துத்திப்பட்டு பிந்து மாதவர் கோவில்
பிரம்மஹத்தி தோஷம் போக்கும் பிந்து மாதவப் பெருமாள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆம்பூர் பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலை மார்க்கத்தில், ஆம்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி சமேத பிந்து மாதவர் கோவில். தாயார் திருநாமம் ஸ்ரீ குமுதவல்லி பெருந்தேவியார். கருவறையில் ஆறடி உயர திருமேனியுடன் பிந்து மாதவப் பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார். அவருடைய நான்கு கரங்களில், மேல் இரு கரங்கள் சங்கும், சக்கரமும் தாங்கி இருக்கின்றன. கீழ் இடது கரம் கதாயுதத்தை ஏந்தியுள்ளது. கீழ் வலதுகரம் அபய முத்திரையை அளிக்கிறது.
பஞ்ச மாதவ தலங்கள்
மாதவனைக் காண்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்ய திருத்தலங்களில் ஸ்தாபித்தான்.
முதலில் வடநாட்டில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணி மாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பித்தாபுரத்தில் குந்தி மாதவரையும், மூன்றாவதாக தமிழகத்தில் ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்து மாதவரையும், நான்காவதாக கேரளம் திருவனந்தபுரத்தில் சுந்தர மாதவரையும், ஐந்தாவதாக ராமேசுவரத்தில் சேது மாதவரையும் ஸ்தாபித்து, வழிபட்டு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி அடைந்தான் என்பது ஐதீகம். அதோடு, இந்த பஞ்ச மாதவப் பெருமாள் கோவில்களுக்கு யாரெல்லாம் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாப, சாப தோஷங்களும் நீங்க வேண்டுமென பெருமாளிடம் வேண்டிக்கொண்டான். அதற்கு பெருமாளும் அருள் பாலித்தார்.
மாங்கல்ய தோஷம், நாகதோஷம் நீக்கும் தலம்
வாழ்நாளில் ஒரு முறை பஞ்ச மாதவப் பெருமாள் தலங்களை தரிசனம் செய்தாலே, செய்தவர்களுக்கு சொர்க்கமும், மோட்சமும் நிச்சயம் கிட்டும் என்பது புராண வரலாறு. புத்திர பாக்யம் இல்லாதவர்கள் விரதம் இருந்து இந்த மாதவர்களில் யாரையாவது ஒரு வரை தரிசனம் செய்தால் புத்திர பாக்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் அமாவாசை, பௌர்ணமி, சனிக்கிழமை, ரோகிணி- திருவோணம் -சுவாதி நட்சத்திரங்கள் ,பிரதி மாத ஏகாதசி திதிகளில் சிறப்பு பூஜைகள் உண்டு. மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள். இத் திருதலத்தில் உள்ள நாக கன்னிகைகளுக்கு தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமை அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாங்கல்யம் சாத்தி வழிபட்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். நாக தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாக கன்னிகைக்கு நெய் தீபம் ஏற்றி, ஏழுமுறை கோவிலை சுற்றி வலம் வர வேண்டும். பின் பிந்து மாதவரை சென்று வணங்கினால் தோஷம் நீங்கி விடும்.
தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
பிரயோக நிலையில் சக்கரத்தை ஏந்தி இருக்கும் அபூர்வ துர்க்கை
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
இக்கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீ திரிபங்கி நிலையில் காட்சித் தருகின்றாள். திரிபங்கி நிலை என்பது தலை, இடை, கால்கள் என உடலின் மூன்று பகுதிகளும், வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் நிலையாகும். தலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். கையில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள். வலது கையில் இருக்கும். பின் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கின்றாள். வலது பின்கையில் உள்ள சக்கரம், பிரயோக நிலையில் இருக்கின்றது. இப்படி பிரயோக சக்கரத்தை ஏந்தி இருக்கும் துர்க்கையை நாம் காண்பது அரிது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளாள். மார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன. பூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் முதலியவை இருக்கின்றன. துர்க்கை அணிந்திருக்கும் அணிகலன்களின் வேலைப்பாடு நம்மை பிரமிக்க வைக்கின்றது.
