கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில்
மன்மதனுக்கு கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்கிய காமுகாம்பாள்
கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலம்
மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16. கி.மீ. தொலைவிலும், திருமணஞ்சேரியில் இருந்து 3.கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் காமுகாம்பாள். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோவில்.
ஒரு சமயம் கயிலாயத்தில் தவத்திலிருந்த சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் பக்கம் திருப்புவதற்காக, சிவபெருமான் மீது காமதேவனாகிய மன்மதன் மலர்க்கணையை ஏவினான். இதனால் தவம் கலைந்து கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்து சாம்பலாக்கினார். தனது கணவனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து வருந்திய ரதி தேவி, பொன்னூர் என்னும் இடத்தில் ஒரு தவச்சாலை அமைத்து தவமிருந்தார். பிறகு சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து அவரை தரிசித்த ரதி தேவி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி சிவபெருமானிடம் மன்றாடினாள்.
ரதி தேவியின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பிக்கிறார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த துர்காபுரீஸ்வரர் தலத்தில் உறையும் ஈசனை கண்டு வணங்கி, பார்வதி தேவியையும் வழிபடுகிறான். மன்மதனின் பக்தியைக் கண்டு மனம் இரங்கிய பார்வதி தேவி, அவனுக்குக் தன் கையில் இருந்த கரும்பு வில்லையும், புஷ்ப பானங்களையும் மீண்டும் வழங்குகிறார். காமனாகிய மன்மதனுக்கு அருள்பாலித்ததால் இந்தத் தலத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. எல்லோருடைய காமமான துன்பத்தை போக்குவதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டது. மேலும், ரதிதேவிக்கு மாங்கல்ய பாக்கியத்தை அளித்தவள் இந்த ஸ்ரீகாமுகாம்பாள் அம்பிகை.
மன்மதனுக்கு அருள்பாலித்த தலமாதலால் இது கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக் கொள்ளும் தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.