தஞ்சைப் பெரிய கோவில்
நவக்கிரகங்கள் இல்லாத தஞ்சைப் பெரிய கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழன், 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் திராவிட கட்டிடக் கலையின் சிறப்புகளை உலகிற்கு உணர்த்தும் வரலாற்றுச் சின்னமாக திகழ்கின்றது. பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் பல சிறப்பு அம்சங்கள் இக்கோவிலில் உள்ளன.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள், ஒரு பீடத்திலோ அல்லது தனி சன்னதியிலோ எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் தஞ்சைப் பெரிய கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். சிவனே நவக்கிரக நாயகனாக இருப்பதால், பிற கோவில்களைப் போல் நவக்கிரகங்கள் அவைகளின் உருவில் இல்லாமல், கோயிலின் மேல் புற வட பகுதியில் லிங்க வடிவிலேயே காட்சி தருகின்றன. தமிழ்நாட்டில் கிரகங்கள் லிங்க வடிவில் காட்சி அளிப்பது இக்கோயிலில் மட்டுமே. மக்கள் தங்கள் குறைகளைக் களைய நவக்கிரகங்களுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களை இங்கு நவ லிங்கங்களுக்கு செய்து வழிபடுகின்றனர்.
தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சை பெரிய கோவில் நந்திக்கு மாட்டுப் பொங்கலன்று நடைபெறும் சிறப்பு பூஜை
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். இதன் எடை 20 டன் ஆகும். இந்த நந்தியம் பெருமான், ஆந்திர மாநிலத்தில் உள்ள லேபாக்ஷி கோவில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே 2வது பெரிய நந்தி ஆவார். ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தில், நந்தியம் பெருமானுக்கு பூஜைகள் மிகவும் சிறப்பாக நடக்கும். அப்போது 108 பசுக்களுக்கு 'கோ' பூஜை செய்யப்படும். பெருந்திரளான பக்தர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மிகவும் விஷேசமான இந்த பூஜையையொட்டி, நந்திககு ஒரு டன் எடையில் காய்கறிகள், பழங்கள், பலவகை இனிப்புகள், பலகாரங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்து பெருவுடையாருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சாவூர் தஞ்சபுரீசுவரர் கோவில்
குபேரன் இழந்த செல்வத்தை மீட்டெடுத்த தலம்
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது தஞ்சபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் தஞ்சபுரீசுவரர், இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. தன்னைத் தஞ்சமென்று வரும் அடியார்களைக் காப்பதனால், இறைவன் தஞ்சபுரீசுவரர் எனவும் அவர்களுக்கு ஆனந்தத்தை அள்ளித் தருபதால் அம்பிகைக்கு ஆனந்தவல்லி அம்மன் எனவும் பெயர் வந்தது.
அம்பிகையின் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபம் அஷ்டலட்சுமி மண்டபம் என்றே அழைக்கப் படுகிறது. இதன் சுவர்களில் மூன்று பக்கங்களிலும் வண்ணக்கோலத்தில் எட்டு லட்சுமிகளும் காட்சி தருகின்றனர். அதன் தென்கிழக்கு மூலையில் சிவலிங்கத்தை லட்சுமிதேவியும், குபேரரும் பூஜை செய்யும் காட்சி அமைந்துள்ளது.
இந்தத் திருத்தலத்தில்தான் வட திசைக்கு அதிபதியான குபேரன் தவமிருந்து, தான் இராவணனிடம் இழந்த அரும் பெரும் செல்வத்தையும், புஷ்பக விமானத்தையும் மீண்டும் பெற்றான் என்பது ஐதீகம். ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்தான் குபேரனுக்குச் சிவ தரிசனம் கிடைத்து, சிவபெருமானிடமிருந்து வரமும் கிடைக்கப்பெற்றது. எனவே இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஐப்பசி அமாவாசை அன்றும் குபேர யாகம் நடைபெறுகிறது. இப்போது ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று குபேர யாகத்துடன் அஷ்டலட்சுமி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள குபேரனுக்கும் மஹாலட்சுமிக்கும் மஹா அபிஷேகம் நிகழ்கின்றது
பிரார்த்தனை
அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும், செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். பண கஷ்டம், மன கஷ்டம், பணம் தொல்லை, சனி தோஷம், கடன்கள் நீங்க இக்கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். லட்சுமி குபேர யாகத்தில், பங்கேற்கும் பக்தர்களுக்குப் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதாக பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
தஞ்சாவூர் ராஜகோபால சுவாமி கோவில்
சக்கரத்தாழ்வார் மூலவராக எழுந்தருளி இருக்கும் அபூர்வக் கோவில்
தஞ்சை பெரிய கோவிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை மதன கோபாலப் பெருமாள் கோவில் என்றும்அழைப்பார்கள். எந்த ஒரு பெருமாள் கோவிலிலும் மூலவராக பெருமாள்தான் வீற்றிருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் மூலவராக சக்கரத்தாழ்வார், சுதர்சன வல்லி, விஜயவல்லி என்ற இரு தாயார்களுடன் எழுந்தருளி உள்ளார்.
