பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில்
பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மனின் திருநாமத்தில் உள்ள துர் என்பது தீயவை எனப் பொருள்படும். தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிப்பவள். அதனால் துர்க்கை என்று பெயர். துர்க்கம் என்பதற்கு அரண் என்ற பொருளும் உண்டு. பக்தர்களுக்கு அரணாக இருந்து காப்பதாலும், துர்க்கை அம்மன் என்று பெயர். இவளை துர்காதேவி, ஆர்த்தி தேவி, ஜோதி தேவி என்றும் அழைக்கிறார்கள்.
பார்வதி தேவியின் உக்கிர வடிவம்தான் துர்க்கை அம்மன். ஆனால் கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் துர்க்கை அம்மன் இதழோரம் புன்னகை ததும்ப, சாந்த சொரூபினியாக காட்சி தருகிறாள். பொதுவாக எல்லா ஆலயங்களிலும் துர்க்கை அம்மன், கோஷ்டத்தில்தான் தரிசனம் தருவாள். ஆனால், பட்டீஸ்வரத்தில், தனிச்சந்நிதியில் ஒய்யாரமாக நின்ற திருக்கோலத்தில் மூன்று கண்கள், எட்டு திருக்கரங்களுடன் எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்தபடி காட்சி தருகிறாள். எட்டு திருக்கரங்களின் ஒன்றில் அபயஹஸ்தம் காட்டுகிறாள். மற்றொரு கரத்தை இடுப்பில் ஒயிலாக வைத்திருக்கிறாள். ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. தன்னைச் சரண் அடையும் பக்தர்களுக்கு உடனே அருள்புரிய காலைஎடுத்து வைத்துப் புறப்படுகிற தோற்றத்தில் துர்க்கை நிற்பது இன்னொரு சிறப்பு.
பாண்டிய மன்னர்களின் குல தெய்வமாக எப்படி மீனாட்சிஅம்மன் விளங்கினாரோ, அதுபோல இந்த துர்க்கையம்மன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக திகழ்ந்தாள்.
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் மிகுந்த வரப்பிரசாதி. திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் குறைகள் நீங்கி நலம் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை