சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவில்
சீர்காழி திரிபுரசுந்தரி அம்மன்
திரிபுரசுந்தரி என்பது, மூவுலகிலும் பேரழகி என்றும், அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும். இந்த அம்மனின் மற்ற திருநாமங்கள் திருநிலைநாயகி, ஸ்திரநாயகி, பெரியநாயகி. எத்தகைய துன்பத்திலும் சிக்கலிலும் நம்மை நிலைகுலைய விடாமல், நமக்கு ஸ்திரதன்மையை தருபவர் என்று பொருள்.
தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான திருஞானசம்பந்தர். 7-ம் நூற்றாண்டில் இந்த தலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதியம்மைக்கும் மகனாக அவதரித்தவர். குழந்தை சம்பந்தருக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு நாள், சிவபாத இருதயர் குழந்தை சம்பந்தருடன் இக்கோவில் பிரம்மதீர்த்தக் குளத்திற்கு நீராட வந்தார். குளக்கரையில் சம்பந்தரை விட்டுவிட்டு நீராடச் சென்றார். வெகு நேரமாகி தந்தை வராததாலும் பசியினாலும் குழந்தை சம்பந்தர் அழத் தொடங்கினார். அதைக் கண்ட சிவபெருமான் குழந்தையின் பசியாற்றும்படி உமாதேவியை பணித்தார். சிவபெருமான் விரும்பியபடி, உமாதேவி சிவஞானத்தை அமுதமாகக் குழைத்து பாலாகக் கொடுக்க, அதை உண்ட ஞானசம்பந்தர் இறையருள் பெற்றார். குழந்தையின் வாயில் பால் வழிவதைக் கண்ட தந்தை, பால் கொடுத்தது யார் என்று வினவினார்.
'தோடுடைய செவியன்' என்று தொடங்கும் பதிகத்தை சம்பந்தர் பாடி, பாலூட்டியது உமாதேவியென்றும் தான் இறையருள் பெற்றதையும் கூறினார். சம்பந்தரின் முதல் தேவாரப் பதிகம் இதுதான்.
சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு,குழந்தை சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டிய வரலாற்றை நினைவு படுத்தும் விதமாக, சீர்காழியில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா, திருமுலைப்பால் உற்சவம் என்று கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பிரம்ம தீர்த்தத்தின் கரையில் நடக்கிறது. அன்றைய தினம் ஞானசம்பந்தருக்கு நைவேத்யம் செய்த பாலை பிரசாதமாக சாப்பிட்டால் மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
உடலில் காயங்களுடன் காட்சியளிக்கும் நந்திதேவர்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
இத்தலத்தில் சுவேதாரண்யேசுவரர் சுவாமி சன்னதி முன் உள்ள நந்தி, உடலில் காயங்களுடன் காட்சி அளிக்கிறார். அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், மருத்துவாசுரன் என்னும் அரக்கனால் ஏற்பட்டது.
மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால், தேவர்களுக்கு பல துன்பம் விளைவித்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். மருத்துவாசுரன், திருவெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப் பின், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினான். நந்தியை அந்த அசுரன் ஒன்பது இடங்களில் ஈட்டியால் குத்தியதாக வரலாறு உள்ளது. இது பற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றிலிருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்ட மாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட நந்திதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார்.
நந்திதேவர் உடம்பில் ஒன்பது இடங்களில், ஈட்டியால் குத்துப்பட்ட துளைகளை நாம் இன்றும் நந்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது பார்க்க முடியும்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
எந்த சிவாலயத்திலும் காண முடியாத அகோரமூர்த்தி எழுந்தருளி இருக்கும் தேவார தலம்
சீர்காழியில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர், திருவெண்காடர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை. நவகிரக தலங்களில் இது புதனுக்குரிய தலமாகும்.
திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. சிவபெருமானின் 64 வித உருவங்களில் இது 43 வது உருவம் ஆகும். சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால் அகோரமூர்த்தி எனப்படுகிறார். இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்காக சிவபெருமானின் ஈசானிய முகத்திலிருந்து தோன்றியவர். இக்கோவிலின் மேலை பிரகாரத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவர் கரிய திருமேனி உடையவர். இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன், நெற்றிக்கண் நெருப்பைக் கக்க, கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு, மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார்.
இவரை அடுத்துள்ள சன்னதியில் இவரது உற்சவ திருமேனியைக் காணலாம். மூலவரைப் போலவே உற்சவரும், நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து எப்படி வலது காலைப் பெயர்த்து அடியெடுத்து வைக்க முனைவாரோ அதே போல் தன் நடையழகைக் காட்டும் விதமாக உள்ளார் என்பது சிறப்பு.
மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரமூர்த்தி பூஜை நடைபெற்று வருகின்றது.
இவரை வணங்கினால் முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில்
தட்சிணாமூர்த்தி முன் நந்திதேவர் அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள வதாரண்யேசுவரர் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவில் வள்ளலார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோவில் பிரசித்தி பெற்ற ஒரு குரு பரிகாரத் தலமாகும்.
இக்கோவிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை மேதா தட்சிணாமூர்த்தி என்பர். பொதுவாக சிவன் கோவில்களில் நந்தி, மூலவரான லிங்கத்திருமேனி முன்பு அமர்ந்திருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு முன்பாக நந்தி காணப்படுவது தனிச்சிறப்பாகும். .இந்த தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார்.