பொதுவாக பெருமாள் கோவில்களில், சக்கரத்தாழ்வாருக்கு பின்புறம் நரசிம்மர் இடம்பெற்றிருப்பார். ஆனால் இங்கு சக்கரத்தாழ்வார் மூலவராக அமைந்துள்ளதால், நரசிம்மர் அதில் இடம் பெறாமல், கோவில் ராஜ கோபுரத்தின் பின்புறம் வலது பக்கத்தில் யோக நரசிம்மரும், இடது புறத்தில் கல்யாண நரசிம்மரும் புடைப்புச் சிற்பமாக அமர்ந்துள்ளனர். இந்த இரண்டு நரசிம்ம மூர்த்திகளும் நேர் பார்வையாக மூலவரான சக்கரத்தாழ்வாரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட அமைப்பு வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
மூன்று சக்கரத்தாழ்வார்கள்
இந்த கோவிலில் மூன்று சக்கரத்தாழ்வார்கள் இருப்பது மிகவும் சிறப்பானது. மூலவராக இருக்கும் சக்கரத்தாழ்வார் 16 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கின்றார். உற்சவரான சக்கரத்தாழ்வாரும் 16 திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். இதுமட்டுமல்லாமல் அஷ்ட புஜங்கள் அதாவது 8 கரங்களுடன் கூடிய சக்கரத்தாழ்வாரும் இந்த கோவிலில் இருக்கிறார். ஆலயத்தில் நடக்கும் சுவாமி புறப்பாட்டுக்காக மட்டும் இந்த சக்கரத்தாழ்வார் எழுந்தருளுவார்.
பிரார்த்தனை
இந்த ஆலய இறைவனை தரிசிக்க வேண்டும் எனில் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருந்தால் மட்டும் முடியும் எனக் கருதப்படுகிறது. மூலவர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் அவருக்கான 'ஓம் நமோ பகவதே மகா சுதர்ஸனாய நமஹ' என்ற காயத்ரி மந்திரத்தை, ஒன்பது முறை பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷங்கள் விலகும்.
சக்கரத்தாழ்வாரைத் தொடர்ந்து 9 மாதங்கள் சித்திரை நட்சத்திரம் அன்றும் அல்லது 9 வியாழக்கிழமைகள் அல்லது 9 சனிக்கிழமைகளில் 9 அகல் தீபம் ஏற்றி, 9 முறை வலம் வந்து சிலப்பு மலர்களால் மாலை சூட்டி, கற்கண்டு, உலர்ந்த திராட்சைகளை நிவேதனமாக வைத்து அரச்சனைகள் செய்து வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது இக்கோயிலின் ஐதீகம்.
முற்பிறவியிலும், இப்பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால் ஏற்படும் கெடுதிகள் யாவும் நீங்கும். நவக்கிரகத் தோஷப் போகும். திருமணத் தடைகள் விலகும்.
இவர், கல்வி தொடர்பான தடைகளை நீக்கிச் சரளமான கல்வி யோகத்தை அருள்பவர். மனச் சஞ்சலம், சித்தப் பிரமை, பேய் பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளிலிருந்து விடுபட செய்வார்.
தஞ்சாவூர் கோடியம்மன் கோவில்
சிவபெருமானை தன் தலையில் சூடியிருக்கும் கோடியம்மன்
தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது கோடியம்மன் கோவில். தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள்.
