைத்தார். உணவருந்துவதற்குமுன் சிவாலய தரிசனமும் பூஜையும் செய்வது வழக்கம் என்று அடியாரிடம் கூறினார் முனிவர் வடிவில் வந்த சிவபெருமான். அருகில் சிவத்தலம் ஏதும் இல்லாததால் செய்வதறியாது திகைத்த அடியார், பின்னர் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, தன்னி டமிருந்த நெல் அளக்கும் 'மரக்கால் படியை' குப்புறக் கவிழ்த்து, அதையே சிவலிங்கமாகக் கருதி, நீறு பூசி மலர்களால் அலங்கரித்து முனிவரை பூஜைக்கு அழைத் தார். முனிவரும் சிவபூஜையை இனிதே முடித்து, உணவருந்தி மகிழ்ந்து, அடியாரை ஆசீர்வதித்து விடைபெற்றார். அவர் சென்றதும், சிவனடியார் மரக்கால்படியை எடுக்க முயற்சி செய்ய, அதை அவரால் அசைக்கக்கூட முடியவில்லை. மரக்கால் படியைத் தரையிலிருந்து பெயர்த்தெடுப்பதற்காக உபகரணம் எடுக்கச் சென்ற அடியார் திரும்பி வந்தபோது, அந்த இடத்தில் மரக்கால் படியைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த சிவபக்தர் 'மரக் காலைக் காணோம்' என்று சத்தமிட்டபடி, அதைத் தேடிச் சென்றார். பின்னர் அந்த மரக்கால், கடற்கரை மணலில் சிவலிங்கமாகப் புதைந்திருப்பதைக் கண்டார். மெய்சிலிர்த்துப் போனவர், அதன் பின்னர் லிங்கத் திருமேனிக்கு தினமும் பூஜைகள் செய்து வழிபட ஆரம்பித்தார். மரக்கால் காணாமல் போய் பின்னர் சிவலிங்கமாக காட்சி அளித்ததால், இத்தலத்திற்கு மரக்காணம் என்ற பெயர் ஏற்பட்டது.
பூமியிலிருந்து சுயம்புத் திருமேனியாக வெளிப்பட்ட இந்த பூமீசுவரரை வழிபட்டால், நிலம் தொடர்பான பிரச்னைகளில் விரைவில் தீர்வுகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மரக்காணம் பூமீசுவரர்கோவில்
இரண்டு துவாரபாலகியருடனும், ஆறு கரங்களுடனும் காட்சியளிக்கும் அபூர்வ துர்க்கை
சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இறைவன் திருநாமம் பூமீசுவரர். இத்தலத்து இறைவியின் திருநாமம் கிரிஜாம்பிகை. இக்கோவில், தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு, சோழ மன்னன் ராஜராஜனால் கட்டப்பட்டது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்’ என்று குறிப்பிடுகின்றன. 'எயில்' என்பதும் 'சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு 'எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டது. இக்கோவிலில் வழக்கத்திற்கு மாறாக, அம்மன் முன் நந்தியும், சிவன் முன் பாவை விளக்கும் உள்ளது.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மன், நான்கு கைகளுடன், மகிஷாசுரன் தலையின் மேல் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், துர்க்கை அம்மன் இரண்டு துவாரபாலகிகள் உடன் இருக்க, தலைக்கு மேல் குடையுடனும், ஆறு கரங்களுடனும் மகிஷாசுரன் மேல் நின்ற கோலத்தில் இருப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
ஏமப்பூர் வேதபுரீசுவரர் கோவில்
மொட்டைத் தலையுடன், நின்ற கோலத்தில் இருக்கும் அபூர்வ பால விநாயகர்
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவார தலமான திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஏமப்பூர். இத்தலத்து இறைவன் திருநாமம் வேதபுரீசுவரர். இறைவியின் திருநாமம் பால குஜாம்பாள். தேவார வைப்புத் தலமான இக்கோவில், 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலில் நந்தி, மூலவரை நோக்கி இல்லாமல் கோபுர வாயிலை நோக்கி அமைந்திருப்பது சிறப்பாகும். கருவறை வாயிலில் இருக்கும் துவாரபாலகர்கள் சுதை வடிவில் இல்லாமல், கருங்கல் சிற்பமாக இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், கருவறையின் பின்புறம் லிங்கோத்பவர் தான் எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில், லிங்கோத்பவர் இருக்க வேண்டிய இடத்தில், சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவது, வேறு எந்த கோவிலிலும் இல்லாத ஒரு அமைப்பாகும்.
