சாரங்கபாணி கோவில்
பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பெருமாள்
ஒருசமயம் கும்பகோணத்தில் லட்சுமி நாராயணசாமி என்னும் பெருமாள் பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் கும்பகோணம் சாரங்கபாணி மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.இவர்தான் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோபுரத்தைக் கட்டியவர்.
ஒரு தீபாவளியன்று லட்சுமி நாராயணசாமி பெருமாளின் திருவடியை அடைந்தார். சிரார்த்தம் செய்ய குழந்தைகள் இல்லாமல் போனால், நரகம் செல்ல வேண்டி வரும் என்பதால், தனக்கு சேவை செய்த தன் பக்தருக்கு தானே மகனாக இருந்து, இறுதிச்சடங்குகள் செய்தார் சாரங்கபாணி. இது நடந்த மறுநாள் கோயிலை திறந்து பார்த்த போது, பெருமாள் ஈரவேட்டியுடனும், மாற்றிய பூணூலுடனும், தர்ப்பைகளுடனும் காரியம் செய்து வந்த கோலத்தில் காட்சியளித்தார். அதாவது பெருமாளே தன்பக்தனுக்கு ஈமக்கிரியை செய்துவைத்து கருணைக்கடலாக விளங்கினார். தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி, திதி கொடுக்கும் நிகழ்ச்சி இப்போதும் நடக்கிறது. ஆனால், அதை பக்தர்கள் பார்க்க முடியாது.