புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
புற்று வடிவில், நிறைமாதக் கர்ப்பிணி போல் காட்சி தரும் மாரியம்மன்
சென்னையில் இருந்து 38 கி.மீ. தொலைவில், திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது புட்லூர் புற்று மாரியம்மன் ஆலயமான, அங்காள பரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே புட்லூரில், பூங்காவனத்தம்மன் என்ற பெயரில் அருள் பாலிக்கின்றாள்.
பொதுவாக அம்மனை நாம் நின்ற திருக்கோலத்திலோ அல்லது அமர்ந்த திருக்கோலத்திலோ தரிசிப்பது வழக்கம். ஆனால் இத்தலத்தில் புற்று வடிவில் எழுந்தருளி இருக்கும் பூங்காவனத்தம்மன், ஓர் கர்ப்பிணிப் பெண் போல, மல்லாந்து காலை நீட்டி படுத்த நிலையில், வயிறு நிறைமாதக் கர்ப்பிணி போல் இருக்க, வாய் பிளந்தபடி அருட்காட்சி தருகிறாள். இந்த சுயம்பு புற்று முழுவதும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகின்றாள். இந்த மண்புற்று மாதாவுக்கு அப்பால், அங்காள பரமேஸ்வரி சூலம் தாங்கி கருவறையில் எலுமிச்சை மாலைகள் தாங்கி அருள் பாலிக்கின்றாள்.
பிரார்த்தனை
பொதுவாக, இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், தினமும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து வழிபட வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வதன் மூலம், அவர்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.
அம்மன் அருளால் கர்ப்பம் தரிக்கும் பெண்கள் தங்களுக்கு சீமந்தம் நடப்பதற்கு முன் அம்மனுக்கு முதலில் சீமந்த வழிபாடு நடத்துகின்றனர். ஐந்து, ஏழு, ஒன்பது மாதங்களில் இந்த சீமந்தவழிபாடு நடத்தப்படுகின்றது. இந்த வழிபாட்டில் வளையல், பூச்சூட்டி சடை முடித்து ஏழுவிதமான கலவை சாதங்கள் செய்து அம்மனுக்கு படையல் இடுகின்றனர்.
ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் காட்சி தரும் தலம்
சென்னை – கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டு சாலையில் வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம். ஆளும் கோலத்தில் முருகன் இங்கு இருப்பதால் 'ஆண்டார்குப்பம்' என அழைக்கப்படுகிறது .
இங்கு முருகன் அதிகார தோரணை கொண்ட வடிவத்தில் நமக்கு காட்சி தருகிறார் .பிரணவத்திற்கு பொருள் கூறும்படி அதிகாரத்துடன் இடுப்பில் கைவைத்து கேள்வி கேட்க்கும் தோரணையில் அவரது தோற்றம் இருக்கிறது . பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை, முருகன் சிறையில் அடைத்ததோடு அல்லாமல் படைப்பு தொழிலையும் தானே எடுத்து கொண்டார்.
குழந்தை, இளைஞர்,முதியவர் என்ற் மூன்று கோலத்தில் காட்சி தரும் முருகன்
முருகன் இங்கு வேல் ,வஜ்ரம் , சக்தி என எவ்வித ஆயுதம் இல்லாமல் காட்சி தருகிறார் . சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. மனிதர்களின் வாழ்க்கையில், சிறுவயதில் குழந்தையாகவும், நடுவயதில் இளைஞராகவும், முதுமையில் முதியவராக மாறுவதே காலசக்கரத்தின் பணி. அதனை போன்று இத்திருத்தலத்தில் காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவராகவும் மூலவர் முருகபெருமான் காட்சி அளிப்பது உலகில் இங்கு தவிர வேறு எங்கும் இல்லை என்பது இத்திருக்கோயிலின் சிறப்பு.
பிரம்மா இங்கு முருகனுக்கு எதிரில் நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார் . இதில் பிரம்மாவிற்கு உருவம் இல்லை அவருக்குரிய தாமரை , கமண்டலம் ,அட்சரமாலை மட்டும் இருக்கிறது . இங்கு முருகன் யானை வாகனத்துடன் காட்சி தருகிறார் . இத்தலத்தை பற்றி அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடியுள்ளார் .
இத்தலத்து முருகனை நாம் வந்து வணங்கினால் பொறுப்பான பதவி ,அதிகார பதவிகள் மற்றும் புத்திசாலியான குழந்தைகள் ஆகியவை கிடைக்கும் .
தட்சிணாமூர்த்தி கோவில்
வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை மாநகரத்தின் திருவொற்றியூர் பகுதியில் தனிக்கோவில் கொண்டு தட்சிணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.
எல்லா கோயிலிலும் சுற்றுப்பகுதியில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும் தட்சிணா மூர்த்தி இந்த கோயிலில் மூலவராக அதுவும் வடக்கு நோக்கி அருள்பாலிப்பது, வேறெங்கும் காண முடியாத அமைபபு. இதனால், இத்தலம் 'வட குருதலம்' என அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி காட்சியளிப்பதன் அடிப்படையில் இவ்வாறு பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கிறார்கள். குபேரனின் திசையான வடக்கு நோக்கியிருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
மூலவர் தட்சிணாமூர்த்தி வலது கையில் அக்னி, இடக்கையில் நாகம் வைத்து, காலுக்கு கீழே முயலகனை மிதித்தபடி சுவாமி காட்சி தருகிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தியின் கீழே சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்கள் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு மூலவரின் பீடத்தில் 18 மகரிஷிகள் சீடர்களாக இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். உற்சவர் தட்சிணாமூர்த்தியின் பீடத்தில் யானை வணங்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது
வீடு கட்ட, புது நிலம் வாங்க விரும்புபவர்கள் கோவில் வளாகத்தில் கற்களை வீடு போல, அடுக்கி வைத்து வேண்டிக் கொள்கிறார்கள். கல்வி, கலை, இலக்கியம், இசை போன்ற துறைகளில் சிறப்பிடம் பெற இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணத்தடை நீங்க, ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சையில் நெய் தீபம் ஏற்றியும் வழிபடுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியிடம் வேண்டிக்கொள்பவர்கள் கொண்டை கடலை மாலை அணிவித்து, சன்னதி முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.