
மேலத்திருமணஞ்சேரி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில்
மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படும் பெருமாள் கோவில்
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் பெருமாள்
மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருமணஞ்சேரி என்னும் தேவார தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது எதிர்கொள்பாடி லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில். கிழக்கில் விக்ரமன் என்னும் காவிரியாறும், மேற்கில் கிளை நதியான காளி வாய்க்காலும் அமைந்திருக்க நடுவில் அமைந்துள்ள தலம் தான் எதிர்கொள்பாடி என்று அழைக்கப்படும் மேலத்திருமணஞ்சேரி ஆகும். சோழநாட்டில் உள்ள திவ்யதேசங்களில் இத்தலம் அபிமானத்தலமாகத் திகழ்கிறது.
பார்வதி தேவி, சிவபெருமானை பூலோக முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பி, அவரை மணம் முடித்த தலம் தான் திருமணஞ்சேரி. திருமணஞ்சேரி தல புராணம், பார்வதி தேவி பசுவாகவும், அவளைக் கவனித்துக்கொள்வதற்காக பெருமாள் மூத்த சகோதரனாக அவளுடன் வந்ததையும் விவரிக்கின்றது. பின்னர், பார்வதி தேவி பரத முனிவரின் மகளாகப் பிறந்து சிவபெருமானை மணந்தார். அந்த திருமணத்தில் பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து கொடுத்தவர் பெருமாள். அதனால் இக்கோவில் மைத்துனர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர் பெருமக்களையும் முனிவர்களையும், திருமால் வரவேற்று உபசரித்த தலம் தான் எதிர்கொள்பாடி. இன்றும் வருடாந்திர கல்யாண உற்சவத்தின் போது, இக்கோவிலில் இருந்து சிவன் கோவிலுக்கு கல்யாண சீர் (திருமணப் பரிசுகள்) கொண்டு செல்லப்படுவதால் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது.
கருவறையில் மடியில் லட்சுமி தேவியை இருத்தியபடி பெருமாள் காட்சி தருவது ஒரு சிறப்பாகும். பெருமாள் உற்சவரின் திருநாமம் வரதராஜர்.பொதுவாக கோவில்களில் பெருமாள் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பார். ஆனால், இங்கு பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது மேலும் ஒரு தனிச்சிறப்பாகும். இதற்கு காரணம் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது, தம்பதிகளான கோகிலாம்பாளும், கல்யாண சுந்தரரும் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தபோது, மைத்துனராக விஷ்ணு தன் தங்கையை திருமணம் செய்து கொடுத்ததால்,அவர்கள் முகமாக, அதாவது, மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். தம்பதி சமேதராக இருந்து சிவ-பார்வதியும், ஸ்ரீ லட்சுமியும்-ஸ்ரீநாராயணரும் குடிகொண்டிருக்கும் அற்புதத் தலம் இதுவாகும்.
மடியில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும் என்பது ஐதீகம்.