ஒரு சமயம், ரிஷப தேவர் தன்னைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டார், சிவபெருமானை சுமந்து செல்வதால் தான் மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கர்வம் கொண்டார். சிவபெருமான் அவருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து, ரிஷப தேவரின் முதுகில் தன்னுடைய சடையின் ஒரு முடியை வைத்தார். ரிஷப தேவர் அந்த ஒரு முடியின் எடையைத் தாங்க முடியாமல், தனது முட்டாள்தனத்தை உணர்ந்தார். சிவபெருமானை வணங்கி மன்னிப்புக் கோரினார். சிவபெருமான் அவரை மன்னித்தது மட்டுமல்லாமல், தெய்வீக அறிவையும் அவருக்கு அருளினார். இங்குள்ள இறைவன் தம் பக்தர்களுக்கு அறிவு, செல்வம், ஆரோக்கியம் ஆகியவற்றை அருளுவதால் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். தமிழ் மொழியில், வள்ளல் என்றால் மிகுதியாக கொடுப்பவர் என்று பொருள். இறைவன் நந்தியின் மீது அமர்ந்து, தன் எதிரில் அமர்ந்திருக்கும் ரிஷப தேவருக்கு அறிவை அருளுகிறார். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியுடன், ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. மேதா என்றால் அறிவு அல்லது ஞானம். இந்த கோவிலில், மேதா தட்சிணாமூர்த்தி தனது வலது கையில் 'சின் முத்திரை' மற்றும் இடது கையில் புத்தகம் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார். குருபகவான் இங்குள்ள தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பக்தர்களுக்கு வரம் அருளும் ஆற்றல் பெற்றதால் இத்தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அதனால் குருபெயர்ச்சி இங்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும். குருபெயர்ச்சியின் போது தொலைதூர மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இங்கு திரளுவார்கள்
காவிரியில் நந்தி நீராடிய இடம், ரிஷப தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்திக் கோவில் உள்ளது. இங்கு நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய ஆறுகளில் நீராடிய பலன் கிடைக்கும். அவ்வாறே குருசேத்திரம்,பிரயாகை ஆகிய இடங்களில் தானம் செய்ததற்கு நிகரான பலன் கிடைக்கும்.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
கருவறையில் ஊஞ்சலில் ஆடும் காளியம்மன்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் 'ராஜமாதங்கீசுவரி,
இக்கோவில் பிரகாரத்தின் வடக்கு புறத்தில் 'ஆனந்த வடபத்ரமாகாளியம்மன்' தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மரத்தினால் ஆன திருமேனி உடையவள். தனது எட்டு கைகளிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தியபடி அருளுகிறாள். கருவறையில் இவள் ஊஞ்சல் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். இப்படி கருவறையில் ஊஞ்சலில் அமர்ந்து காட்சி தரும் அம்மனை வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாது. ஊஞ்சலில் ஆடும்போது இந்தக் காளியம்மனின் தரிசனம் பெறுவது விசேஷம். பவுர்ணமியில் காளி சன்னதியில் மாவிளக்கு ஏற்றி, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வணங்குகின்றனர். பத்ரகாளி அம்மனின் மூலவர் விக்கிரகமே விழாக்காலங்களில், வீதி உலாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
சிவபெருமான் பார்வதி திருமணத்திற்கு சீர் வரிசை கொண்டு வந்த நந்தியம்பெருமான்
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி, மாதங்கி. இக்கோவிலில் வேறு எந்த தலத்திலும் காண முடியாத வகையில், அரிய நிலையில் இரண்டு நந்திகள் எழுந்தருளிய உள்ளன. இவைகள் முன்னும் பின்னும் திரும்பிய நிலையில் காட்சியளிக்கின்றன. இவற்றில் மதங்க நந்தி இறைவனை பார்த்தபடியும், மற்றொரு நந்தியான சுவேத நந்தி கோவில் வாசலை பார்த்தபடி திரும்பியும் இருக்கின்றது. இதனை நந்தி, சிவ பார்வதி திருமணத்திற்கு சீர் பொருட்களை கொண்டு வந்த கோலம் என்கிறார்கள். இதன் பின்னணியில் சுவையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.
மதங்க முனிவரின் மகளாக அவதரித்த பார்வதிதேவி மாதங்கி என்ற திருநாமத்துடன் வளர்ந்து வந்தாள். தக்க வயது வந்ததும், மதங்க முனிவர் தம் மகளை சிவபெருமானுக்கு முடிக்க எண்ணினார். சிவபெருமான், மாதங்கியின் திருமணம் திருநாங்கூருக்கு அருகில் உள்ள திருவெண்காட்டில் நடந்தது. சிவபெருமான் திருமணத்திற்காக மதங்கரிடம் சீர் எதுவும் வாங்கவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த முக்கோடி தேவர்கள் உட்பட அனைவரும் மதங்கர் சீர் தராத்தை சுட்டிக்காட்டி இழிவுபடுத்தி பேசினர். அவர்களது எண்ணத்தை அறிந்த சிவபெருமான், தட்சணை வாங்குவது தவறு என்று அவர்களிடம் எடுத்துக் கூறினார். ஆனாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. எனவே சிவபெருமான் அவர்களிடம் "மாதங்கியை மணப்பதால் அவள் வேறு, நான் வேறு இல்லை. எங்கள் இருவர் பொருளும் ஒன்றுதான்" என்று சொல்லி, சிவலோகத்திலுள்ள தன் செல்வத்தின் பெரும் பகுதியை நந்தியை அனுப்பி எடுத்து வரும்படி கூறினார். அதை பார்வதிக்கு கொடுத்தார். இதனை உணர்த்தும் விதமாக இக்கோவிலில் முன்னும், பின்னுமாக திரும்பியபடி இரண்டு நந்திகள் இருக்கின்றன. பிரதோஷ வேளையில் இவ்விரு நந்திகளுக்கும் அபிஷேகம் நடக்கின்றது. அந்நேரத்தில் இரு நந்திகளையும் தரிசனம் செய்வது சிறப்பான பலன்களைத்தரும்.
திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில்
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்கும் ஸ்ரீராஜமாதங்கீசுவரி
சீர்காழியில் இருந்து 10 கி.மீ.தொலைவில் உள்ளது திருநாங்கூர் மதங்கீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஸ்ரீராஜமாதங்கீசுவரி. இறைவிக்கு அஞ்சனாட்சி, கடம்பவனவாசினி என்று மேலும் 16 பெயர்கள் உண்டு. அம்பிகை, . ஸ்ரீ சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும், அரசர்க்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் அமைச்சராக விளங்குபவள்.
பிரம்மதேவனின் புதல்வரான மதங்க முனிவரின் மகளாக பிறந்தமையால், மாதங்கி என அழைக்கப்படுகிறார். அம்பிகை மாதங்கி, சிவபெருமானை இத்தலத்துக்கு அருகில் உள்ள திருவெண்காட்டு தலத்தில் திருமணம் புரிந்தாள். அதனால் இங்கு திருமண கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.
சரஸ்வதி தேவிக்கு கல்வி உபதேசம் செய்தவள்
சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் மதங்கீசுவரி. சரஸ்வதி தேவிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள கல்வியில் சிறக்கலாம் என்பது ஐதீகம். புதிதாக பள்ளியில் சேர்க்கும் குழந்தைகளை பௌர்ணமி மற்றும் அஷ்டமி தினங்களில் அம்பாள் சன்னதி முன்பு நாக்கில் தேன் வைத்து எழுதி 'அக்ஷராப்பியாசம்' செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் அவர்களது கல்வி சிறக்கும் என்கிறார்கள். பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத் தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குகின்றனர். இந்த அம்பிகையை தரிசிப்பவருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும்.
திருமண தடை நீங்க மட்டை தேங்காயுடன் அர்ச்சனை
திருமணத் தடை உள்ளவர்கள்அஷ்டமி அன்று இவளுக்கு பாசிப்பருப்பு பாயாச நைவேத்யம் படைத்து, மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை, 11 மாதங்கள் வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அப்படி செய்தால் 11 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதி என்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர், தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது.
சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவில்
காசிக்கு மேலாக போற்றப்படும் சேத்திரபாலபுரம் காலபைரவர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு மேலாக போற்றப்படும் பழமையான காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. பல ஆலயங்களிலும் பைரவர் தனி சன்னிதியில் மட்டுமே காட்சி தருவார். காசியில் கூட பைரவருக்குத் தனி ஆலயம் கிடையாது. ஆனால் சேத்திரபாலபுரத்தில் காலபைரவர் மூலவராக எழுந்தருளி உள்ளார். சாதாரணமாக அனைத்து ஆலயங்களிலும் உள்ள பைரவர் சிலைகளில் அவருடன் நாயும் இருப்பதைக் காணலாம். அது மட்டுமின்றி அந்த பைரவர்கள் எல்லாம் சாந்தமான முகத்தைக் கொண்டு காட்சி தருவது இல்லை. ஆனால் சேத்திரபாலபுரத்தில் உள்ள பைரவர் தன்னுடைய வாகனமான நாய் இல்லாமல், தாமரை மலரில் சிரித்த முகத்தோடு வீற்றிருக்கிறார். இதனால் இவரை 'ஆனந்த கால பைரவர்' என்று அழைக்கிறார்கள். இங்கு உள்ள காலபைரவர் 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் அதிபதி ஆவார்.
காசிக்குச் சென்றுவிட்டு திரும்பிய கால பைரவரை, இந்த தலத்தில் வந்து பிரம்மா, இந்திரன், நவக்கிரகங்கள் போன்றவர்கள் பூஜித்து துதித்த கதை உள்ளது. நவக்கிரகங்களின் சக்தி வாய்ந்த ஆலயங்கள் இந்தத் திருத்தலத்தைச் சுற்றி (கும்பகோணம்) அமைந்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தைச் சுற்றி சூல தீர்த்தம், காவிரி தீர்த்தம், கணேச தீர்த்தம், சக்கர தீர்த்தம் மற்றும் கந்த தீர்த்தம் என்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. ஆலயத்தின் வடக்குப் புறத்தில் உள்ள காவிரி தீர்த்தத்தை 'சங்கு முக தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள். அதற்குக் காரணம் அது சங்கு வடிவில் அமைந்து இருப்பதுதான். அதில் குளிப்பது காசியில் குளித்தப் புண்ணியத்தை தரும் என்று இந்த ஆலய தல வரலாறு சொல்கிறது.
