சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்
மிகச் சிறிய கருவறை கொண்ட மாரியம்மன் கோவில்
மாரியம்மனுக்கு நைவேத்தியங்களை ஊட்டி விடும் வித்தியாசமான நடைமுறை
சேலம் மாநகரின் மையப் பகுதியில் உள்ளது கோட்டை மாரியம்மன் கோவில். சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன்களில் கோட்டை மாரியம்மன் தான் பெரியவள். எட்டு மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால், 'எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இந்தக் கோவில் மணிமுத்தாறு நதிகரையில் அமைத்துள்ளது,
இந்தக் கோவிலின் கருவறை மிகவும் சிறியது.. தமிழ்நாட்டிலேயே சிறிய கருவறை உள்ள அம்மன் கோவில் இதுவாகத்தான் இருக்கும். எவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ளவர்களும் குனிந்து மண்டியிட்டு தலை வணங்கி கும்பிடவேண்டும் என்பதற்காக இவ்வாறு இருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது. கருவறையில் மாரியம்மனின் சிரசில் ஜூவாலா கிரீடம், அக்னி ஜூவாலையுடன் ஒளி வீசிக் கொண்டு இருக்கிறது. அக்கிரீடத்தில் நாகம் படம் எடுத்துள்ளது போன்ற அமைப்பு உள்ளது. நான்கு கரங்களுடன் அன்னை விளங்குகிறாள். வலது மேற்கரத்தில் நாகபாசமும், உடுக்கையும் ஏந்தி இருக்கிறாள். வலது கீழ்க்கரத்தில் திரிசூலம் விளங்குகிறது. இடது மேற்கரத்தில் அங்குசமும், அமுத சின்னமும் ஏந்தியவளாய் வீற்றிருக்கிறாள். இடது கீழ்கரத்தில் கபாலம் காணப்படுகிறது. அன்னை வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு, இடது காலை மேல் யோகாசனமாக மடித்து வைத்துக் கொண்டு ஈசான திசை நோக்கி எழுந்தருளி இருக்கின்றாள்.
பொதுவாக எல்லா கோவில்களிலும், பூஜா காலங்களில் நைவேத்தியம் தெய்வங்களுக்கு முன் படைக்கப்படும். ஆனால் இக்கோவிலில் நைவேத்தியம், மாரியம்மனுக்கு படைக்கப்படுவதில்லை. மாறாக நைவேத்தியத்தை எடுத்து மாரியம்மனுக்கு ஊட்டியே விடப்படுகிறது என்பது சிறப்பம்சம். இந்த நடைமுறை வேறு எந்த கோவிலிலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
பிரார்த்தனை
மண் உரு சாத்துதல் : அம்மை நோய் கண்டவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கிச் சென்று நோய் குணமான பின்பு நேர்த்திக்கடனாக பொம்மை உருவங்களை தம் தலை மீது சுமந்து கொண்டு, கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும்.
கண்ணடக்கம் சாத்துதல் : கண்ணில் பூ விழுந்தாவோ அல்லது வேறு சில நோய்கள் ஏற்பட்டாலோ அம்மனிடம் வேண்டிக் கொண்டால் குணமடையும். நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பொன்னாலோ அல்லது வெள்ளியாலோ தகடுகள், கண்ணடக்கம் செய்து அம்மனுக்கு சாற்றுவார்கள்.
உருவாரம் சாத்துதல் : நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனை வேண்டிக்கொண்டு குணமாகிய பின்பு நோயின் காரணமாக எந்த பகுதி பாதிக்கப்பட்டதோ அதே போன்ற உருவ பொம்மையை காணிக்கையாக அளிப்பார்கள்.
அடியளந்து கொடுத்தல் : பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, மூன்று முறை கோவிலை சுற்றி வருகின்றனர். இதற்கு அடியளந்து கொடுத்தல் என்று பெயர்.
உப்பு மிளகு போடுதல் : பக்தர்கள் தங்களுக்கு ஏற்பட்ட குறையோ அல்லது நோயோ நீங்கிட வேண்டும் என்று வேண்டிக் கொள்பவர்கள், குங்குமம் கலந்த உப்பை பலி பீடத்தின் மீது போட்டு நீர் ஊற்றுவார்கள். நீருடன் கலந்து உப்பு எவ்வாறு கரைந்து விடுகிறதோ அதேபோன்று நோயும் நீங்கிவிடுவதாக ஐதிகம்.
