பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
சிவபெருமான், அம்பிகை, முருகர் ஆகிய மூவருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைந்த தலம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 'வராகநதி’ தென்கரையில், அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி கோவில். சோழ மன்னன் ராஜேந்திர சோழன் கட்டியதால் இக்கோவில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்றும் அழைக்கப்படுகிற்து. இக்கோவில் சிவாலயமாக திகழ்ந்தாலும், இத்தலத்து முருகன் மிகவும் பிரசித்தம். அதனால் தான் இக்கோவில் முருகன் பெயராலேயே பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிற்து.
இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் லிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் தனிக் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இப்படி மூன்று தெய்வங்களுக்கும் தனிக் கொடி மரங்கள் அமைந்திருப்பது மிகச் சிறப்புடையதாகும். முருகனுக்கு நேர் எதிரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் அமைக்கப்பட்டுள்ளது.
தல வரலாறு
ஒரு முறை சோழ நாட்டின் மன்னன் ராஜேந்திர சோழன், அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டு அது இறந்து போனது. தாயை இழந்த பன்றிக் குட்டிகள், பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. அதனைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான். அப்போது அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட முருகப்பெருமான் அவ்விடத்தில் தோன்றி, அவைகளின் பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட முருகப்பெருமானின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழேத் தரைப்பகுதியில் இக்கோவிலைக் கட்டினான்.
காசிக்கு ஈடான தலம்
கோயில் அருகே ஓடும் 'வராகநதி நதிக்கு வலப்புறமும், இடப்புறமும் அமைந்துள்ள ஆண், பெண் மருது மரங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. காசிக்கு அடுத்தபடியாக பெரியகுளத்தில் தான் இரண்டு மரங்களுக்கும் நடுவில் வராக நதி செல்கிறது. இங்கு குளித்து சென்றால் திருமணத்தடை, குழந்தையின்மை, நோய் தொற்று பிணி நீங்குவதாக ஐதீகம் உள்ளது. வராக நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும்.
அருணகிரிநாதர் 'திருப்புகழ்' பாடலில் இக்கோவிலைப் பற்றிப் பாடியிருக்கிறார்.