முன்னொரு காலத்தில், தற்போது கோடியம்மன் கோவில் இருக்கும் பகுதியானது தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. சிவபெருமானை வழிபட்ட தஞ்சன் என்ற அரக்கன் அவரிடம் பல வரங்களைப் பெற்றான். பின்னர் தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக ( (பவளம் – சிவப்பு நிறம்) மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது.
சிவனின் பிரதிநிதியாக வந்து அசுரனை அழித்ததால், கோடியம்மன் சிவபெருமானையே தனது தலையில் சுமந்து கொண்டாள். சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல, இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனை
குழந்தைச் செல்வம் கிட்டவும், செய்வினை நீங்கவும் இங்கு வந்து வேண்டிக்கொள்கின்றனர்.
காளியாட்டத் திருவிழா
மாசி கடைசி வாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்டத் திருவிழா என்கிறார்கள். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளன.
தஞ்சைப் பெரிய கோவில்
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா
தஞ்சைப் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன். உலக வரலாற்றில் அலெக்ஸ்சாண்டருக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவர். மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு தெற்காசியா முழுமையும் தனது பராக்கிரமத்தால் கட்டியாண்ட மாமன்னன் ராஜராஜன், 947-ம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். 985-ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். சைவர்கள் போற்றும் திருமுறைகளை மீட்டுத் தந்தவர் மாமன்னன் ராஜராஜன். அவரை சிறப்பிக்கும் வகையில், அவர் பதவியேற்ற 985-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா, இன்று (25.10.2023) அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.
தஞ்சைப் பெரிய கோவிலின் சிறப்புகள்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாமன்னன் ராஜராஜ சோழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவிலின் சில சிறப்புகளை இப்பதிவில் காணலாம்.
1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தை வைத்து கட்டினால் கூட பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை பெற்ற இந்தக் கோவில், இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கடந்த 2010ஆம் ஆண்டில் நடைபெற்றது.
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோவில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோவில், பிரகதீசுவரர் கோவில் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோவில், மாமன்னன் ராஜராஜசோழனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய ராஜராஜசோழன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினார். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில் உள்ள அசலேசுவரர் சந்நிதியின் மாதிரியைக் கொண்டு உருவானதாகவும் செய்தி உண்டு. இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் இராசராசப்பெருந்தச்சன் எனக் கோவிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான இக்கற்கோவிலை ராஜராஜசோழன் எழுப்பினார். கோவிலின் கட்டுமானப் பணிக்காக 1,30,000 டன் கிரானைட் கற்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அருகே மலைகள் இல்லாத நிலையில், நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் சுமார் 50 மைல்கள் தொலைவில் இருந்து கோவியிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இக்கோவில், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வெண்கலச் சிலையுருவாக்கம் ஆகியவற்றில் சோழர்களின் திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது.
மாமன்னன் ராஜராஜசோழனின் தமிழ் பற்றை இக்கோவிலின் வடிவமைப்பில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். கோவிலில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் 12 அடி. தமிழின் உயிர் எழுத்துக்கள் 12, சிவ லிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி. தமிழின் மெய் எழுத்துக்கள் 18, கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி. தமிழின் உயிர் மெய் எழுத்துக்கள் 216, சிவ லிங்கத்திற்கும் நந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி. தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247 ஆகும். கருவறையில் உள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது, கோபுரத்தின் மேல் உள்ள வைக்கப்பட்டுள்ள கலச வடிவிலான மேற்கூரை கல் சுமார் 80 டன் எடை கொண்ட ஒற்றை கல்லால் செய்யப்பட்டது என்பது பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம், அப்பெரிய கல்லை எப்படி அவ்வளவு மேலே எடுத்துச் சென்றனர் என்பதுதான்.
அழகி என்னும் இடையர் குல மூதாட்டி, பெரிய கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம், இராசகோபுரத்தின் உச்சியில் உள்ள 80டன் எடை கொண்ட கல்லில், அழகி என்று மூதாட்டியின் பெயர் பொறித்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. இப்படி, கோவிலில் உள்ள கல்வெட்டில், கோவிலை கட்ட யார் யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோவில் பணி செய்ய உதவியவர்களுக்கு தொண்டு செய்தவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.
தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோவில்
முகத்தில் புனுகு காப்புடன் காட்சி அளிக்கும் பங்காரு காமாட்சி அம்மன்
தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது பங்காரு காமாட்சியம்மன் கோவில். பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் இக்கோவிலை கட்டினார். கோவிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். தெலுங்கு மொழியில் பங்காரு என்றால், தங்கம் என்று பொருள்.
கருவறையில் பங்காரு காமாட்சியம்மன், தங்கத்தாலான திருமேனி உடையவளாய், வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும், மூன்று வளைவுகளோடு வில்போன்ற ஒயிலோடு நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனின் திருமுகத்தில், எப்போதும் புனுகு காப்பு சாத்தப்பட்டு இருப்பதால், கருமை நிறத்துடன் காட்சி அளிப்பாள். பங்காரு காமாட்சி அம்மன் முதலில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில்தான் எழுந்தருளி இருந்தாள். பதினெட்டாம் நூற்றாண்டில் அடிக்கடி நிகழ்ந்த அந்நியர் படையெடுப்பினால் அச்சம் கொண்ட அப்போதைய காஞ்சி மடாதிபதி, காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து இந்த பங்காரு காமாட்சி அம்மன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு பல ஊர்களில் தங்கி இருந்து பின்னர் தஞ்சை வந்தடைந்தார். விக்ரகத்தின் பாதுகாப்பு கருதி அதன் திருமேனியை துணியால் சுற்றி முகத்திற்கு மட்டும் கருமையான புனுகு காப்பு சாத்தி எடுத்து வந்தார்கள். அதன் அடிப்படையில்தான் இப்பொழுதும் அம்மனின் திருமுகத்தில் புனுகு காப்பு சாத்தப்பட்டு வருகிறது.
கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் உற்சவர் காமகோடியம்மன் சன்னதி உள்ளது. மூலவர் பங்காரு காமாட்சி அம்மனுக்கு வருடத்தில் நவராத்திரியின் ஒன்பது நாட்கள், காமாட்சியின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி பூரம், பங்குனி உத்திரம் ஆகிய 11 நாட்கள் மட்டும் தான், அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் உற்சவருக்குத்தான் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தி காமகோடி அம்மனுக்கு கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு-சீடை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே பக்தர்களுக்கு சடாரி சார்த்தும் வழக்கம் இருந்து, இப்போது மறைந்து விட்டிருக்கிறது.
சியாமா சாஸ்திரிகளுக்கு அருள் புரிந்த பங்காரு காமாட்சியம்மன்
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இக்கோவிலில் நித்ய பூஜைகள் செய்யும் பணியில் இருந்து,பின்னர் கீர்த்தனைகள் பாடும் புலமை பெற்றார். இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். அவ்வேளைகளில் அநேக கீர்த்தனைகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது கீர்த்தனைகளுக்கு தனியான சுவை ஏற்பட்டது என்பர்.
தஞ்சை பெரிய கோவில்
ராஜராஜ சோழனுக்கு தஞ்சை பெரிய கோவில் கட்ட இடம் காட்டிய வராகி அம்மன்
சப்தகன்னியரில் ஒருவரான வராகி அம்மன், திருமாலின் வராக அம்சமாக கருதப்படுகிறார். இவர் வராகமெனும் பன்றி முகத்தையும், எட்டு கரங்களையும் உடையவர்.
மாமன்னர் ராஜராஜ சோழனின் குலதெய்வம் வராகி அம்மன். தஞ்சை பெரிய கோவின் தெற்கு பிரகாரத்தில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் இருக்கிறது. வராகி அம்மன்,வலது கையில் உலக்கையுடனும், இடது கையில் கலப்பையுடனும் காட்சி தருகிறார்.