இக்கோவில் மகாமண்டபத்தில் எழுந்தருளி உள்ள விநாயகர் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பொதுவாக விநாயகர் தலையில் கிரீடத்துடனும், அமர்ந்த கோலத்திலும் காட்சி அளிப்பார். ஆனால் இக்கோவிலில், தலையில் கிரீடம் இல்லாமல் மொட்டைத் தலையுடனும், வலது கரத்தில் தந்தம், இடது கரத்தில் மோதகத்தையும் தாங்கி நின்ற கோலத்தில், பால விநாயகராகக் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.
பிரார்த்தனை
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய பரிகாரத்தலமாக இக்கோவில் விளங்குகின்றது. மேலும் தங்கள் ஜாதகத்தில், ஆயுள் ஸ்தானம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மரணபயம், எம்பயம் போக்கும் தலமாகவும் விளங்குகின்றது.
கோலியனூர் வாலீஸ்வரர் கோவில்
சப்த கன்னியருக்கு உபதேசம் செய்த 'கன்னியர் குரு' தட்சிணாமூர்த்தி
விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது கோலியனூர் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. கிஷ்கிந்தையின் அரசன் வாலி வழிபட்ட சிறப்பினை உடையது. அதனால் இறைவன் வாலீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
பொதுவாக தட்சிணாமூர்த்தி இறைவன் சன்னதி சுற்றுச்சுவரில், தனது நான்கு சீடர்களுடன் அருள் பாலிப்பார். ஆனால் இத்தலத்தில், தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். தட்சிணாமூர்த்தி சப்த கன்னியருடன் எழுந்தருளி இருப்பதற்கும் அம்பிகை மகிஷாசுரனை வதம் செய்ததற்கும் தொடர்புண்டு.
மகிஷாசுரன், கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென்ற வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால், தேவர்களை துன்புறுத்தினான். தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன், அம்பிகையிடம், மகிஷாசுரனை வதம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பிகை, தன்னிலிருந்து பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி என ஏழு சக்திகளைக் தோற்றுவித்தாள். "சப்தகன்னியர்' எனப்பட்ட இவர்கள் மகிஷாசுரனை அழித்தனர். இதனால் அவர்களுக்கு தோஷம் உண்டானது.
இந்த தோஷம் நீங்க, கயிலாயம் சென்று சிவனை வேண்டினர். .இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படியும், குறிப்பிட்ட காலத்தில் தோஷ நிவர்த்தி செய்வதாகவும்கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். அவர்களுக்கு விமோசனம் தந்து, சிவாலயங்களில் அம்பிகையின் காவலர்களாகவும் இருக்க அருள்பாலித்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில், சப்தகன்னியர் தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். சப்தகன்னியருக்கு அருளியவர் என்பதால் இவரை, "கன்னியர் குரு' என்று அழைக்கிறார்கள். வீரபத்திரர் சப்த கன்னியரின் பாதுகாப்பிற்காக இங்கு வந்தபோது, அவர் ரிஷபத்தில் வந்தார். இந்த நந்தி கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. நந்தி அருகில் கொடிமரம் உள்ளது.
