வைத்தீஸ்வரன் கோவில்
பங்குனி உத்திரத் திருவிழா
முருகப்பெருமானும் யானையும் விளையாடும் நரி ஓட்டம் நிகழ்ச்சி
கும்பகோணம் = சிதம்பரம் நெடுஞ்சாலையில், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேவார பாடல் பெற்ற தலம் வைத்தீஸ்வரன் கோவில். இறைவன் திருநாமம் வைத்தியநாத சுவாமி. இறைவி தையல்நாயகி.
முருகப்பெருமான் இங்குப் பேரழகுடன் முத்துக்குமார சுவாமி என்ற திருப்பெயர் கொண்டு அருள்கிறார். இவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு குமரகுருபரர், 'முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' என்ற நூலைப் படைத்துள்ளார். இந்தத் தலத்தில் நடைபெறும் அர்த்த சாம பூஜை சிறப்பு வாய்ந்தது. முருகனுக்குப் புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம் முதலியவை சாத்தி தீபாராதனை செய்கிறார்கள். முருகனைப் பிள்ளைத்தமிழ் பாடி தாலாட்டி பள்ளி கொள்ள செய்த பின்னரே சுவாமி அம்பாளுக்கு அர்த்த சாமபூஜை நடைபெறுகிறது.
இத்தலத்தில் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முருகப் பெருமான் குழந்தை வடிவாக, இத்தலத்தில் அருள்பாலிப்பதால் அவரை குதூகலம் செய்வதற்காக தினமும் வீதியுலாவின் போது, நரி ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. முருகக் கடவுள் யானையை விரட்டுவதும், யானை அவரை விரட்டுவதும் ஆகிய நரி ஓட்டம் பிரபலமாக நடைப்பெறுகிறது. பெரியவர்கள் சிறுகுழந்தையைச் சிரிக்க வைக்க நரி மிரட்டல் செய்வது போல இங்கு முருகனுக்காக நரிஓட்டம் நடத்தப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை காண பெருந்திரளான மக்கள் இத்தலத்தில் கூடுகிறார்கள்.
காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்