ராஜராஜ சோழன் போருக்கு செல்லும் முன்பு வராகி அம்மனை வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் இந்த அன்னையின் அருள் பெற்றுதான் எந்த செயலையும் தொடங்குவார். ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு பல இடங்களை தேர்வு செய்தார். ஆயினும் இறைவனிடமிருந்து உத்தரவு கிடைக்க தாமதமானது. அப்போது ஒரு நாள் வேட்டைக்குச் சென்றபோது, ஒரு இடத்தில் மன்னருக்கு முன்பு ஒரு பன்றி எதிர்த்து நின்றது. அதனை துரத்திச் சென்றபோது போக்கு காட்டி பல இடங்களுக்கு சென்று ஒரு பெரிய திடலில் சுற்றி சுற்றி வந்து படுத்துக்கொண்டது . இது ராஜராஜ சோழனுக்கு வியப்பை அளித்தது. வராகமாக இருப்பதனால் அதனை கொல்லாமல் துரத்தினார். ஆனால் அது எழுந்து நின்று தன் காலால் தரையை உதைத்து பூமியை தோண்டியது. அரண்மனை திரும்பிய ராஜராஜ சோழன் ஜோதிடரை அழைத்து விவரம் கேட்டார். கோவில் கட்ட அந்த இடத்தினை வராகி தேவி தேர்ந்தெடுத்து கொடுத்து இருப்பதை தெரிவித்தார் ஜோதிடர் .அந்த இடத்தில் பெரிய கோவில் கட்டும் முன்பு வெற்றி தேவதை வராகிக்கு சிறிய தனித்த ஒரு சன்னதியை அக்னி மூலைக்கு அருகில் அமைத்து வழிபட்டு பின்னர் பணியை தொடங்கினார். அந்த வராஹி தேவியின் அருளால் உலகம் போற்றும் ஆலயமாக பெரிய கோவில் மாறி நிற்கிறது. ராஜ ராஜ சோழன் கடைபிடித்த முறையிலேயே தற்போதும் எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்குவதானாலும் முதலில் வராகி அம்மனுக்கு பூஜை செய்த பின்னரே தொடங்கும் வழக்கம் பெரிய கோவிலில் உள்ளது.
பிரார்த்தனை
பஞ்சமி திதியில் வராகி அம்மனை வழிபட்டால் வறுமை, பிணி, பில்லி, செய்வினைகள் அகலும். எதிரிகள் விலகுவர் என்பது ஐதீகம். வழக்குகளிலிருந்து விடுபட வராகியின் அருள் கட்டாயம் தேவை. வராகி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது.
தஞ்சை 24 பெருமாள்கள் கருட சேவை
தஞ்சை வைகாசி திருவோண 24 பெருமாள்கள் கருட சேவை விழா
தஞ்சாவூர் மற்றும் அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
தஞ்சை கொடிமரத்து மூலைக்கு அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலில் எழுந்தருளுவார். அவரை தொடர்ந்து நீலமேகப் பெருமாள், ஸ்ரீநரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேசர், கரந்தை ஸ்ரீயாதவக் கண்ணன், கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு ராஜவீதி ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத் தெரு பஜார் ஸ்ரீராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனர், கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு ஸ்ரீபூலோகக் கிருஷ்ணர், மாச்சாவடி நவநீதகிருஷ்ணர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி, சுக்காந்திடல் ஸ்ரீலக்ஷ்மி நாராயணபெருமாள், கரந்தை வாணியத் தெரு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், கொல்லுப்பேட்டைத் தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, தஞ்சை ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.
நவநீத சேவை
கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை நடைபெறுகிறது. இதனை வெண்ணெய்தாழி மகோற்சவம் என்றும் அழைப்பர். இதில் 15 பெருமாள்கள் கையில் வெண்ணை குடத்துடன், நவநீத அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்கள்.
நிசும்பசூதனி (என்ற) வட பத்ரகாளியம்மன் கோவில்
சோழ மன்னர்களின் குல தெய்வம்
சோழர்கள் தங்கள் குல தெய்வமாக வணங்கிய அம்மன் நிசும்ப சூதனி என்கின்ற அம்பாயிரம்மன். கி.பி. 850 இல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார். பின்பு வந்த இராஜ இராஜ சோழன், இராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.
நிசும்பசூதனி என்ற பெயர் வரக் காரணம்
முன்னொரு காலத்தில் சும்பன், நிசுபன் என்ற இரு அரக்கர்கள் மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிகளையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் கொற்றவையை (துர்கை) நாடினர். கௌசீகி என்ற அழகிய பெண் உருவம் கொண்டிருந்த அம்பிகையை கண்டு சும்ப, நிசும்பர்களின் படைவீரர்களான சண்ட, முண்டர்கள் தங்கள் அரசனிடம் கூற அவளை அடைய வேண்டும் என்று மோகம் கொண்டு அவளை பிடித்து வர உத்தரவிட்டனர். தன்னை எவர் வெற்றி கொள்கிறாரோ அவர்களையே மணப்பேன் என்று கூறிய அன்னையிடம் சண்ட முண்டர்கள் போர்ப் புரிய துவங்கினர். அம்பிகை உக்ர ரூபம் கொண்டு சண்ட முண்டர்களை அழித்தாள். அதன் பின் அசுர குல அரசர்களான சும்ப, நிசும்பர்களை அழித்து வெற்றி கொண்டு 'நிசும்பசூதனி' என்ற நாமம் கொண்டாள்..
