நத்தம் மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

நத்தம் மாரியம்மன் கோவில்

மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மாரியம்மனின் அபூர்வ தோற்றம்

திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவில் இருக்கின்றது.

கருவறையில் மாரியம்மன், எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இப்படி மயில் மேல் அமர்ந்து மாரியம்மன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எந்த தலத்திலும் நாம் அம்மனை இப்படி மயில் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.

பிரார்த்தனை

குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.

நேர்த்திக் கடன்

தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல், கழுகு மரம் ஏறுதல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக செய்கின்றனர்.

சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரத்தை வழுவழுவென செதுக்கி, அந்த மரத்தின் மேல் விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களை பூசுவார்கள். அந்த மரத்தில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். இந்த நேர்த்திக் கடனுக்கு கழுகு மரம் ஏறுதல் என்று பெயர்.

இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் பூக்குழித் திருவிழா, தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூக்குழிக்கு ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் வெட்டப்படும். அதற்கு மேல் ஒரு ஆள் அடி உயரத்திற்கு கட்டைகள் அடுக்கப்பட்டு பூக்குழி அமைக்கப்படும். சுமார் 45,000 பேர் தங்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழியில் இறங்குவார்கள்.

கொங்குநாடு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு அடுத்து, இக்கோவிலில் தான் அதிக அளவில் மக்கள் பூக்குழி இறங்குவார்கள்.

Read More
அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்

கைகளில் அட்சய பாத்திரம் ஏந்தி நிற்கும் மூன்று அம்பிகையர்

திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் தாடிக் கொம்பு உள்ளது. இவ்வூரில் இருந்து ஒரு கி.மீ., சென்றால் அகரம் முத்தாலம்மன் கோவிலை அடையலாம். முத்தாலம்மன் சக்தி வாய்ந்த நாட்டுப்புற பெண் தெய்வமென்பது நம்பிக்கை. கொங்கு நாட்டில் எல்லா கிராமங்களிலும் முத்தாலம்மன், குலதெய்வமாக வணங்கப்படுகிறார். முத்தாலம்மனுக்கு தோன்றிய முதல் இடமாக கருதப்படுவதால், தமிழ் எழுத்துக்களில் அகரமே முதன்மை என்பதன் அடிப்படையில், ஊருக்கு 'அகரம்' என்ற பெயர் ஏற்பட்டது.

கருவறையில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் நின்ற கோலத்தில் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். இதனால் இவர்களிடம் கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பக்தர்கள் வேண்டுதலுக்கும், கோவில் திருவிழா நடத்துவதற்கும் பல்லி சத்தம் கேட்கும் நடைமுறை

கோவிலில் கருவறைக்கு இரு பக்கங்களிலும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இந்த கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, புதிதாகச் செயல் தொடங்க, நிலம், வீடு குறித்த பிரச்னைகள் தீர பூதராசாவிடம் வேண்டுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் வேண்டுதல்களைச் சொல்வர். அந்த சமயம், பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை திருவிழா நடத்தப்படும். முன்னதாக ஆவணி மாதம் 10-ம் தேதி அல்லது அதன் பிறகு வரும் வெள்ளிக்கிழமையன்று அம்மன் சன்னதியில் உத்தரவு கேட்கும் வைபவம் நடைபெறும். அப்போது கோயில் பிரகாரத்தில் உள்ள பூதராணி சிலை பக்கமோ அல்லது வடக்கு பிரகாரத்தில் உள்ள திருவாச்சி சிலை பக்கமோ பல்லி சத்தம் கேட்கும். அந்த சத்தத்தையே அம்மனின் உத்தரவாக நினைத்து திருவிழா நடத்தப்படுகிறது. அதேபோல் அம்மனிடம் உத்தரவு கேட்டு வேண்டும் போது, தெற்கு பிரகாரத்தில் உள்ள ஆண்பூத ராஜா சிலை இருக்கும் இடத்தில் பல்லி சத்தம் கேட்டால் அம்மன் உத்தரவு அளிக்கவில்லை என கருதப்பட்டு திருவிழாவும் நடத்தப்படாது. மேலும் பல்லி சத்தம் கொடுக்கவில்லை என்றாலும் திருவிழா நடத்தப்படாது.