பிரார்த்தனை
இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியை கால பைரவ அஷ்டமி என்று அழைக்கின்றோம். கால பைரவ அஷ்டமி, பாவங்களை எல்லாம் தீர்ந்து விடும். அஷ்டமி தினத்தில் காலபைரவரை வழிபடுவதன் மூலம் நமக்கு மிகச்சிறந்த நன்மைகள் கிடைக்கும். சனியினுடைய தோஷங்கள் விலகும். ஆயுள் தோஷங்களும் விலகும். ஆயுள் விருத்தி உண் டாகும். சுபகாரியத் தடைகள் விலகும். பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளுக்கு பாகற்காயை வெட்டி அதில் வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். வாஸ்து தோஷம், கோ சாபம், பிதுர் சாபம், மாது சாபம், பண நஷ்டம், பெற்றோர் சாபம் போன்றவை நீங்க பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட வேண்டும், உடல் நலக்குறைவு நீங்கி, அந்நிய தேசப்பயணம் சென்று பொருள் ஈட்ட கால பைரவருக்கு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும். அரசியலில் பெயர் புகழ் சேர பைரவருக்கு கிராம்பு மாலை அணிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளா்ச்சிக்கு பைரவருக்கு ஏலக்காய் மாலை அணிக்க வேண்டும். சித்த பிரம்மையால் பாதிக்கப்பட்டு சுயநினைவை இழந்தவர்கள் புத்திக்கூர்மை பெற்று தெளிந்த மனநிலை பெற செவ்வாழை பழத்தில் நெய் தீபமிட்டு வழிபட வேண்டும். இந்த கோவிலில் தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி மாலை சூட்டி வழிபாடு செய்கிறார்கள்.
அனந்தமங்கலம் இராஜகோபால சாமி கோவில்
மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடைய அபூர்வ ஆஞ்சநேயர்
மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கு இடையில் அமைந்துள்ளது அனந்தமங்கலம் ராஜகோபால சாமி கோவில். கருவறையில் மூலவர் வாசுதேவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். உற்சவர் ராஜகோபால சுவாமி ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளி இருக்கிறார்.
இக்கோவில் பெருமாள் கோவிலாக இருந்தாலும், இங்கு எழுந்தருளியுள்ள திரிநேத்திர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர். அவரே முதன்மையான கடவுளாக இத்தலத்தில் வழிபடப்படுகிறார். அவர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும் உடையவராகவும், அவரது ஐந்து வலது கைகளில் சுதர்ஸனம், திரிசூலம், அங்குசம், பாணம், மத்தகக்ஷ்ம் என்ற ஆயுதங்களையும், இடது ஐந்து கைகளில் சங்கு, பத்மம், பாசம், கோதண்டம், நவநீதம் என்ற ஆயுதங்களையும் ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு, அபூர்வமான தோற்றத்தில் காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனியை வேறு எந்த கோவிலிலும் நாம் தரிசிக்க முடியாது.
ராமபிரான் இலங்கையில் இராவணனை வதம் செய்துவிட்டு திரும்புகையில், ராவணனின் வழிவந்த அரக்கர்கள் அங்கே கடலுக்கு அடியில் தவம் செய்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டு அவர்களை அழிக்க அனுமனை அனுப்பினார். இலங்கைக்கு புறப்பட்ட ஆஞ்சநேயருக்கு திருமால் தன்னுடைய சங்கு, சக்கரத்தையும், பிரம்மா தனது பிரம்ம கபாலத்தையும், ருத்ரன் மழுவையும், ஸ்ரீதேவி பத்மமும், ஸ்ரீசக்தி பாசமும் அளித்தனர். ராமபிரான் வில்லையும், அம்பையும் வழங்கினார். கருடாழ்வார் தம் சிறகுகளை அளித்தார். கடைசியாக அங்குவந்த சிவபெருமான், பத்து கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். தாம் என்ன தருவது என்று சிந்தித்தார். தம்முடைய சிறப்புக்குரிய மூன்றாவது கண்ணையே அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்டு வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது படையினரையும் அழித்து துவம்சம் செய்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செவ்வனே செய்து முடித்து, ஆனந்தத்துடனும் ராமனை சந்திக்கப் பயணமானார். அப்படி வரும் வழியில் கடற்கரை ஓரத்தில் இயற்கை அழகு நிரம்பிய இத்தலத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அப்படி அவர் தங்கிய இடம் 'ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. தற்போது வழக்கில் அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும், அனந்தமங்கலம் சென்றால் ஆனந்தம் கிடைக்கும் என்பது பழமொழி. இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் மற்றும் மனநலம் குன்றியவர்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள். தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள். பில்லி, சூனியம், ஏவலால் பாதிக்கப்பட்டவர் கள் இத்தல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்கள் அல்லல் நீங்கி ஆனந்தம் பெறுவதாக மக்களின் நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் வியாழக்கிழமை, இத்தல ஆஞ்சநேயரை வழிபட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோவில்
கையில் கிளி ஏந்திய அபூர்வ துர்க்கை அம்மன்
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவாளப்புத்தூர். இறைவன் திருநாமம் மாணிக்கவண்ணர். இறைவியின் திருநாமம் வண்டமர்பூங்குழல் நாயகி.