நிசும்பசூதனியின் வித்தியாசமான தோற்றம்
சோழர்கள் நிற்மானித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயம் ஆகும். இன்றளவும் பொலிவு மாறாமல் காணப்படுகிறது. கருவறையில் அன்னை வேறெங்கும் காண முடியாத தோற்றத்தில் காட்சி தருகிறாள்.
ஏழு அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தோன்றும், எட்டு திருக்கரங்கள், தீச்சுவாலையாக திருமுடி. நிசும்பனின் தலை கொய்து, தலைமீது அழுத்திய மெலிந்த திருவடி, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், நிசும்பனை அழிக்கும் திரிசூலம் என அசுரன் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள் அன்னை. எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி தலையை சற்று சாய்த்தவாறு அருமையாக வடிவமைத்துள்ளனர். இங்கே வீழ்ந்து இருக்கும் நான்கு அசுரர்களும் சண்டன், முண்டன் மற்றும் சும்ப, நிசும்பர்கள் ஆவர்.
இந்த அம்பிகையே தற்பொழுது 'வட பத்ரகாளியம்மன்' என்ற பெயருடன் தஞ்சையை காவல் புரிகிறாள். கோர ரூபம் என்றாலும் பக்தர்களுக்கு அருள்புரியும் கருணைக்கடலாய் திகழ்கிறாள் அன்னை நிசும்பசூதனி. மகிடனை அழித்த கொற்றவையின் அம்சமாக தோன்றிய நிசும்பசூதனியை இராகு காலம் மற்றும் அட்டமி நாளில் வணங்குவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிறு கிழமைகளில் ராகு நேரத்தில் சென்று வழிபட்டால் ராகு, கேது தோஷங்களான தார தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், திருமணத் தடை, தொழில் தடை போன்றவற்றிற்கு நிவர்த்தி கிடைக்கும்.
வல்லப விநாயகர் கோவில்
திருமண தடை நீக்கும் விநாயகர்
வல்லப விநாயகர் கோவில், தஞ்சாவூர் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வெள்ளை விநாயகர் கோவில் என்ற பெயர்தான் பிரசித்தம். சோழ மன்னரின் அரண்மனையைச் சேர்ந்தவர்களும் வழிபட்டதால், இவருக்குக் கோட்டை விநாயகர் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோவிலில் மூலவர் விநாயகருக்குள் வல்லபை தேவி ஐக்கியமாகி, அரூபமாகக் காட்சி தருவதாக நம்பிக்கை. அதேநேரம் உற்சவர் விநாயகர் மனைவி வல்லபை தேவி சகிதமாகக் காட்சி தருகிறார்.வல்லபை என்பவள் சாபத்தால் அரக்கியாக மாறி, முனிவர்களையும் தேவர்களையும் அச்சுறுத்தி வந்தாள். அனைவரும் சேர்ந்து சிவனிடம் வந்து முறையிட்டனர். அவர் அரக்கியை அடக்க பாலமுருகனைப் போருக்கு அனுப்பினார். அரக்கியைக் கண்டு பயப்படுவது போல் நடித்த பாலமுருகன், அண்ணனை அனுப்பி வைத்தார். தனக்கு எதிரே தைரியமாக நின்ற விநாயகரைக் கண்டு சிலிர்த்தாள் வல்லபை. விநாயகர் அவளை அப்படியே துதிக்கையால் தூக்கித் தனது மடியில் அமர்த்திக் கொண்டார. மனித உடலும் மிருக முகமும் கொண்டவரால் சாபத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று அறிந்திருந்த வல்லபை, அந்த நிமிடமே பழைய உருவத்தைப் பெற்றாள். விநாயகரையே மணம் புரிந்தாள்.திருமணமாகாத பெண்கள் இங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு, விநாயகரைத் தரிசித்து, மாங்கல்யச்சரடு பெற்றுக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.