ஆடித் திருவிழா
கோட்டை மாரியம்மன் கோவிலின் மிகப்பெரிய விழா, ஆடித் திருவிழா ஆகும். இவ்விழாவின் போது பூச்சாட்டுதல் என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த பூச்சாட்டுதலின் போது சேலத்தில் உள்ள ஏனைய ஏழு மாரியம்மன் கோவில்களுக்கும் இங்கிருந்துதான் பூ எடுத்துச் சென்று, பிற மாரியம்மன் கோவில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நாம மலை சீனிவாசப் பெருமாள் கோவில்
பூஜையின்போது திருமுகம் வியர்க்கும் பெருமாள்
சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டும் பெருமாள்
திருப்பதி ஏழுமலையான் தினமும் உறங்கி ஓய்வெடுக்க வரும் தலம்
சேலம் மாவட்டம் நாம மலையில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோவில். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் சீனிவாசப் பெருமாள், நின்ற கோலத்தில் தாயார் ஸ்ரீதேவி-பூதேவி ஆகியோருடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் நிறைய
திருப்பணிகள் செய்திருக்கிறார். மலை அடிவாரத்தில் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளைத் தரிசிக்கும்போது, இந்தக் கிணற்று நீரை தீர்த்தமாகத் தருகிறார்கள். மூலிகைத் தன்மை கொண்ட இந்த தீர்த்தத்தை, பக்தர்கள் நோய் தீர்க்கும் அமிர்தமாகக் கருதுகின்றனர்.
இக்கோவிலில் பூஜையின்போது மூலவர் சீனிவாசப் பெருமாளின் திருமுகத்தில் வியர்ப்பது ஒரு அதிசயமான காட்சியாகும். மேலும் பெருமாள் இங்கு தரிசிக்கும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிரிப்பு, கோபம் என மாறுபட்ட முகபாவங்களைக் காட்டுவதும் ஒரு ஆச்சரிய நிகழ்வாக இருக்கின்றது. மேலும் திருப்பதி மலைவாழும் ஏழுமலையான், தினமும் தமது சயன நேரத்தில் இங்கு வந்து உறங்கி ஓய்வெடுத்துச் செல்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தரின் வேண்டுதலுக்கு ஏற்ப பால் திரிந்து தயிராகும் அதிசயம்
ஒருமுறை இந்தக் கோவிலின் அர்ச்சகர் ஒருவரது கனவில் தோன்றிய பெருமாள், 'ராமானுஜர் இல்லாததே இத்தலத்தின் ஒரே குறை' என்றாராம். பக்தர்கள், அந்தக் குறையைக் களையும் விதமாக, ஸ்ரீராமானுஜர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.
வடக்கு நோக்கி அருளும் இந்த ராமானுஜரின் திருமுன் பாலைச் சமர்ப்பித்து சில நிமிட வேண்டுதலுக்குப் பிறகு, பாத்திரத்தை திறந்தால் பால் திரிந்து தயிராகியிருக்குமாம். இப்படி பால் திரிந்து போனால், பக்தர்களுக்கு ராமானுஜரின் திருவருள் பரிபூரணமாகக் கிடைத்துவிட்டது என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்திருத்தலத்துக்கு வரும் பக்தர்கள் மூலவரை வணங்கிய பின், தங்கள் வேண்டுதல் நிறைவேறுமா என்பதை அறிய, திருவுளச் சீட்டு போட்டு இறைவனிடம் உத்தரவு கேட்கின்றனர்.
ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில்
காசிக்கு ஈடான அஷ்ட பைரவர் கோவில்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே அமைந்துள்ளது ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. மன்மதன் வழிபட்டதால் இத்தலத்து இறைவனுக்கு காமநாதீஸ்வரர் என்று பெயர். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்.
அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர் என அஷ்ட ( எட்டு) பைரவர்கள் இக்கோவிலில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோவில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோவிலாக ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் கோவில் கருதப்படுகிறது. காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள், இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடான பலனைப் பெறலாம்.