இறைவன் மாணிக்கவண்ணர் எழுந்தருளி இருக்கும் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் துர்க்கை அம்மன் வடக்கு நோக்கி எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன், நின்ற கோலத்தில் எழுந்தருளி இருக்கிறாள். மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை அம்மன் இத்தலத்து இறைவனை வணங்கி தோஷ நிவர்த்தி அடைந்தாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும், புன்முறுவல் பூத்த முகத்தோடு சாந்த துர்க்கையாக அருளுவதும் இத்தலத்தின் சிறப்பாகும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும். மேலும், துர்க்கை அம்மனின் காலடியில் கிடக்கும் மகிஷாசுரனின் முகத்தில் நாசித் துவாரங்கள் தெரிவதும் ஒரு அபூர்வமான தோற்றம் ஆகும்.
பிரார்த்தனை
இத்தலத்தில் துர்க்கை அம்மனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பெற்றதால், இந்த துர்க்கையை வழிபடுபவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம், செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரக தோஷங்கள் விலகும். திருமண தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும்.
மூவலூர் மார்க்க சகாயேசுவரர் கோவில்
இதய நோய்க்கான பரிகாரத்தலம்
மயிலாடுதுறைக்கு மேற்கே 6 கி.மீ தூரத்தில், மூவலூர் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் மார்க்க சகாயேசுவரர். இந்த ஆலயத்தில் சவுந்திர நாயகி, மங்களாம்பிகை என்ற இரண்டு இரண்டு அம்பிகைகள் எழுந்தருளியிருக்கிறார்கள். ருத்ரன், திருமால், பிரம்மா மூவருக்கும், இத்தலத்து இறைவன் வழிகாட்டி தன்னை வெளிப்படுத்தியதால் இறைவனுக்கு, 'வழிகாட்டிய வள்ளல்' என்றும், 'மார்க்க சகாயேசுவரர்' என்றும் பெயர் வழங்கலாயிற்று. இதேபோல் மூவரும் வழிபட்ட ஊர் இதுவென்பதால், 'மூவரூர்' என அழைக்கப்பட்டது. இதுவே மருவி தற்போது, 'மூவலூர்' என்றாகி இருக்கிறது. இத்தலம் தேவார வைப்புத் தலமாகும்.
திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய தலம், மகிஷாசுரனை வதம் செய்த துர்ககையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட சிறப்பு மிக்கது இந்த ஆலயம்.
இக்கோவிலில், மையத்தில் பலிபீடம் இருக்க அதைச் சுற்றி நான்கு திசைகளிலும் நான்கு வேத நந்திகள் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
இந்த கோவில் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாகத் திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலபிஷேகம் செய்தும், அபிஷேகப் பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை.
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
மாசி பௌர்ணமியன்று தீர்த்த நீராடும் அம்பிகை
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள்.
கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள சிவன் கோயில்களில் மாசி பௌர்ணமியின்போது சிவன், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார். ஆனால், இத்தலத்தில் மாசி பௌர்ணமியன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கின்றது. முற்காலத்தில் இக்கோவிலில் சிவன் சன்னதி மட்டுமே இருந்தது. ஒருசமயம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது. சிலையை அவர் எடுத்தவுடனேயே, அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்தபோது வயிற்றுவலி நின்றுவிட்டது. அதன்பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததைக் கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார். இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒருமுறை மாசி பௌர்ணமியன்று ,அவளது பிறப்பிடமான கடலுக்கு கொண்டு சென்று தீர்த்த நீராட்டி வருகிறார்கள்.
திருக்கலிகாமூர் சுந்தரேஸ்வரர் கோவில்
வில்வ அர்ச்சனை நோய்க்கு மருந்தாகும் தேவாரத்தலம்
சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்கலிகாமூர். 'கலி' (துன்பம்) நீக்கும் இறைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் ஊர் என்பதால் இவ்வூர், 'திருக்கலிக்காமூர்' என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் தற்போதைய பெயர் அன்னப்பன்பேட்டை.. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தராம்பாள். தலவிருட்சம் வில்வமரம். மூலவர் சுந்தரேஸ்வரர் சதுரபீடத்தில் சற்று குட்டையான பாணத்துடன் கூடிய சிவலிங்கத் திருமேனி உருவில் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
பராசர முனிவர், உதிரன் என்னும் அசுரனை அழித்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தருளினார். அவரது வேண்டுதலுக்காக இத்தலத்தில் இறைவன் எழுந்தருளினார். பராசர முனிவர் ஜோதிடத்தில் நல்ல புலமை பெற்றவர். ஆகையால் ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், ஜோதிடம் கற்க விரும்புவர்கள் பராசர முனிவர் பூஜித்த இத்தல இறைவனை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
இத்தலத்திலுள்ள சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 'இத்தலத்து ஈசனை வழிபட்டால் வினை, நோய் நீங்கி, செல்வம் பெருகும்,'என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
புதன் கிரகத்திற்கான பரிகாரத் தலம்
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில், சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள தேவாரத் தலம் திருவெண்காடு. இறைவன் திருநாமம் சுவேதாரண்யேசுவரர். இறைவியின் திருநாமம் பிரம்ம வித்யாம்பிகை.இத்தலம் புதனுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது இக்கோவிலில் புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
புத பகவான்தான், கல்வி, அறிவு, பன்மொழித்திறமை ஆகியவற்றிற்கு அதிபதி. ஜாதகத்தில், புதன் நீசமடைந்திருந்தாலும், அல்லது மறைவிடங்களில் இருந்தாலும், கல்வி மற்றும் கலைகளில் குறைபாடு ஏற்படும். அக்குறைபாடு உடைய குழந்தைகளை திருவெண்காட்டில் உள்ள புதபகவானை தரிசித்து, பிரார்த்தனை செய்தால், அக்குறைபாடுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. படிப்பில் மனம் ஈடுபடாத மாணவ மாணவிகள் இத்திருத்தல புதனைத் தரிசனம் செய்வது பரிகாரமாகக் கூறப்படுகின்றது.
உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம். புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தாண்யம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம். புத பகவானின் ஸ்தான பலன் சரியாக அமையப் பெறாத ஜாதகர்கள், இந்தத் திருத்தலத்திற்கு வந்து, இறைவனையும், இறைவியையும், புத பகவானையும் தரிசித்து வழிபாடுகள் செய்ய வேண்டும். புத பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து, பச்சை நிற வஸ்திரம் சாற்றி, பாசிப்பருப்பு சேர்த்த வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, பிரசாதத்தை விநியோகிக்க வேண்டும்.. இவ்வாறு செய்வதால் புத தோஷம் நீங்கப் பெறும். புத பகவான் அருளால், கல்வி அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவை கிட்டும்.
திருவெண்காடு புதன் பகவானின் சன்னதியில் 17 தீபங்களை ஏற்றி, மற்றும் அந்த கோவிலை 18 முறை சுற்றி வந்து வழிபட்டால், நம் வாழ்வில் வரும் துன்பங்களை வராமல் தடுக்கலாம். மேலும் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானை வழிபட்டால் ராஜயோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோவில்
திருநாங்கூர் பதினொரு பெருமாள்கள் கருட சேவை
பெரிய திருவடி எனப்படும், கருடாழ்வார் மீது பெருமாள் எழுந்தருளும் திருக்கோலமே `கருட சேவை'. பெருமாளை கருட வாகனத்தில் சேவை சாதிக்கக் காண்போருக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். நாக தோஷம் நீங்கும். கால சர்ப்ப தோஷம் இருந்தாலும் நீங்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள திருநாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
108 திவ்ய தேசங்களில் திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. அவை
1. திருமணிமாடக் கோவில்
2. திருக்காவளம்பாடி
3. திருஅரிமேய விண்ணகரம்
4. திருவண்புருடோத்தமம்
5. திருச்செம்பொன்செய் கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் தொகை
8. திருத்தெற்றியம்பலம்
9. திருமணிக்கூடம்
10. திருவெள்ளக்குளம்
11. திருப்பார்த்தன்பள்ளி
தை அமாவாசைக்கு மறுதினம் மதிய வேளையில், திருநாங்கூரைச் சுற்றியுள்ள 11 திவ்ய தேசங்களில் இருந்து, ஸ்ரீநாராயண பெருமாள் (மணிமாடக் கோவில்), ஸ்ரீகுடமாடு கூத்தர் (அரியமேய விண்ணகரம்), ஸ்ரீசெம்பொன்னரங்கர் (செம்பொன்செய் கோவில்), ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் (திருத்தெற்றியம்பலம்), ஸ்ரீஅண்ணன் பெருமாள் (திருவெள்ளக்குளம்), ஸ்ரீபுருஷோத்தமப் பெருமாள் (வண் புருஷோத்தமம்), ஸ்ரீவரதராஜன் (திருமணிக்கூடம்), ஸ்ரீவைகுந்த பெருமாள் (வைகுந்த விண்ணகரம்), ஸ்ரீமாதவ பெருமாள் (திருத்தேவனார் தொகை), ஸ்ரீபார்த்தசாரதி (திருபார்த்தன்பள்ளி), ஸ்ரீகோபாலன் (திருக்காவளம்பாடி) ஆகிய 11 பெருமாள் உற்சவமூர்த்திகள், தங்க கருட வாகனத்தில் , திருநாங்கூர் மணிமாடக் கோவில் பந்தலில் எழுந்தருள்வார்கள். பிறகு திருமங்கையாழ்வார் தனது தேவியான குமுதவல்லி நாச்சியாருடன் பந்தலில் எழுந்தருளி, ஒவ்வொரு பெருமாளிடமும் சென்று மங்களாசாசனம் செய்வார்.
அதையடுத்து, இரவு 12 மணியளவில் 11 பெருமாள்களும் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். திருமங்கையாழ்வார் நாச்சியாருடன் ஹம்சவாகனத்தில் எழுந்தருள்வார். பின்பு வெண்குடையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா நடைபெறும்.
