திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

திருச்செந்தூர் - சிறந்த குரு பரிகாரத் தலம்

ஆறுமுகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில், இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான தலமாகவும், குரு பகவான் தொடர்பான பரிகாரத் தலமாகவும் விளங்குகின்றது.

முருகப் பெருமான் போரிடச் செல்லும் முன், அசுரர்களைப் பற்றிய வரலாற்றை, குரு பகவான் முருகனிடம் விளக்கிய தலமாக திருச்செந்தூர் விளங்குகின்றது. குருவின் விளக்கத்தால் முருகப் பெருமான், அசுரர்களிடம் போரிட்டு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் ஆகியோரை சம்ஹாரம் செய்து அவர்களை தம் பக்தர்களாக ஆட்கொண்டார். சூரபத்மனுடன் நடந்த போரில் வெற்றி பெற காரணமாக இருந்த குருபகவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்செந்தூர் கோவிலில் முருகர் ஞான குருவாக வீற்றிருக்கிறார். அவருக்கு செய்யும் வழிபாடு முறைகள் அனைத்தும் குரு பகவானுக்கும் செய்ய வேண்டும் என்று அருள் புரிந்தார். இதன் காரணமாக திருச்செந்தூர் முருகனை வணங்கினால், குரு பகவானால் ஏற்படக் கூடிய சிக்கலிலிருந்து தப்பிக்கக் கூடிய பரிகாரத் தலமாக விளங்குகின்றது.

திருச்செந்தூர் பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தியும் விசேஷமானவர். இவரின் வலது கையில் சிவபெருமானுக்குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட யானைகள், அஷ்ட நாகங்கள், மேதா மலை என 4 நான்கு ஆசனங்களின் மீது அமர்ந்திருக்கின்றார். தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது.

ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் கோட்சார நிலை வலுவிழந்து காணப்படும் பொழுது திருமணத்தில் தடை மற்றும் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனை நிவர்த்தி செய்வதற்கு திருச்செந்தூரில் இருக்கும் குருபகவானை வழிபட்டு செல்வதால் நல்ல பலன் காணலாம். குரு பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள குருவிற்குரிய பரிகாரங்கள் இத்தலத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் தான் திருச்செந்தூர் முருகனுக்குரிய ஸ்தலமாக மட்டுமல்லாமல், குரு ஸ்தலமாகவும் பார்க்கப்படுகிறது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒருமுறையாவது சென்று வரவேண்டிய தலம் திருச்செந்தூர் ஆகும். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்யலாம்.

சென்ற ஆண்டு கந்தசஷ்டி விழா மூன்றாம் நாளன்று வெளியான பதிவு

 

இஸ்லாமிய பக்தரின் கடனை அடைத்த செந்திலாண்டவன்

 https://www.alayathuligal.com/blog/xrm49wlwbzfd52blj8fa27wcgyw8cs 

 
Previous
Previous

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்

Next
Next

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்