துர்க்கை காயத்ரி
துர்க்கை என்றால் துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கும் பணியை மேற்கொள்ளும் தேவதைகளில் துர்க்கைக்கு தனியிடம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் கீழ்க்கண்ட துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை சொல்வது நல்ல பலனை கொடுக்கும்.
ஓம் காத்யாயனய வித்மஹே
கன்யாகுமாரி தீமஹி
தந்நோ துர்கி ப்ரசோதயாத்
அதாவது, காத்யாயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.
சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சுந்தர காமாட்சி அம்மன்
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலும், காவேரிப்பாக்கத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி.
அம்பிகை சுந்தரகாமாட்சி பெயருக்கேற்றார்போல், அழகே உருவாய், அருளே வடிவாய் இங்கு ஆட்சிபுரிந்து வருகிறாள். பொதுவாக காமாட்சி அம்மனை நாம் அமர்ந்த கோலத்தில்தான் தரிசித்து இருப்போம். ஆனால் இத்தலத்தில், மங்கலங்களை அருளும் தேவியாய், மனதைக் கவரும் தெய்வீகத் தோற்றத்துடன் சாந்தம் தவழும் விழிகளால், மலர், பாசம் ஏந்தி அபய-வரத முத்திரை அருளி, குண்டலங்கள், ஹார வடங்கள், அணிந்தும் தாமரை மலரில் நின்ற திருக்கோலத்தில் ஒயிலுடன் காட்சி தருகிறாள். இப்படி நின்ற கோலத்தில் காமாட்சி அம்மன் அருள் புரிவது தனிச்சிறப்பாகும். அம்பாளின் எதிரில் ஸ்ரீசக்கரம் உள்ளது.
அம்பிகை சுந்தரகாமாட்சி மரகதப் பச்சைக்கல்லால் ஆனவள் என்கின்றனர். அம்பிகையின் கருவறை சுவர்களும் பச்சைக் கல்லால் ஆனது. பச்சை நிறம் குளிர்ச்சியை தரவல்லது. அதுபோல் பச்சைத் திருமேனி உடைய இந்த அம்மனும் தன்னுடைய பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளித்து அவர்களது மனதை குளிர்விக்கிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
இத்தலத்தில் வில்வ மரமும், வேப்ப மரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. குழந்தைப்பேறு வேண்டுவோர், தம்பதியராக வந்து இந்த மரங்களுக்கு பூஜை செய்தால் மழலைச் செல்வம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில்
63 நாயன்மார்களை லிங்க வடிவில் சடையில் தரித்த தட்சிணாமூர்த்தி
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓச்சேரி என்னும் இடத்திலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது சிறுகரும்பூர் திரிபுராந்தக ஈஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சுந்தரகாமாட்சி. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அன்னியர்கள் படையெடுப்பின்போது இக்கோவிலை காப்பாற்ற எண்ணிய பக்தர்கள், இதனை மண்ணால் மூடிவிட்டனராம். பின்பு, 1958-ல், அப்போதைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் பாஸ்கர தொண்டைமான் ( ‘வேங்கடம் முதல் குமரி வரை’ போன்ற பிரசித்தி பெற்ற ஆன்மீக நூல்களை எழுதியவர்) என்பவரால் ஆலயம் வெளிக் கொணரப்பட்டது.
இறைவனின் கருவறையின் வெளிச் சுற்றுச் சுவரில் பச்சைக் கல்லாலான தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார். இவர் தனது தலையின் சடையில் 63 நாயன்மார்களை சிவலிங்க வடிவில் தரித்துள்ளார். அவருடைய காதுகளில் மகரம் என்னும் அணிகலன்,முதலையின் தலை வடிவில் குண்டலமாக தொங்குகின்றது.
அவர் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் 27 நட்சத்திரங்கள் வட்ட வடிவ உருவில் அமைந்திருக்கின்றன. இந்த தட்சிணாமூர்த்தியின் தலையின் மேல் கல்லாலமரம் இருக்கின்றது.
தாயின் வயிற்றில் குழந்தையின் நிலையை காட்டும் ஆச்சரியமான சிற்பம்
இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களின் கலைத்திறனும், நுணுக்க வேலைப்பாடுகளும் நம்மை பிரம்மிக்க வைக்கின்றன. ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை காட்டும் சிற்பமானது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்த சிற்பம், நம் முன்னோர்களின் சிற்பத் திறனை மட்டுமல்லாது, விஞ்ஞான அறிவினையும் உலகத்திற்கு பறைசாற்றுகின்றது.