மேலும் பதினொரு திவ்ய தேசப் பெருமாள்களை தரிசித்த புண்ணியம்
இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது. அதாவது, இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால், அதற்கு ஈடான இன்னொரு திவ்யதேச பெருமாளை தரிசித்த புண்ணியமும் கிட்டும். மணிமாடக் கோவில் எம்பெருமானை வழிபடுவதால், இமயமலை பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும். திருவைகுந்த விண்ணகரம் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர். அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரை பெருமாளை சேவித்த பாக்கியததை அருள்கிறார். திருத்தேவனார் தொகை பெருமாள், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தை பெருமாளை தரிசித்த பலனை அருள்கிறார். திருவண்புருஷோத்தம பெருமாளை தரிசித்தால் ராமன் அவதரித்த அயோத்தி திவ்ய தேசத்தை தரிசித்த பலன் கிட்டும். செம்பொன்செய் கோவில் பெருமாள் காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார். திருத்தெற்றியம்பலம் பெருமாள், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளைச் சேவித்த புண்ணியத்தைத் தருவார். திருவெள்ளக்குளம் பெருமாள் திருமலை வேங்கடநாதனை தரிசித்த புண்ணியம் தருவார். திருமணிக்கூடம் பெருமாள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வணங்கிய நற்பலன்களைத் தருவார். திருக்காவளம்பாடி பெருமாள், காஞ்சிபுரம் பாடக பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார். திருபார்த்தன்பள்ளி பெருமாள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வழிபட்ட பலனை தருகிறார்.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில்
தை அமாவாசை நாளில் முன்னோர் ஆசிர்வாதம் கிடைக்க வழிபட வேண்டிய தலம்
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கமான சித்திரை முதல்நாள், ஆடிமாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு மற்றும் அனைத்து அமாவாசை தினங்களும் புண்ணிய காலங்கள். அனைத்து அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம் என்ற போதும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய அமாவாசைகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை அனைத்து அமாவாசைகளிலும் வழிபாடு செய்ய இயலாதவர்களாக இருந்தால் தவறாமல் இந்த மூன்று அமாவாசைகளிலும் முன்னோர் வழிபாட்டைச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஆடிமாத அமாவாசை அன்று பித்ருக்கள் பித்ரு லோகத்திலிருந்து பூலோகத்துக்குப் புறப்படுகிறார்கள். இரண்டு மாதப் பயணத்தில் புரட்டாசி மாதம் அவர்கள் பூமிக்கு வந்து சேர்கிறார்கள். புரட்டாசி மாதம் முன்னோர்கள் பூமியில் உறையும் காலம். அதனால்தான் அந்த மாதத்தைப் புனிதமான மாதமாகக் கருதிக் கடைப்பிடிக்கிறோம். உத்தராயண புண்ணிய காலமான தை அமாவாசை அன்று அவர்கள் மீண்டும் தங்களின் உலகத்துக்குப் புறப்படுகிறார்கள். நம் வீடுகளுக்கு வந்து தங்கியிருந்து கிளம்பும் உறவினர்களை எப்படி நாம் நல்லமுறையில் போற்றி அனுப்புவோமோ அப்படி பித்ருக்களுக்கு தை அமாவாசை நாளில் தர்ப்பணம் முதலிய வழிபாடுகளைச் செய்து வழிபட்டு அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
சீர்காழியிலிருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது. நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலமாக திருவெண்காடு விளங்குகிறது. காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும் ஆறு புண்ணிய க்ஷேத்திரங்களில், திருவெண்காடும் ஒன்று. இந்தக் கோயிலில் அக்னி தீர்ததம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர நீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில், ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது. தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின் அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியை விட மூன்று மடங்கு பலனைத் தரக்கூடிய இந்த ருத்ர பாதத்தை, முறையாக வழிபட்டால், நம்முடைய 21 தலைமுறை பாவ வினைகளை நீக்கும் என்பது இந்தக் கோவிலில் இருக்கும் ஐதீகமாகும் .
தை அமாவாசை நாளில் வழிபட்டால் நன்மை பயக்கும் பிற புண்ணியத் தலங்கள் திலதர்ப்பணபுரி, திருவிளமர், ராமேஸ்வரம், தீர்த்தாண்டதானம், பவானி கூடுதுறை, கருங்குளம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருக்கண்ணபுரம், திருப்புல்லாணி, திருப்புள்ளம் பூதங்குடி ஆகியவை ஆகும்.
தேரழுந்தூர் தேவாதிராஜன் பெருமாள் கோவில்
பெருமாளின் அருகில் இருந்து பிரகலாதனும் கருடாழ்வாரும் காட்சி தரும் திவ்ய தேசம்
மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள திவ்ய தேசம், தேரழுந்தூர். இத்தலத்து மூலவர் தேவாதி ராஜப் பெருமாள், சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர திருமேனியுடன் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடது புறம் கருடாழ்வாரும். வலதுபுறம் பிரகலாதனும் இருக்கிறார்கள். உக்கிரமாகக் காட்சியளித்த பெருமாளிடம் பிரகலாதன், சாந்த சொரூபியாக, கண்ணன் உருவில் காட்சி தர வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து, இத்தலத்தில் பிரகலாதனை அருகில் வைத்துக் கொண்டு பெருமாள், கண்ணனாக சாந்த சொரூபியாக காட்சி அளிக்கிறார். இத்தலத்தில் மட்டும்தான் பிரகலாதன் கருவறையில் பெருமாள் அருகில் இருந்து காட்சி தருகிறார்.
இந்தக் கோவிலில் கருட விமானம் உள்ளது மற்றொரு சிறப்பாகும். பொதுவாக எல்லா பெருமாள் கோவில்களிலும், சுவாமியின் எதிரே உள்ள கருடாழ்வார், இந்த தலத்தில் மட்டும் சுவாமிக்கு விமானம் கொடுத்து சுவாமிக்கு பக்கத்திலேயே அருள் பாலிக்கிறார். இப்படி பிரகலாதனும் கருடாழ்வாரும் பெருமாளின் அருகில் இருந்து காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.