பொதுவாக தட்சிணாமூர்த்தியை, வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்வார்கள். ஆனால், பக்தர்கள் இங்கு தினமும் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பிராமிக்கு உரிய அதிதேவதை பிரம்மா. எனவே, தலைவிதி சரியில்லை என வருந்துபவர்கள் மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவளை வழிபடுகிறார்கள். மகேசுவரிக்குரிய அதிதேவதை சிவன் என்பதால், முக்தி கிடைக்க சிவனுக்குரிய திங்கட்கிழமைகளில் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். கவுமாரிக்குரிய அதிதேவதை முருகன் என்பதால், இவளிடம் செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக வேண்டுகிறார்கள். குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக சனிக்கிழமைகளில் வைணவியையும், தீராத நோய்கள் விரைவில் குணமாக புதன்கிழமையில் வாராகியையும், தோஷ நிவர்த்தி பெற வியாழக்கிழமைகளில்
இந்திராணியையும், திருமணத்தடை நீங்க வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டியையும் வழிபடுகிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு கன்னியரையும் வணங்கும் போது அவர்களுடன், தட்சிணாமூர்த்திக்கும் நைவேத்யம் படைக்கிறார்கள். இதனால், தங்களின் குருவின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சப்தகன்னியர் அருளுவதாகச் சொல்கிறார்கள். பஞ்சமி திதியன்று, சப்தகன்னியருடன் உள்ள வீரபத்திரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
சேந்தமங்கலம் வானிலை கண்டீஸ்வரர் கோவில்
இசை ஒலி எழுப்பும் அபூர்வமான இசைக்குதிரைகள்
நம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் தாணுமாலாயன் கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய கோவில்களில் ஏழு ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்கள் இருக்கின்றன. இந்த இசைத் தூண்கள் நம் முன்னோர்களின் சிற்பத் திறனையும், அறிவியல் திறனையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. இந்த வரிசையில், இந்த இசைத் தூண் வேலைப்பாடுகளுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தில் உள்ள வானிலை கண்டீஸ்வரர் கோவிலில் இருக்கும் இசைக் குதிரைகள் விளங்குகின்றன.
உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 14 கிலோமீட்டரில் சேந்தமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது.
அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.
பெரிய சதுரவடிவ கருங்கல் பீடம், அதன் மீத தாமரை இதழ்களைக் கொண்ட மூன்றடுக்கு பீடம், அதன்மீது ஏறி அமர்ந்து தாவிச் செல்லும் கோலத்தில் குதிரை அமைந்துள்ளது. குதிரையின் கால்களில் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள், முதுகில் பட்டாடை விரித்த கோலம்; அதிலும் வேலைப்பாடுகள் கொண்ட தோற்றத்தில் மிளிர்கின்றது. கழுத்தில் மாலை, அழகிய மணிகளைக்கோர்த்த மணிமாலைகள், தலைக்கு அணிவரிசை, வாயில் கடிவாளம் என மொத்த குதிரையின் வடிவமும், கலைநயம் கொண்டு விளங்குகின்றது. சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது. இப்படி இசை ஒலி எழுப்பும் சிற்பங்களை மற்ற தலங்களில், நாம் காண்பது அரிது.
குமளம்பட்டு சீனிவாச பெருமாள் கோவில்
பக்தர்களுடன் அசரீரியாக பேசும் பெருமாள்
திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது குமளம்பட்டு சீனிவாச பெருமாள் கோவில். பெருமாள் எடுத்த தசாவதாரங்களில், மச்ச அவதாரத்திற்கு உரிய தலமாக இத்தலம் போற்றி வணங்கப்படுகின்றது. கருவறையில் பேசும் பெருமாளான சீனிவாசப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் பக்தர்கள் மனம் உருகி தம் குறைகளை கூறி வழிபட்டால், பக்தர்களின் கனவில் பெருமாள் தோன்றி குறைகளைப் போக்க அருள்புரிகின்றார். மேலும் வழிபடும் போதே அசரீரியாக பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பதால் பேசும் பெருமாள் என்று போற்றப்படுகின்றார்.
பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாள்
வாய் பேச முடியாத குழந்தைகள் ஒன்பது அமாவாசை தினங்கள் தொடர்ந்து இக்கோவிலில் நெய் தீபம் ஏற்றி , இப்பெருமானின் தீர்த்த பிரசாதத்தை அக்குழந்தைகளுக்கு அளித்தால், பேசாத குழந்தைகளையும் பேச வைக்கும் பேசும் பெருமாளாக அருள்புரிகின்றார்.
விபூதி பிரசாதம் தரப்படும் பெருமாள் கோவில்
இக்கோவிலில் பெருமாளுக்கு நைவேத்தியம் தயாரிக்கப்படும் அடுப்பிலிருந்து கிடைக்கப்பெறும் சாம்பலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
தெற்கு அகோபிலம் என்று போற்றப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில்
விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி அருகில் பூவரசன்குப்பம் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில். மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் அமிர்தவல்லி. பொதுவாக லட்சுமி நரசிம்மர் கோவிலில், தாயார் மட்டுமே நரசிம்மரை ஆலிங்கனம் செய்யும் நிலையில் காட்சி அளிப்பார். ஆனால், இந்த ஒரு கோவிலில் மட்டும்தான், நரசிம்மர் தாயாரை ஆலிங்கனம் செய்தபடி காட்சியளிக்கின்றார்.
இக் கோவில் தெற்கு அகோபிலம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்கிர அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள, தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தாயாரை நரசிம்மரும் நோக்க அவர் உக்கிரத்தை தாயார் அப்படியே உறிஞ்சிக் கொண்டு விட , நரசிம்மரின் கோபம் அடங்கியது. முனிவர்கள் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
இந்த லட்சுமி நரசிம்மபெருமாளை 48 நாட்கள் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால், கடன்தொல்லைகள் தீரும். பதவி உயர்வு வந்து சேரும். மற்றும் எதிரிகள் எல்லாம் நண்பர்களாகி விடுகிறார்கள் என்பது ஐதீகம்.
அந்திலி லட்சுமி நரசிம்மர் கோயில்
மகாவிஷ்ணு கருட பகவானுக்கு நரசிம்மராக காட்சி தந்த தலம்
விழுப்புரத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருக்கோவிலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள அந்திலி என்னும் ஊரில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்மர் கோயில்.
மகாவிஷ்ணுவின் நான்காவது அவதாரமாக, நரசிம்மர் அவதாரம் திகழ்கிறது. பெருமாள் நரசிம்மராக காட்சி தந்த எட்டு தலங்களில் இதுவும் ஒன்று.1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில், கருட வடிவில் இருக்கும் பாறையின் மேல் அமைந்துள்ளது. வருடத்தின் 365 நாட்களும், மூலவர் லட்சுமி நரசிம்மர் மீது சூரிய ஒளி படுவது தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மகாவிஷ்ணு தனது வாகனமான 'பெரிய திருவடி' என்று போற்றப்படும் கருட பகவானுக்கு, நரசிம்மராக மகாவிஷ்ணு காட்சி தந்த தலம் இது. மகாவிஷ்ணு நரசிம்மர் அவதாரத்தில் தூணில் இருந்து தோன்றி இரணியனை அழித்து பிரகலாதனை காப்பாற்றி தரிசனம் செய்தார். பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில், மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனைக் கூட அழைக்காமல் சென்றுவிட்டார். இதனால் பரமபதத்தில் உள்ள கருட பகவான், ஏன் தன் மேல் ஏறி மகாவிஷ்ணு செல்லவில்லை என்ற மன குழப்பத்தில் பூலோகம் வந்து, தென்பெண்ணை நதிக்கரையில் அமைந்த பாறையின் மீது உண்ணாமல் உறங்காமல் கடும் தவம் இருந்தார் , இதனால் மிகவும் பலசாலியான கருடன் பலவீனமாக மாறினார் அவரின் வெப்பம் பூலோகம் மற்றும் வைகுண்டம் வரை பரவியது எல்லாரும் நாராயணரிடம் முறையிட்டனர் ,நாராயணர் கருட பகவானுக்கு காட்சி தந்து உனக்கு என்ன வேண்டும் என்று வினவினார் , கருட பகவான் அவரிடம் குழந்தை பிரகலாதனுக்காக தூணில் இருந்து நரசிம்மராக வந்து காப்பாற்றினீர்கள் அந்த அவதாரத்தை தான் காணவேண்டும் என்றும் வேண்டினார். அவரின் விருப்பப்படி நாராயணர் லட்சுமி நரசிம்மராக காட்சி தந்தார்.