வளையாத்தூர் வளவநாதீஸ்வரர் கோவில்
சிவபெருமானை போல் நெற்றிக்கண் உடைய அம்பாள்
வேலூர்- சென்னை நெடுஞ்சாலையில் , 24 கி.மீ., தூரத்திலுள்ள ஆற்காடு சென்று, அங்கிருந்து பிரியும் சாலையில் 17 கி.மீ., தொலைவில் உள்ளது வளையாத்தூர். இறைவன் திருநாமம் வளவநாதீஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. இறைவன், மக்களின் பிரார்த்தனைகளுக்கேற்ப வளைந்து கொடுத்து அருள் செய்பவர் என்பதால்,, அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. முற்காலத்தில் இப்பகுதியில்,விவசாயம் செழித்து மக்கள் வளத்துடன் வாழ்ந்ததால் அவருக்கு 'வளவநாதீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
கோவிலில் நுழைந்ததும் நாம், நின்ற நிலையில், நான்கு கைகளுடன் எழுந்தருளியிருக்கும் பெரியநாயகி அம்பாளை, தரிசிக்கலாம். இந்த அம்பாளின் நெற்றியில் சிவனுக்கு உள்ளதுபோல் நெற்றிக்கண் உள்ளது.சிவபெருமான் சூரியன், சந்திரன், அக்னி என மூவரையும் கண்களாகக் கொண்டவர். சிவனின் சக்தி வடிவமே அம்பிகை என்பதால், அவளும் முக்கண் உடையவள் ஆகிறாள். இதை உணர்த்தும் விதமாக அம்பிகை, இக்கோயிலில் நெற்றிக்கண்ணுடன் காட்சியளிக்கிறாள். சிவராத்திரியன்று இரவில் இவளுக்கு பூஜையும் உண்டு. இவளது நான்கு கைகளிலுள்ள சுண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்திருப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த அம்பாள் மாங்கல்ய வரபிரசாதியாகத் திகழ்கின்றாள். இந்த அம்பாளை வேண்டிக்கொண்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்பாளுக்கு சிவராத்திரியன்று சிறப்பு பூஜை
பெரியநாயகி அம்பாள் நெற்றிக்கண்ணுடன் இருப்பதால், இவளை சிவபெருமானாகவே கருதி, சிவராத்திரியன்று இரவில் பூஜை செய்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் பின்பற்றாத நடைமுறையாகும்.
கிரக தோஷ நிவர்த்தி தலம்
வளவநாதீஸ்வரர் சதுர வடிவ பீடத்தில், இடப்புறமாக சற்றே வளைந்த நிலையில், நவாம்ச மூர்த்தியாகக் காட்சி தருவதாக ஐதீகம். இந்த ஒன்பது நிலைகளும் நவக்கிரகங்களைக் குறிப்பதாகவும் சொல்வர். இதனால், எந்த கிரகத்தால் ஏற்பட்ட தோஷத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள், தோஷ நிவர்த்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
இத்தலத்தில் முருகன் கையில் சிவனுக்குரிய சின்முத்திரை காட்டியபடி இருப்பது விசேஷமான அமைப்பு. மேலும், இங்குள்ள சப்தகன்னியரின் பீடத்தில் அவர்களுக்குரிய வாகனங்கள் வடிக்கப்பட்டுள்ளதுமேலும் ஒரு தனிச் சிறப்பாகும்.
ஜலநாதீசுவரர் கோவில்
அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.
பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.
கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி
இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
யோக ஆஞ்சநேயர் கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய ஆஞ்சநேயர்
தொண்டை நாட்டில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கரில், பெரிய மலையில் யோக நரசிம்மரும் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கிறார்கள். யோக ஆஞ்சநேயருக்கு இங்கு மட்டுமே கோவில் உள்ளது.யோக ஆஞ்சநேயருக்கு நான்கு திருக்கரங்கள் உள்ளன. ஒரு கையில் சங்கு, ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெபமாலை உள்ளன.ஒரு காலத்தில் விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மனை வழிபட்டு “பிரம்மரிஷி’ பட்டம் பெற்றாராம். அதே போல் நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர், வசிஷ்டர், கத்யபர், அத்திரி, ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகிய சப்தரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ராமாவதாரம் முடிந்ததும் ராமன் ஆஞ்சநேயரிடம், 'பிற்காலத்தில் இந்த மலையில் தவம் செய்யவிருக்கும் ரிஷிகளுக்கு அரக்கர்களால் இடைஞ்சல் ஏற்படும். அதை தவிர்த்து ரிஷிகளை பாதுகாப்பாயாக' என்றார். அதன்படி ஆஞ்சநேயர் இங்கு வந்து சப்தரிஷிகளின் தவத்துக்கு இடையூறாக இருந்த காலன், கேயன் என்னும் இரு அரக்கர்களுடன் சண்டை செய்தார். ஆனால் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் பெருமாளை வழிபட்டு அவரிடமிருந்து சங்கு, சக்கரங்களை பெற்று அதன் மூலம் அரக்கர்களை அழித்து சப்தரிஷிகளை காப்பாற்றினார். கடைசியில் சப்தரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார். இந்த அவதாரத்தை கண்டு களித்த ஆஞ்சநேயரிடம் பெருமாள், 'கலியுகத்தில் உன்னுடைய பணி, பூமியில் மிக மிக அவசியம். உன்னை நாடி வரும் என் பக்தர்களின் குறைகளை போக்கி வா' என்று கூறினார். அதன்படி ஆஞ்சநேயர் நரசிம்மர் கோயில் உள்ள மலைக்கு அருகில் உள்ள சிறிய மலையலில் 'யோக ஆஞ்சநேயராக' சங்கு சக்கரத்துடன் அருள்பாலித்து வருகிறார்.யோக ஆஞ்சநேயர், மனநோயாளிகளை குணப்படுத்தும் வலிமையுள்ளவர். மனநோயாளிகள் முறைப்படி இந்த தலத்திலுள்ள 'ஹனுமத் தீர்த்தம்' என்னும் குளத்தில் நீராடி பின் ஸ்ரீயோக ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, அவர்களது மனநிலை சரியாவதை கண்கூடாகப் பார்க்கலாம்.
யோக நரசிம்மர் கோவில்
கார்த்திகையில் கண் திறக்கும் யோக நரசிம்மர்
சென்னையில் இருந்து 102 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம், சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில்.வாழ்வில் ஒருமுறையேனும் இங்கு வந்து ஒரு கடிகை அதாவது 24 நிமிடங்கள் இருந்து, நரசிம்மரைத் தரிசித்தால் மோட்சம் நிச்சயம் என்று புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கடிகை என்றால் 24 நிமிடங்கள். அசலம் என்றால் மலை என்று பொருள். அதனால்தான் சோளிங்கர் திருத்தலத்துக்கு கடிகாசலம், திருக்கடிகாசலம் என்றெல்லாம் புராணத்தில் பெயர்கள் அமைந்துள்ளன. திருமால் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரம் மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவர்க்காக உதவிய அவதாரமாகும்.அத்தகைய அவதாரமாக, திருமால் யோக நரசிம்மராக இருக்கும் தலம் இது.சுமார் 1305 படிகள் கொண்ட பிரமாண்டமான சோளிங்கர் மலையின் மீது கோவில் கொண்டிருக்கும் யோக நரசிம்மர், கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலமாக உள்ளார். அவர் வருடத்தில் 11 மாதங்கள் யோகநிலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆனால் கார்த்திகை மாதம் மட்டும் அவர் பக்தர்களை கண் திறந்து பார்க்கிறார். கார்த்திகை மாதம் முழுவதும் அவர் கண்திறந்து இருப்பதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷம்.இவ்விழா நாட்களின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். மலை மீதுள்ள நரசிம்மருக்கு, பக்தோசித பெருமாள் என்னும் திருநாமமும் உண்டு. அதாவது, பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றித் தருவார் என்பதால், பக்த உசிதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு, அதுவே பக்தோசிதப் பெருமாள் என்றானது. இத்தலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி ஆகிய பிரச்சினைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை, வியாபார நஷ்டம் ஆகிய பிரச்னைகள் தீர்ந்து சுபிட்சம் ஏற்படும்.