திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்
முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய பஞ்சலிங்கம்
ஆறுமுகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் கையில் தாமரை மலர் ஏந்தி சிவ பூஜை செய்யும் திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். இத்தலத்தில் முருகப்பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டு தேவர்களை காத்து நின்றார்.
அசுரர் படைகளை சம்ஹாரம் செய்த பாவம் நீங்க, முருகப்பெருமான் கடற்கரையில் ஐந்து லிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவ பூஜை செய்தருளினார். முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து வணங்கிய அந்த ஐந்து லிங்கங்களும் இன்றும் பஞ்சலிங்கம் என்ற பெயரில் இங்குள்ள மூலவர் கருவறைக்கு பின்னர் தனி அறையில் காட்சியளிக்கிறது. சன்னதியை அடைய கருவறைக்கு அருகில் உள்ள நுழைவாயிலின் வழியாக செல்ல வேண்டும். இந்த லிங்கங்கள் உள்ள இடத்தைப் பாம்பறை என்கின்றனர். இங்குள்ள மேடையில் ஐந்து லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இந்த லிங்கங்களுக்கு, ஆவுடையார் என்னும் சக்தி பாகம் இல்லை. உருத்திர பாகமான மேல் பகுதி மட்டுமே உள்ளது. இந்த பஞ்சலிங்கங்களுக்கு நேராக மேலே துளை இருக்கிறது. நாள் தோறும் நள்ளிரவில் தேவர்கள் இவ்வழியாக வந்து இந்தப் பஞ்சலிங்கங்களைப் பூசிப்பதாக கூறுகின்றனர். இந்த லிங்கங்களை நாள்தோறும் தேவர்களும், முருகனும் பூசிப்பதால், இவற்றிற்கு மானிடர் பூசையில்லை. குடமுழுக்கின்போது மட்டும் இந்த பஞ்சலிங்கங்களுக்கென யாகசாலை அமைத்து, வேள்வி புரிந்து வேள்விக் கலச நீரால் அபிஷேகம் செய்கின்றனர்.
.இந்த பஞ்சலிங்கங்களை நாம் தரிசித்து வணங்கினால் நம் முன்வினை பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா இரண்டாம் நாளன்று வெளியான பதிவு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் திருச்செந்தூர் இராஜகோபுரம்
https://www.alayathuligal.com/blog/ddkah4agj82ztwy3nemsacm73aea84