உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

உத்திரகோசமங்கை வராகி அம்மன் கோவில்

உலகின் முதல் வராகி அம்மன் கோவில்

காளியம்மன் போல் அமர்ந்திருக்கும் வராகி அம்மனின் வித்தியாசமான தோற்றம்

ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சுயம்பு வராகி அம்மன் கோவில். இந்த வராகி அம்மனுக்கு மங்கை மாகாளியம்மன் என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் சிவாலயம் என்று கருதப்படும் உத்திரகோசமங்கை மங்களநாதர் கோவிலின் காவல் தெய்வம் இந்த வாராகி அம்மன். இந்த இரு கோவில்களும், சதுர் யுகங்களையும் கடந்த பழமையான கோவில்கள் ஆகும். 'மண் முந்தியதோ, மங்கை முந்தியதோ' என்ற சொற்றொடர் இத்தலத்தின் தொன்மையினைக் குறிக்கும். எனவே இந்த வராகி அம்மன், உலகின் முதன்மையான வராகி அம்மன் என்று போற்றப்படுகின்றாள்.

இந்தியாவில் வராகி அம்மனுக்கு உத்தரகோசமங்கை, தஞ்சாவூர், காசி உள்ளிட்ட சில இடங்களில்தான் முதலில் கோவில்கள்/ சன்னதிகள் ஏற்பட்டன. அவற்றில் மிக மிக பழமையானது தான் உத்தரகோசமங்கையில் உள்ள மங்கை மாகாளி என்ற சுயம்பு வராகி அம்மன் கோவில்.

ஆறடி உயரத்தில் எட்டு திருக்கரங்களுடன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தரும் சுயம்பு வராகி அம்மன், வலது கரம் அபயம் அளிக்க, இடது கரம் வரதம் காட்ட, மற்ற கரங்களில் சங்கு, சக்கரம், ஏர்கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம் தாங்கிட, காளியம்மன் போல வலது காலை குத்த வைத்து, இடது காலை தொங்கவிட்டு உக்கிரமாக அமர்ந்த கோலத்தில் வராகி அன்னை இருக்கிறாள். வடக்கு திசை நோக்கி இருக்கும் அவள் காலடியில் பஞ்ச பூதங்களும் அடக்கம். இதனைக் குறிக்கும் வகையில் 5 பூதகணங்கள் அவள் காலடியில் உள்ளனர்.

அன்னையின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு அவளது இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். இவர் அம்பாளின் கோபத்தை பெற்றுக் கொண்டு, பக்தர்களுக்கு அருள் மட்டும் கிடைக்க வழிவகை செய்கிறார். இப்படி விநாயகர் அருகில் இருக்கும் வராகி அம்மனை, வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது

வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் பரிகாரம்

வராகி அம்மனுக்கு மஞ்சள் அரைத்து சாத்துவது இந்த கோவிலில் சிறந்த பரிகாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஏனென்றால் அன்னையின் முகம் காட்டுப்பன்றி வடிவம் கொண்டது. பன்றிகள் பொதுவாக பூமியை கிளறி கிழங்கு வகைகளை உண்ணும். மஞ்சளும் பூமிக்கடியில் விளையும் ஒரு கிழங்கு வகை என்பதாலும், அதோடு மங்களகரமான பொருள் என்பதாலும் வராகி அம்மனுக்கு மஞ்சளை அரைத்து சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.

திருமணம், குழந்தை பேறு, வேலைவாய்ப்பு, தொழில் அபிவிருத்தி, பணம் மற்றும் சொத்து பிரச்சினை, வழக்கு மற்றும் நோய் நொடிகள் தீர பக்தர்கள் மஞ்சளை அரைத்து அம்பாளின் பாதத்தில் சாத்தி கோரிக்கைகளை சொல்லி வழிபடுவார்கள். அன்னையின் பாதத்தில் சாத்திய மஞ்சளை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். அதனை சிறிதளவு எடுத்து 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பெண்கள் உடலுக்கு பூசியும் குளிக்கலாம்.

பக்தர்கள் மஞ்சள் அரைத்து சாத்துவதற்கு மஞ்சள் பொடியை பயன்படுத்தக் கூடாது. கோவிலுக்கு வந்து தான் மஞ்சள் கிழங்கை அரைத்து கொடுக்க வேண்டும். இதற்காக கோவில் வளாகத்தில் 180 அம்மிகற்கள் வைக்கப்பட்டு உள்ளன.

மற்றொரு சிறப்பு பரிகாரமாக தேங்காய் விளக்கு ஏற்றுதலும் செய்யப்படுகிறது.