மத்வ சித்தாந்த மகான் இக்கோயிலின் சிறப்பை கேட்டு இக்கோயிலுக்கு விஜயம் செய்தார் , கருடவடிவில் உள்ள பாறையை கண்டு ஆச்சரியமுற்று, இக்கோயிலின் பின் புறத்தில் ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்தார் . இவரே மறுபிறவியில் ராகவேந்தரராக அவதரித்தார் .
பிரார்த்தனை
குடும்பத்தில் தொடர் பிரச்சனை, தீராத கடன் தொல்லை, திருமணத் தடை, தோஷம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து வர நன்மை நிகழும்.
பனையபுரம் பனங்காட்டீஸ்வரர் கோவில்
இறைவனுக்கும் அம்மனுக்கும் சித்திரை முதல் ஏழு நாட்கள் சூரிய பூஜை நடக்கும் அதிசயத் தலம்
சென்னை தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் விக்ரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் பனையபுரம். இறைவன் திருநாமம் பனங்காட்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் சத்யாம்பிகை. சிவனின் இடதுபுறத்தில் சற்று தொலைவில் அம்பிகைக்கு தனியாக ஆலயம் அமைந்துள்ளது. பனை மரத்தை தல விருட்சமாக கொண்ட ஐந்து தலங்களுள் இதுவும் ஒன்று.
சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூரும் ஒன்றாகும். அதனால் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால்,இறைவனையும் அம்மனையும் வழிபடுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இப்படி ஏழு நாட்கள் தொடர்ந்து இறைவனுக்கும் அம்மனுக்கும்
சூரிய வழிபாடு நடப்பது வேறு எந்த தலத்திலும் கிடையாது. சூரிய உதயத்தின் போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக்கதிர்களால் இராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி,மண்டபங்கள் இவற்றையெல்லாம் கடந்து, கருவறையில் வீற்றிருக்கும் இறைவனின் சிரசில் பட்டு வணங்குகிறது. இதன் பின் அது மெல்ல கீழிறங்கி சிவனின் பாதத்தை அடைகின்றது. பாதத்தைத் தொடும் அதேவேளையில் சற்று தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மன் சிரசின் மீதும் ஒளிக்கதிர்கள் விழுகின்றன. பின்பு அந்த ஒளி மெல்ல கீழிறங்கி அன்னையின் பாதத்தில் அடைவதுடன் அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகின்றது. வானவியல் சாஸ்திர நுட்பத்தை உணர்ந்து, கோவிலின் கட்டிட வடிவமைப்பை அமைத்திருப்பது, நம் முன்னோர்களின் புத்திக்கூர்மையையும், தொழில்நுட்பத்திறனையும் உலகத்துக்கு பறைசாற்றுகின்றது.
கண் கோளாறுகள் போக்கும் பரிகாரத் தலம்
புறாவுக்கு அடைக்கலம் தந்து தன் கண்களை அளித்த சிபி சக்ரவர்த்திக்கு காட்சி தந்து மீண்டும் இறைவன் கண்ணொளி தந்த தலம் இது. பனங்காட்டீசனின் மற்றொரு பெயர் கண்ணமர்ந்த நாயனார், நேத்தோதாரகேஸ்வரர் சுவாமி என்பது. இதன் பொருள் கண் கொடுத்த கடவுள் என்பதாகும். எத்தகைய பார்வைக்கோளாறு உள்ளவரும் இங்குள்ள இறைவனிடம் தஞ்சம் புகுந்தால் அவர்களது குறை நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின்நம்பிக்கையாக அமைந்துள்ளது.
குழந்தை வரம் அருளும் பனம் பழம்
இக்கோவிலில், தலமரமான பனை மரங்களில் ஆண் பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காலம் காலமாக காட்சி தருவது வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.