ஆமருவியப்பன் என்னும் திருநாமம் அமைந்த புராணம்
இத்தலத்து உற்சவ பெருமாளின் திருநாமம் ஆமருவியப்பன். ஆமருவியப்பன் என்றால் பசுவை மேய்ப்பவன் என்று பொருள். ஒருமுறை, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினார்கள். இந்த ஆட்டத்துக்கு நடுவராக பார்வதிதேவியை நியமித்தார்கள். காய் உருட்டும் போது, சகோதரனான பெருமாளுக்கு சாதகமாக பார்வதிதேவி தீர்ப்பு கூற, அதனால் கோபமுற்ற சிவபெருமான், பார்வதிதேவியை பூவுலகில் பசுவாக அவதாரம் எடுக்க சாபமிட்டார். அதன்படி உமையவள் பசுவானாள். இதைக் கண்டு கலங்கிய சரஸ்வதிதேவியும் லக்ஷ்மிதேவியும் உமையவளுக்குத் துணையாக இருக்க முடிவு செய்து, பசுவாக மாறினார்கள். மூவரும் பசுவாக, பூலோகத்தில் இருந்தபடி, சிவனாரையே நினைத்து வேண்டினார்கள். அவர்களுக்கு மேய்ப்பராக பெருமாள் உடனிருந்து காத்தார். அதனால் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு 'ஆமருவியப்பன்' என்னும் திருநாமம் அமைந்தது என்கிறது தல புராணம்.
தேரழுந்தூர் என்று ஊர் பெயர் வந்ததன் பின்னணி
இத்தலத்தில் இறைவன் மாடு மேய்த்துக்கொண்டு இருந்த போது உபரிசரவசு என்ற தேவலோக அரசன் ஆகாய மார்க்கமாக தேரில் சென்றான். தன் தேரின் நிழல் , எதன் மீது விழுந்தாலும் அவை கருகிவிடும் வரம் பெற்றவன் அவன். இத்தலத்தில் பெருமாள் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது, அந்தத் தேரின் நிழல்பட்டு, பூமியில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால் இறைவன் பசுக்களைக் காப்பாற்ற அந்தத் தேரை தடுத்து நிறுத்தி, பூமியில் அழுத்தினார் . இவ்வாறு தேர் பூமியில் அழுந்திய ஊரே தேரழுந்தூர் என்று அழைக்கப்படுகிறது.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் இத்தலத்தில் பிறந்தவர்.
பிரார்த்தனை
இத்தலத்து தேவாதி ராஜபெருமாளை வணங்கினால், காணாமல் போனவர்கள் வீடு திரும்பவும், தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும், மேல் அதிகாரிகளின் அராஜகத்தில் இருந்து விடுபடவும், திருமணத்தடை நீங்கவும் வழி பிறக்கின்றது.
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோவில்
தாயார் பெருமாளைத் தாங்கியிருக்கும் திவ்ய தேசம்
திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் (திரிவிக்கிரம நாராயணர்) திருக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.இத்திருத்தலம் சீர்காழியில் அமைந்துள்ளது.மூலவர் திரிவிக்கிரம நாராயணர் (நின்ற திருக்கோலம்). உற்சவர் தாடாளன். தாயார் லோகநாயகி.
உரோமச முனிவர் தவமிருந்து பெருமாளின் திரிவிக்கிரம அவதாரக் காட்சி கண்ட திருத்தலம். மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார்.
பெருமாள் தன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கியிருப்பது போல தாயார் லோகநாயகி, திரிவிக்கிரமரை பதக்கமாக தன் மார்பில் தாங்கியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது ஐதீகம். பெண்கள் இவரை வணங்கினால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.
பரிமள ரங்கநாதர் கோவில்
ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி.
பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதியாக கருதப்படுகிறது. இத்தலத்தில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில், இந்த ஊரில் உள்ள சிவா, விஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.
வைத்தீஸ்வரன் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி
கும்பகோணம் = சிதம்பரம் நெடுஞ்சாலையில், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம் வைத்தீஸ்வரன் கோவில். இறைவன் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவி தையல்நாயகி.
முருகப்பெருமான் இங்குப் பேரழகுடன் முத்துக்குமார சுவாமி என்ற திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குமரகுருபரர், 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' என்ற நூலைப் படைத்துள்ளார். இந்தத் தலத்தில் நடைபெறும் அர்த்த சாமபூஜை சிறப்பு வாய்ந்தது. முருகனுக்குப் புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம் முதலியவை சாத்தி தீபாராதனை செய்கிறார்கள். முருகனைப் பிள்ளைத்தமிழ் பாடி தாலாட்டி பள்ளி கொள்ள செய்த பின்னரே சுவாமி அம்பாளுக்கு அர்த்த சாமபூஜை நடைபெறுகிறது.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப் பெருமான் குழந்தை வடிவாக, இத்தலத்தில் அருள்பாலிப்பதால் அவரை குதூகலம் செய்வதற்காக தினமும் வீதியுலாவின் போது, நரி ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முருகக் கடவுள் யானையை விரட்டுவதும், யானை அவரை விரட்டுவதும் ஆகிய நரி ஓட்டம் பிரபலமாக நடைப்பெறுகிறது. பெரியவர்கள் சிறுகுழந்தையைச் சிரிக்க வைக்க நரி மிரட்டல் செய்வது போல இங்கு முருகனுக்காக நரிஓட்டம் நடத்தப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை காண பெருந்திரளான மக்கள் இத்தலத்தில் கூடுகிறார்கள்.