தேய்பிறை அஷ்டமி திதியன்று அஷ்டபைரவர்களுக்கு நடத்தப்படும் வழிபாடு
இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில், நள்ளிரவில் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது. இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து. வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில்
ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் அபூர்வ கோலம்
சேலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, அயோத்தியாபட்டணம் கோதண்டராமர் கோவில். ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டுக் கொண்டு, அயோத்திக்கு முடி சூட்டிக்கொள்ள திரும்பும் வழியில், ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தந்த தலம் இது.
ராமபிரான், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷ்ணனின் பிரார்த்தனையை ஏற்றும் இந்த இடத்தில், சீதாபிராட்டியுடன் சேர்ந்து பட்டாபிஷேகக் கோலத்தை காட்டியருளினார். ஆக, அயோத்தியில் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருவதற்கு முன்பாகவே, இங்கு முதன்முதலாக பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தந்ததால்தான் இவ்வூர் அயோத்தியா பட்டணம் என்று அழைக்கப்படுகின்றது.
கருவறையில் ராமரும் சீதையும் கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றனர். அவர்களின் இத்தகைய தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. பொதுவாக ராமரின் வலது புறத்தில் எழுந்தருளும் சீதாபிராட்டி, இத்தலத்தில் இடதுபுறம் வீற்றிருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். ராமர் மற்றும் சீதைக்கு பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோர் சேவை சாற்றியபடியும், அங்கதன், சுக்ரீவன், ஆஞ்சநேயர் ஆகியோர் ராமபிரான்-சீதாதேவியை சேவித்தபடியும் உள்ளனர்.
இக்கோவில் சிற்பங்கள் மிக்க கலை நயமும், அபார அழகும் கொண்டவையாக இருக்கின்றன. இக்கோவில் சிற்ப வேலைப்பாடுகள், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு முருகன் கோவில் ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ள அழகிய சிற்ப வேலைப்பாடுகளுக்கு இணையாக உள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள இசைத் தூண்கள், ராமர் பட்டாபிஷேக சிற்பம், குதிரை, யானை, யாழி, சிங்கம் சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
பிரார்த்தனை
இந்த ஆலயத்துக்கு வந்து கோதண்ட ராமசுவாமியை வணங்கினால், திருமணத் தடை உள்ளவர்களுக்குத் தடை நீங்கி, தாலி பாக்கியம் கிடைக்கும்; ராகு கேது தோஷம் நிவர்த்தி ஆகும்; வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்; சொத்துத் தகராறுகள் நிவர்த்தி ஆகும்; குடும்பப் பூசல்கள் நீங்கும்; குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஊத்துமலை பாலசுப்ரமணியர் கோவில்
மயிலின் கழுத்தை வளைத்து பிடித்திருக்கும் பாலமுருகனின் அபூர்வ தோற்றம்
முருகன் யோக வேலை ஏந்திய ஒரே தலம்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது பாலசுப்ரமணியர் கோவில். மலைக்கு செல்ல சாலை வசதி உள்ளது. இத்தலம் சுமார் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது. அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்.
இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். பாலசுப்ரமணியர், குழந்தை வடிவில் காட்சியளிக்கிறார், முருகன், மயிலின் கழுத்தைப் பிடித்தபடி நிற்கும் தோரணையானது தனித்துவமானது. வேறு எந்த தளத்திலும் முருகனை இந்தக் கோலத்தில் நாம் தரிசிக்க முடியாது. முருகன் கையில் இருக்கும் வேல் யோக வேல் என்று அழைக்கப்படுகிறது. மற்ற தலங்களில் சக்திவேல், வைரவேல், வஜ்ரவேல், வீரவேல் போன்ற வேல்களை முருகன் தாங்கி பிடித்தாலும், இத்தலத்தில் மட்டும் தான் யோக வேலை ஏந்தி இருக்கிறார். இது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து, அகத்திய முனிவர் பூஜை செய்திருக்கிறார். இப்படி கல்லால் ஆன ஸ்ரீ சக்கரம், இங்கும், அரித்துவாரிலும் மட்டுமே உள்ளது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. சப்த ரிஷிகளும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் இத்தளத்தில் வழிபடுவதாக ஐதீகம். அந்த தினங்களில் நாமும் வழிபட்டால், அவர்களது ஆசிர்வாதத்தை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்.