அம்மன் உத்தரவு கிடைத்ததும், ஐப்பசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையை அடிப்படையாக கொண்டு அதற்கு முந்தைய 10-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாரம்பரிய முறைப்படி அடிப்படையில், திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த நாள் திங்கட்கிழமை முதல் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் இரவு 8 மணிக்கு உற்சவர் மற்றும் அம்மனின் பண்டார பெட்டி சன்னதியில் இருந்து புறப்பட்டு, கொலுமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

மண்ணால் உருவாக்கப்படும் அம்மனின் உற்சவமூர்த்தி

உற்சவ காலத்தில் அம்மனின் பிறப்பு மண்டபத்தில் சர்க்கரை, முட்டை, களிமண் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு விழா சாட்டப்பட்ட 6ம் நாள் உற்சவ கால அம்மன் உருவாக்கப்படுகிறது. அதையடுத்து உற்சவ கால அம்மன் கண்திறப்பு மண்டபத்துக்கு எடுத்துச்சென்று அம்மனின் கண்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி கொலு மண்டபத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடத்தப்படும்.

அப்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அத்துடன் தங்களது நிலத்தில் விளைந்த கம்பு, சோளம், நெல், மக்காச்சோளம், வாழைப்பழம் ஆகியவற்றை சூறையிட்டும், கை, கால் சுகம் அடைந்தோர் மண்ணால் செய்யப்பட்ட உடல் உறுப்பு பொம்மைகளை காணிக்கையாக அளிப்பார்கள். அதேபோல் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

பத்தாம் நாளில் மண்ணால் செய்யப்பட்ட அம்பிகை, சொருபட்டை என்னும் விமானத்தில் பூஞ்சோலை எனப்படும் மைதானத்திற்கு செல்வாள். மழையில் கரையும் விதமாக அமைக்கப்படும் விமானம் இது. மைதானத்தில் சிறப்பு பூஜை செய்தபின், அம்பிகையை அங்கேயே வைத்து விடுவர். அதன்பின் மூன்று, நான்கு நாட்களுக்குள் மழை பெய்து சிலை கரைந்து விடும்.

Read More
குழந்தை வேலப்பர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

குழந்தை வேலப்பர் கோவில்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது.இந்தியாவில் இரண்டு கோவில்களில் மட்டுமே நவபாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான முருகன் சிலைகள் உள்ளன, அவற்றில் ஒன்று பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை. மற்றொன்று பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.

பழனி மலை முருகன் நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் பூம்பாறை முருகன் சிலையையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவரீதியாக பயன் அடைந்த பக்தர்களுக்குத்தான் தெரியும்.

பழனி மலைக்கும், பூம்பாறை மலைக்கும் நடுவில் உள்ள யானை முட்டி குகையையில் சித்தர் போகர் அமர்ந்து, தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர். அக்கோவிலை இறைவனிடம் வேண்டி சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு.

பின்னர் சித்தர் போகர் மறுபடியும் சீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும், ஆதிபராசக்தியின் துணைகொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலைநிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார், அந்த சிலைதான் பூம்பாறை மலையுச்சியிலுள்ள, சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து, சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார்.

அருணகிரிநாதரை குழந்தை வடிவில் வந்து காப்பாற்றிய முருகன்

ஒரு சமயம் அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கி விட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, குழந்தையும் தாயும்தான் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம்.

இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை அறிந்த அருணகிரிநாதர், குழந்தை வேடம்த்தில் வந்து தன் உயிரை காப்பாற்றியது முருகனே என்று உணர்ந்தார். அன்று முதல் இத்தலத்து முருகன்,குழந்தை வேலப்பர் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

Read More