புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்

சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அபூர்வ அமைப்பு

தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தலம் புளியரை. இறைவன் திருநாமம் சதாசிவ மூர்த்தி. இறைவியின் திருநாமம் சிவகாமி. புளிய மரத்தடியில் சிவபெருமான் காட்சி அளித்ததால், இத்தலம் புளியரை என அழைக்கப்பட்டது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி என்ற சிறப்பையும் பெற்றது.

கோவிலுக்கு செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றது. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி, தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும், வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கின்றார். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் இடையே ஸ்ரீ யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்க்கோட்டில் அமர்ந்து அருள்பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் என்பது மேலும் ஒரு சிறப்பாகும்.

மூலவராக சதாசிவ மூர்த்தி விளங்கினாலும், தட்சிணாமூர்த்திக்கே சிறப்புத் தலமாக பார்க்கப்படுகின்றது. யோக தட்சிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுரக்கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள், கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனைக் கிரகங்களும் தென்முக தெய்வத்துக்குக் கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம். எனவே, இங்கே வந்து இவரை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். தாலி பாக்கியம் கிட்டும், தார தோஷம் நிவர்த்தியாகும், குழந்தைப்பேறு, தொழில் வளம் முதலான சகல வரங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மூலவருக்கும், நந்திதேவருக்கும் இடையே உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி

 
Previous
Previous

சமயபுரம் மாரியம்மன் கோவில்

Next
Next

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்