கேடிலியப்பர் கோவில்

தேவாதி தேவர்கள் இன்னிசைக்க நடராஜர் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சி

பொதுவாக சிவாலயங்களில் நடராஜர் தன் இடது காலைத் தூக்கி ஆடும் தாண்டவக் கோலத்தைதான் நாம் தரிசிப்போம். ஆனால், நடராஜர் தன் வலது காலைத் தூக்கி ஆடும் அபூர்வக் காட்சியை நாம் மதுரை மற்றும் கீவளூரில் மட்டுமே தரிசிக்க முடியும்.

தேவாரத் தலமான கீவளூர் கேடிலியப்பர் கோவில், நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ளது.

நடராஜரின் அபூர்வத் தாண்டவக் கோலத்தின் பின்னணி நிகழ்ச்சி

ஒரு சமயம், பரமேசுவரன்-பார்வதி திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் முதலானோர் கைலாயத்தில் கூடினர். அதனால் உலகத்தின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.இதனை சரி செய்ய அகத்திய முனிவரை சிவபெருமான் தென் திசைக்கு அனுப்பினார். அகத்திய முனிவர் தென் திசை வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஒதி வழிபட்டதும் உலகம் சமன் நிலையடைந்தது. தன் பணியை முடித்த அகத்திய முனிவருக்கு இறைவனின் திருமணக் கோலத்தைக் காண ஆசை ஏற்பட்டது. அதற்கு சிவபெருமான் அகத்திய முனிவர் விரும்பும் தலத்தில் தன் திருமணக் கோலத்தைக் காணலாம் என அருளினார். அதனபடி திருமறைக்காடு தலத்தில் அகத்திய முனிவர் சிவ பூஜை செய்து வேண்டியபோது தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் அவருக்கு காட்டி அருளினார். அதைக் கண்டு மனமகிழ்ந்த அகத்திய முனிவர், அடுத்து இறைவனின் வலது பாத தரிசனம் கிடைக்க வேண்டினார். அதற்கு சிவபெருமான், அகத்திய முனிவரை பத்ரிகாரண்யத் தலத்தில் (கீவளூரின் புராணக் காலப் பெயர்) தன்னை பூஜை செய்து வழிபடும்படியும், அங்கு அவருக்கு தன் விக்ஷேச வலது பாத தரிசனத்தைத் தருவதாகவும் அருளினார்.

அகத்திய முனிவர் கீவளூர் தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபடலானார். சிவபெருமான்,ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று அகத்திய முனிவருக்கு கால் மாறி ஆடி, தன் வலது பாத தரிசனத்தைக் காட்டி அருளினார். அப்போது நடராஜப் பெருமானும், சிவகாமி அம்மையும் தாணடவமாட அதற்கு விநாயகரும், முருகப்பெருமானும் பாட்டுப் பாட, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை வாசிக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்க, மகாலஷ்மி கர தாளம் போட, இந்திரன் புல்லாங்குழல் வாசிக்க, வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் உடனிருக்க அகத்திய முனிவருக்குக் காட்சி தந்தார்.

ஆனித் திருமஞ்சனம்

இத்தல நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று காலைத் திருமஞ்சனமும், மாலை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த ஆண்டு 3.7.2022 ஞாயிற்றுக்கிழமையன்று ஆனித் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

தகவல், படங்கள் உதவி - திரு. நடராஜ குருக்கள், கீவளூர்

விநாயகர்-பாட்டு

முருகன்-பாட்டு

பிரம்மா- தாளம்

சரஸ்வதி- வீணை

விஷ்ணு-மத்தளம்

மகாலஷ்மி- கர தாளம்

இந்திரன்- புல்லாங்குழல்

அகத்திய முனிவர்

வியாக்ரபாத முனிவர்

பதஞ்சலி முனிவர்

 
Previous
Previous

வைத்தியநாதசுவாமி கோவில்

Next
Next

திருவாரூர் தியாகராஜர் கோவில்