வளர்பிறை, தேய்பிறை பஞ்சமி திதியில் வராகி அம்மனை விரதமிருந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும். வராகி அம்மனிடம் மேற்கண்ட பரிகாரங்கள் மூலம் வைக்கும் வேண்டுதல்கள் யாவும் 3 முதல் 6 மாத காலத்தில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More
மங்களேசுவரர் கோவில்

மங்களேசுவரர் கோவில்

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்

கடலில் கிடைத்த மரகதப் பாறை

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற இடத்தில் மரைக்காயர் என்ற ஏழை மீனவர் வசித்து வந்தார். இவர் தினமும் உத்திரகோசமங்கை இறைவன் மங்களேசுவரர்ரை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறாவளி காற்று அடித்ததால் அவருடைய படகு நிலைகுலைந்து வெகுதூரம் போய் ஒரு பாசி படிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது அந்தப் பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்துவிட்டது.

அதுவரை அடித்துக்கொண்டிருந்த புயலும் மழையும் சட்டென்று நின்று விட ஒரு வழியாக அந்த பாறையோடு சேர்த்து படகை செலுத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். படகில் கொண்டு வந்த பாசி படிந்த அந்தப் பாறைக்கல்லை என்னவென்று தெரியாமல் வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்திருந்தார். மரைக்காயர் வீட்டுக்குள் போக வர அந்தக் கல் மீது நடந்து நடந்து அதன் மேலே ஒட்டியிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் அந்த கல் பச்சை நிறத்துடன் பள பளவென்று மின்னியது.

மரைக்காயர் அந்த பச்சை பாறையை அரசரிடம் தந்தால் தமது வறுமை நீங்கும் என்று எண்ணி பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு கடலில் நடந்த அனைத்தையும் விவரித்து தனது வீட்டில் உள்ள பச்சைக்கல் விபரத்தை சொன்னார். அரண்மனை ஆட்கள் அந்த பச்சை பாறையை எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள்

ரத்தின கற்களைப் பற்றிய விபரம் அறிந்த ஒருவர் அதை சோதித்துப் பார்த்தார். பச்சை பாறையை சோதித்த அவர் ஆச்சரியத்துடன், இது விலைமதிக்க முடியாத அபூர்வ மரகதக்கல். உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மன்னரிடம் சொன்னார் மன்னர் பச்சை பாறைக்கு உரிய பொற்காசுகளை மரைக்காயருக்கு அளித்து வழியனுப்பி வைத்தார்.

சித்தர் வடித்த மரகத நடராஜர் சிலை

அந்த அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலையை செதுக்க வேண்டும் என்று அரசன் விரும்பினார். ஆனால் அந்த சிலை வடிப்பதற்கு தகுதியான சிற்பி மன்னருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை அரசன் முதலாம் கயவாகு அரண்மனையில் சிற்பியாக இருந்த சிவபக்தர் ரத்தினசபாபதி யைப் பற்றிய விவரம் கிடைத்தது. சிற்பி ரத்தினசபாபதி பாண்டிய மன்னன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக் கல்லை கண்டதும் மயங்கி விழுந்தவர், என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது என்று கூறி சென்றுவிட்டார்.

மன்னர் வருத்தத்துடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னிதி முன் நின்று பிரார்த்தனை செய்தார் அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிய மன்னரும் பிரஜைகளும் ஒரு சித்தரை கண்டனர் அந்த சித்தரின் பெயர் சண்முகவடிவேலர்.

மன்னரின் கவலை நீங்கியது மரகத நடராஜரை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முகவடிவேலரிடம் ஒப்படைத்தார். சித்தர் சண்முகவடிவேலர் அந்த பெரிய மரகதப்பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக செதுக்கினார் அந்த சிலைதான் உத்தரகோசமங்கையில் இப்போதும் காட்சியளிக்கும் மரகத நடராஜர். இந்த நடராஜர் சிலையின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் கூட, பால் அபிஷேகத்தின் போது நமக்கு தெரியும் அளவுக்கு மிக நுணுக்கமாகவும், அழகுடனும் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் நமக்கு காட்சியளிப்பார். மார்கழி திருவாதிரையின்போது பழைய சந்தன காப்பு களையப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் மீண்டும் புதிய நடன கோலத்துடன்சந்தனக்காப்பு இடப்படும். புன்னகை தவழும் கம்பீரமான முகத்துடன் திருநடன கோலத்துடன் காட்சியளிக்கும் உத்திரகோசமங்கை மரகத நடராஜரை, அவசியம் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.

Read More