
ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில்
சனி பகவானின் கால் ஊனம் சரியான தலம்
உடல் ஊனம், பக்கவாதம், விபத்தால் அங்கங்களின் வலிமை இழப்பு போன்ற குறைபாடுகளை போக்கும் தலம்
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஆதிகுடி அங்குரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பிரேமாம்பிகை. அங்குரம் எனக் கூறப்படும் மண்வெட்டியால் தோண்டியபோது வந்த லிங்கம் என்பதால், இக்கோவில் இறைவனுக்கு அங்குரேசுவரர் எனப் பெயர் உண்டானது.
இக்தலத்தில் வழிபட்டுதான் சனி பகவானின் கால் ஊனம் சரியானது. இக்கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் மிகப் பெரிய அளவில் விமல லிங்கம் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் எப்போதும் விமல லிங்க மூர்த்தியை வழிபடுவதால், ஆதிகுடி அங்குரேசுவரர் கோவிலில், விமலலிங்க மூர்த்தி வழிபாடே சனி பகவான் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
விபத்தால் அங்க வலிமை இழந்திருந்தால், நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருந்தால், பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்கோவிலில் காட்சியளிக்கும் விமல லிங்கத்தின் வலதுபுறத்தில் நன்றாகத் திரண்ட வெண்ணெய் காப்பும், இடதுபுறத்தில் வெண்ணெய் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துகளைப் பதித்து வழிபட்டால் குணம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தலம் நீத்தார் கடன் செய்யவும் உகந்த திருத்தலமாகும். இவ்வூரை காசிக்கு இணையாகச் சொல்வதுண்டு. இக்கோவிலுக்கு எதிரிலேயே மயானம் உள்ளது. தென் தமிழகத்தில் ஸ்ரீவாஞ்சியம் மற்றும் ஆதிகுடி என்ற இவ்விரு சிவத்தலத்திற்கு எதிரில் மட்டுமேதான் சுடுகாடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
கைகளில் வீணையோடு நின்ற கோலத்தில் காட்சி தரும் வீணா தட்சிணாமூர்த்தி
திருச்சியில் இருந்து அரியலூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார். இவ்வூர் பக்கம் படையெடுத்து வந்த முகமதிய மன்னன் மாலிக் கபூர் இத்திருக்கோவிலின் சிவப்பு கோபுரத்தை கண்டு உருதுமொழியில் லால்குடி (லால் – சிவப்பு, குடி – கோபுரம்) என்று அழைக்க, அதுவே இவ்வூருக்கு பெயராகி அழைக்கபடுகிறது.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை 'வீணா தட்சிணாமூர்த்தி' என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. இசைக்கு தலைவன் சிவபெருமான். இதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் இத்தலத்து தட்சிணாமூர்த்தி.
பிரார்த்தனை
இவரை வணங்கினால் உயர்பதவி, கல்வியில் முன்னேற்றம், நினைத்த படிப்பு படிக்கும் அமைப்பைக் கொடுப்பார். வியாழக் கிழமைகளில் இவருக்கு சந்தனக் காப்பிட நினைத்தக் காரியம் கைகூடும். வெண்தாமரை அர்ச்சனையும், தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க மனம் ஒருமுகப்படும். மேலும் இவர்க்கு தேனாபிசேகம் செய்தால் தேன் போன்ற இனிமையான குரல்வளம் கிடைக்கும்.

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்
நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் காட்சி தரும் அம்பாள்
திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். ஏழு முனிவர்கள் வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார், ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி.
அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந்திருக்கிறாள். எப்போதும், மடிசார் புடவையுடன், நித்திய கல்யாணியாக காட்சி தருகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.
மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள்.