மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
தீராத நோய்களை தீர்க்கும் தன்வந்திரி பகவான்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது. கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும்.
இக்கோவிலில் மகாவிஷ்ணு அவதாரமாக கருதப்படும் தன்வந்திரிக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது. நோயின்றி நல்ல உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது. ஸ்ரீ தன்வந்திரி பகவான் மகாவிஷ்ணுவின் அம்சமாக சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப் பூச்சை ஏந்தியும் இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலில் இருந்து கெட்ட இரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன.
இக்கோவிலில் அவர் வடக்கு நோக்கிய சன்னதியில் கையில் அமிர்த பானையை கையில் ஏந்தியபடி இருக்கிறார். தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், ஹஸ்த நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் அவருக்கு மூலிகை எண்ணெய் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மேலும் நெய் தீபம் ஏற்றி இக்கோவிலை 11 முறை வலம் வந்து பரிகாரம் பெறுகின்றனர்.
இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில் (13.04.2025)
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
https://www.alayathuligal.com/blog/melathirumanancheri13042025
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ
படங்கள் உதவி : திரு. ராமலிங்கம், ஆலய அறங்காவலர்
ஸ்ரீ தன்வந்திரி பகவான்