ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோவில்
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம் தந்து பிறவா நிலை தரும் பெருமாள்
திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. மூலவர் வைகுண்டநாதர் ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும்.தாயார் வைகுண்டநாச்சியார். உற்சவர் கள்ளபிரான் பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்.தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளன.
இந்த தலத்திலேயே, கைலாசநாதர் கோவிலும் உள்ளது. ஒரே ஊரில் கைலாசநாதர் கோவிலும், வைகுண்ட நாதர் கோவிலும் அமைந்திருப்பது வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
இந்த வைகுண்டநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்ற பெருமாள் கோவில்களை விட சற்று வித்தியாசமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வார்கள். அதே தருணம் மூலவர் வைகுண்ட பெருமாள் சன்னதியை அடைத்து விடுவார்கள். பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாண்டி நாட்டு நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.