தஞ்சாவூர் கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில்

நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில்

வருடம் முழுவதும் சொர்க்கவாசல் திறந்திருக்கும் ஒரே பெருமாள் கோவில்

தஞ்சாவூரில் தெற்கு வீதியில் அமைந்துள்ளது கலியுக வெங்கடேசப்பெருமாள் கோவில். கருவறைக்குள் மூலவர் கலியுக வேங்கடேச பெருமாள், நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி, கீழிரு கரங்களில் அபய, வரத முத்திரை காட்டி ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக காட்சி தருகிறார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டுமே சொர்க்கவாசல் திறந்திருக்கும். பெருமாள் கோவில்களில் எல்லாம், வடக்கு வாசல் என்பதுதான் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் என்ற பெயரில் திறக்கப்படும். மேலும் மூலவர் சன்னிதிக்கு நேராகத்தான் ராஜகோபுரமும், நுழைவு வாசலும் இருக்கும். ஆனால், இந்தக் கோவிலில் வடக்கு நோக்கி இருக்கும் மூன்று நிலை ராஜகோபுரம் ஒன்றுதான் ஒரே நுழைவு வாயில் ஆகும். இக்காரணத்தால், இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடதிசை ராஜகோபுரம் கொண்ட ஒரே பெருமாள் கோவில் இதுவாகும். வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக செல்ல இயலாத பக்தர்கள் ஆண்டு முழுவதும், தினமும் நித்திய சொர்க்கவாசல் வழியாக உள்ளே சென்று பெருமாளை தரிசனம் செய்து அதே சொர்க்கவாசல் வழியாக வெளியே வரலாம் . எனவே, இந்தத் தலம் நித்திய சொர்க்கவாசல் கொண்ட பெருமாள் கோவில் என்ற பெயரைப் பெற்றுள்ளது. இக்கோவிலில் நித்திய சொர்க்கவாசல் அமைந்ததன் பின்னணியில், ஒரு வரலாற்று நிகழ்ச்சி உள்ளது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் கனவில் தோன்றிய திருப்பதி வேங்கடேச பெருமாள், தஞ்சையில் தனக்கு வடக்கு நோக்கியபடி நித்திய சொர்க்கவாசல் போல நுழைவு வாசல் வைத்து ஒரு கோயில் கட்டு என பணித்தார். இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கலியுக வேங்கடேச பெருமாளாக எழுந்தருளி காட்சி தருவேன். இத்தலத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும் ,திருவோணம் நட்சத்திரம் மற்றும் வைகுண்ட ஏகாதசி அன்றும் நித்திய சொர்க்கவாசல் வழியாக வந்து என்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் வழியாக சென்ற பலனையும், வைகுண்ட பதவியும் தந்தருள்வேன் என்று கூறி மறைந்தார்.

இக்கோவிலை 12 முறை சுற்றி வந்து நல்லெண்ணெய் தீபம் இட்டு வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமை, தொழில் விருத்தி ஆகிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

நித்திய சொர்க்கவாசல் (பிரதான வாயில்)

 
Previous
Previous

இலஞ்சி குமாரர் கோவில்

Next
Next

காஞ்சிபுரம் ஐராவதேசர் கோவில்