ஆத்தூர் வீர ஆஞ்சநேயர் கோவில்
வடக்கு திசை பார்த்தபடி எழுந்தருளி இருக்கும் அபூர்வ ஆஞ்சநேயர்
சேலத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது வீர ஆஞ்சநேயர் கோவில்.
இக்கோவிலில் ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக எழுந்தருளி இருக்கிறார். இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. இராமபிரான் இலங்கைக்குச் செல்ல பாலம் அமைத்த போது, மிகப்பெரிய பாறைகளை எடுக்க வேண்டியிருந்தது. அதை அகழ்ந்து தோண்ட பஞ்சமுக ஆஞ்சநேயராக தன்னை உருமாற்றிக் கொண்டார் ஆஞ்சநேயர். அதில் ஒன்று வராஹ முகம். பன்றி முகத்தைக் கொண்டு பூமியை அகழ்ந்து தோண்டி, பாறைகளைப் பெயர்த்தெடுத்தார். அளவில் மிகவும் சிறிய இவரை வசிஷ்ட முனிவர் வணங்கிச் சென்றுள்ளார். இங்கு சுவாமிக்கு பூஜை செய்யப்பட்ட 'முடிகயிறு' என்னும் 'மஞ்சள் கயிறை' பிரசாதமாக தருகின்றனர். இதனைக் கட்டிக்கொண்டால் வாழ்வில் மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
ராமர் சீதையைத் தேடி வரும்வழியில் இத்தலத்துக்கு அருகில் இருக்கும் மலைக்கு வந்திருந்தார் அப்போது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். அப்போது ஆஞ்சநேயர் வடக்கு பக்கமாக திரும்பி ராமரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.
சனிதோஷ நிவர்த்தித் தலம்
சூரியனின் மகன் சனி, சனியின் மகன் குளிகன். ஆஞ்சநேயர், சூரியனின் சிஷ்யன். இவரே சனிக்கு அதிபதியான பெருமாளின் ஆஸ்தான சீடர். எனவே, இவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு சனிக்கிழமைகளில் குளிகை நேரத்தில் சனிதோஷ பரிகாரபூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. இப்பூஜையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வணங்கினால் சனிதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டீஸ்வரர் கோவில்
சூலத்தில் காட்சி தரும் அபூர்வ அர்த்தநாரீஸ்வரர்
சேலம் சென்னை நெடுஞ்சாலையில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது பெத்தநாயக்கன்பாளையம் என்னும் ஊர். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆட்கொண்டீஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. கருவறையில் லிங்கத்தின் கீழ் இருக்கும் ஆவுடையார், தாமரை மலர் அமைப்பில் இருக்கிறது. லிங்கத்தின் நடுவில் நெற்றிக்கண் இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அநியாயம் செய்பவர்கள் பற்றி இவரிடம் முறையிட்டால், அவர்களைத் தண்டிப்பதுடன், தன்னை வணங்கும் பக்தர்களின் மனதை ஆட்கொள்வதால் இவரை 'ஆட்கொண்டீஸ்வரர்' என்கின்றனர்.
சூல அர்த்தநாரீஸ்வரர்
சிவபெருமான், சக்தியும் சிவமும் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதற்காக, தனது இடப்பாகத்தில் பார்வதிக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். மேலும் பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், சக்தியிலிருந்து தோன்றுவதுதான் சிவம் என வலியுறுத்தும் விதமாக சக்தியின் ஆயுதமான சூலத்தின் மத்தியில் இருந்தும் காட்சி தருகிறார். இப்படி சூலத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் விசேஷம். ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அனைவரும் சக்தி எனும் பெண்ணிலிருந்துதான் தோன்றுகின்றனர் என உணர்த்தும் விதமாக இக்கோலத்தில் இருக்கிறார்.
தாயை விட்டு பிரிந்துள்ள பிள்ளைகளும், பிரிந்த தம்பதிகளும் இவரை வணங்கிட பிரச்னைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும் என்பது நம்பிக்கை.
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒன்றாக சேர்ந்திருக்கும் அபூர்வக் கோலம்
சேலம்-மேட்டூர் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் தாரமங்கலம். இறைவன் திருநாமம் கைலாசநாதர். இறைவி சிவகாமியம்மை.
இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன் ஒரே சிலையில் காட்சியளிப்பது வித்தியாசமான திருக்கோலம் மற்றும் அபூர்வமான விஷயமாகும். அதிலும் மகாவிஷ்ணு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார். பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த 5 முகங்களுடன் காட்சியளிக்கிறார். விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக் கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சி யளிக்கிறார்.
இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ராஜகணபதி கோவில்
தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தரும் விநாயகர்
சேலம் கடைவீதி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது.400 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டது. மன்னர் காலத்தில் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால் 'சைலதேசம்' என்ற பெயர் பெற்ற பகுதிதான் தற்போதைய சேலம். இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவதால் 'ராஜ கணபதி' என அழைக்கப்படுகிறார்.
திருமண வரவேற்ப்பு கோலத்தில் அபூர்வ காட்சி தரும் வல்லப கணபதி
பொதுவாக எல்லா விநாயகர் ஆலயங்களிலும், விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மோற்சவமாக கொண்டாடுவார்கள் ஆனால் இங்கு ஜன உற்சவம் ஆக கொண்டாடப்படுகிறது. ஜன உற்சவம் என்பது, பிறந்த நாள்(சதுர்த்தி) முதற் கொண்டு 12 நாட்கள், கால் மண்டலமாக கொண்டாடப்படுவது.
ஜன உற்சவத்தின் முதலாம் நாள் தங்க கவசம் சாற்றபட்டு ராஜ அலங்கரத்திலும் மற்ற நாட்கள் சிறப்பு அலங்காரத்திலும் காட்சி தருகிறார். 3ம் நாள் உலகில் எங்கும் இல்லாத வகையில் திருமண வரவேற்ப்பில் மணமகன் மணப்பெண் எவ்வாறு காட்சி தருவார்கலோ அவ்வாறு வல்லப கணபதி திருமண கோலத்தில் நின்ற நிலையில் காட்சி தருகிறார். 10ம் நாள் சத்தபரனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பூ சங்கம் வியாபாரிகள் மிகவும் பிரமாண்ட முறையில் சாமி வீதி உலாவிற்கு பூ அலங்காரம் செய்து தருகின்றனர்.
கேட்ட வரம் தரும் ராஜகணபதி
மிகுந்த சக்தி வாய்ந்த கேட்ட வரம் தரும் கலியுக கண் கண்ட தெய்வாமாக விளங்குபவர் ராஜகணபதி. இவருக்கு அபிசேகம் செய்து வஸ்த்திரம் சாத்தி பிரார்த்தனை செய்தால், வேண்டுதல் நிறைவேறுவதாக ஐதீகம்.
ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இவரை வேண்டலாம்.
காமநாத ஈஸ்வரர் கோவில்
தலையாட்டி விநாயகர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆறகளூர் கிராமத்தில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோவிலில் 'தலையாட்டி விநாயகர்' தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். கோவில். கெட்டி முதலி என்னும் குறுநிலமன்னன் இக்கோவிலை கட்டும் பணிகளை தொடங்கும் முன்பு விநாயகரிடம் உத்தரவு கேட்டுவிட்டு அதன்பின்பு, பணியைத் துவங்கினான். கோவிலைக் கட்டி முடித்த பிறகு, இவ் விநாயகரிடம் வந்து, கோவில் கட்டும் பணிகள் சரியாக நடந்து இருக்கிறதா என்று கேட்டான். அதற்கு இவர், நன்றாகவே கோவிலைக் கட்டியிருக்கிறாய் என சொல்லும் விதமாக தனது தலையை ஆட்டினார். எனவே இவருக்கு 'தலையாட்டி பிள்ளையார்' என்ற பெயர் வந்தது. தற்போதும் இவர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். தொழில், கட்டடப்பணிகளைத் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக் கொண்டால் அச்செயல் முடியும் வரையில் பாதுகாப்பாக இருந்து அதனை சிறப்புற முடித்து தருவார் என்பதால், இவரைக் காவல் கணபதி என்றும் அழைக்கின்றனர்.