மங்களேசுவரர் கோவில்

உத்திரகோசமங்கை மரகத நடராஜர்

கடலில் கிடைத்த மரகதப் பாறை

ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்ற இடத்தில் மரைக்காயர் என்ற ஏழை மீனவர் வசித்து வந்தார். இவர் தினமும் உத்திரகோசமங்கை இறைவன் மங்களேசுவரர்ரை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறாவளி காற்று அடித்ததால் அவருடைய படகு நிலை குலைந்து வெகுதூரம் போய் ஒரு பாசி படிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது அந்தப் பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்துவிட்டது.

அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சட்டென்று நின்று விட ஒரு வழியாக அந்த பாறையோடு சேர்த்து படகை செலுத்தி மண்டபம் வந்து சேர்ந்தார். படகில் கொண்டு வந்த பாசி படிந்த அந்தப் பாறைக்கல்லை என்னவென்று தெரியாமல் வீட்டு படிக்கல்லாக போட்டு வைத்திருந்தார். மரைக்காயர் வீட்டுக்குள் போக வர அந்தக் கல் மீது நடந்து நடந்து அதன் மேலே ஒட்டியிருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது. ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் அந்த கல் பச்சை நிறத்துடன் பள பளவென்று மின்னியது.

மரைக்காயர் அந்த பச்சை பாறையை அரசரிடம் தந்தால் தமது வறுமை நீங்கும் என்று எண்ணி பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார். அங்கு கடலில் நடந்த அனைத்தையும் விவரித்து தனது வீட்டில் உள்ள பச்சைக்கல் விபரத்தை சொன்னார். அரண்மனை ஆட்கள் அந்த பச்சை பாறையை எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள்

ரத்தின கற்களைப் பற்றிய விபரம் அறிந்த ஒருவர் அதை சோதித்துப் பார்த்தார். பச்சை பாறையை சோதித்த அவர் ஆச்சரியத்துடன், இது விலைமதிக்க முடியாத அபூர்வ மரகதக்கல். உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது என்று மன்னரிடம் சொன்னார் மன்னர் பச்சை பாறைக்கு உரிய பொற்காசுகளை மரைக்காயருக்கு அளித்து வழியனுப்பி வைத்தார்.

சித்தர் வடித்த மரகத நடராஜர் சிலை

அந்த அபூர்வ மரகதக் கல்லில் ஒரு நடராஜர் சிலையை செதுக்க வேண்டும் என்று அரசன் விரும்பினார். ஆனால் அந்த சிலை வடிப்பதற்கு தகுதியான சிற்பி மன்னருக்கு கிடைக்கவில்லை. பின்னர் இலங்கை அரசன் முதலாம் கயவாகு அரண்மனையில் சிற்பியாக இருந்த சிவபக்தர் ரத்தினசபாபதி யைப் பற்றிய விவரம் கிடைத்தது. சிற்பி ரத்தினசபாபதி பாண்டிய மன்னன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகதக் கல்லை கண்டதும் மயங்கி விழுந்தவர், என்னால் மரகத நடராஜர் சிலையை வடிக்க இயலாது என்று கூறி சென்றுவிட்டார்.

மன்னர் வருத்தத்துடன் உத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னிதி முன் நின்று பிரார்த்தனை செய்தார் அப்போது நான் மரகத நடராஜரை வடித்து தருகிறேன் மன்னா என்ற குரல் கேட்டது. குரல் வந்த திசையை நோக்கிய மன்னரும் பிரஜைகளும் ஒரு சித்தரை கண்டனர் அந்த சித்தரின் பெயர் சண்முகவடிவேலர்.

மன்னரின் கவலை நீங்கியது மரகத நடராஜரை வடிக்கும் பொறுப்பை சித்தர் சண்முகவடிவேலரிடம் ஒப்படைத்தார். சித்தர் சண்முகவடிவேலர் அந்த பெரிய மரகதப்பாறையில் ஐந்தரை அடி உயர நடராஜரை ஒன்றரை அடி உயர பீடத்துடன் ராஜ கோலத்தில் மிகவும் நுணுக்கமாக செதுக்கினார் .

அந்த சிலைதான் உத்தரகோசமங்கையில் இப்போதும் காட்சியளிக்கும் மரகத நடராஜர். இந்த நடராஜர் சிலையின் திருக்கரங்களில் உள்ள நரம்புகள் கூட, பால் அபிஷேகத்தின் போது நமக்கு தெரியும் அளவுக்கு மிக நுணுக்கமாகவும், அழகுடனும் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் நமக்கு காட்சியளிப்பார். மார்கழி திருவாதிரையின்போது பழைய சந்தன காப்பு களையப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்த பின் மீண்டும் புதிய நடன கோலத்துடன்சந்தனக்காப்பு இடப்படும். புன்னகை தவழும் கம்பீரமான முகத்துடன் திருநடன கோலத்துடன் காட்சியளிக்கும் உத்திரகோசமங்கை மரகத நடராஜரை, அவசியம் நாம் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும்.

உத்திரகோசமங்கை மரகத நடராஜரின் அபிஷேக காணொளி காட்சி

 
Previous
Previous

அபிமுக்தீஸ்வரர் கோவில்

Next
Next

பரிமள ரங்கநாதர் கோவில்