மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை சித்திரை திருவிழா - மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் எட்டாவது நாள் நிகழ்ச்சியாக, மதுரையின் ராணியாக மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படும்.

பாண்டிய மன்னன் மலையத்துவஜன் - காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினர். அந்த யாகத்தீக்குள்ளிருந்து மூன்று வயதுச் சிறுமியாக பார்வதி தேவி, மீனாட்சி உருவில் நடந்து வந்து காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்து அம்மா என்று அழைத்தாள். இக்குழந்தைக்கு தடாதகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். மலையத்துவஜன் பாண்டியன், தடாதகைக்கு வில் பயிற்சி, வாள் பயிற்சி கற்றுக்கொடுத்து வீர பெண்மணியாக வளர்த்தார். வீரமிக்க பெண்ணாக வளர்ந்த தடாதகைக்கு பட்டத்தரசியாக மணி மகுடம் சூட்டப்பட்டது. மகுடாபிஷேகம் செய்யும் போது, பாண்டியர்களின் வெற்றி மலரான வேப்பம்பூ மாலையை அணிவிப்பது வழக்கம்.

மதுரை மீனாட்சி அம்மனுக்கு சித்திரை திருநாள் நடைபெறும் பத்து நாட்களும் விதம் விதமான நகைகளை அணிவித்து அழகு பார்ப்பார்கள். அதுவும் பட்டாபிஷேகத்தன்று கொஞ்சம் கூடுதல் நகைகளால், அலங்கார ரூபினியாய் காட்சி தருவார். அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். வெள்ளி சிம்மாசனத்தில் அலங்காரமாக பட்டத்தரசியாக மீனாட்சி அம்மனுக்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தாலான செங்கோல் வழங்கப்பட்டு, வேப்பம்பூ மாலை அணிவித்து மதுரையின் ராணியாக பட்டாபிஷேகம் நடத்தப்படும். ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய கிரீடத்தை சூடிக்கொண்டு பட்டத்தரசியாக ஜொலிக்கும் மீனாட்சியைக் காண கண் கோடி வேண்டும். ஆண்டுக்கு ஓரு நாள் மட்டுமே,மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முடிந்த நாளில் வேப்பம்பூ மாலை அணிந்து வீதி உலா வருவார்.

மதுரையின் பட்டத்தரசியாய் முடிசூடிய மீனாட்சியின் ஆட்சி ஆவணி மாதம் வரை நான்கு மாதங்கள் நடைபெறும் என்பது ஐதீகம். அதன் பின்னர் ஆண்டின் எட்டு மாதங்கள் சுந்தரேசுவரர் மதுரையை ஆட்சி செய்வார்.

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 30.04.2023, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது.

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் (2022)

 
Previous
Previous

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Next
Next

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோவில்