மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

கையில் வளையல், காலில் கொலுசு, மெட்டியுடன் காணப்படும் அபூர்வ அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில், 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி.

வழக்கமாக சிவாலயங்களில் தட்சிணாமூர்த்தி இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தெற்கு முகமாக எழுந்தருளி இருப்பார். ஆனால் இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி மகாமண்டபத்தில், இறைவனுக்கும் இறைவிக்கும் நடுவில் எழுந்தருளி இருக்கிறார். இது ஒரு அரிய அமைப்பாகும். இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சரஸ்வதிக்கு ஞானத்தையும், லக்ஷ்மிக்கு ஞானத்தையும் வழங்கியதால், இத்தலத்தில் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். மகாமண்டபத்தின் வெளிப்புற மேற்குச் சுவரின் இடது மற்றும் வலதுபுறத்தில் லட்சுமியும் சரஸ்வதியும் இருப்பதற்கு இதுவே காரணம். மேலும் சரஸ்வதி தன் கையில் வீணை இல்லாமல் காட்சியளிக்கிறார்.

இத்தலத்து தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் காட்சியளிப்பது ஒரு தனி சிறப்பாகும். அவரது சுருண்ட தலைமுடியும், திருமேனியை அலங்கரிக்கும் ஆபரணங்களும், மார்பில் இருக்கும் முப்புரி நூலும் பார்ப்பவரை பரவசமடையச் செய்யும். அவரது புன்முறுவல் பூத்த முகமும், இடப்பாகம் மிளிரும் பெண்மையின் நளினமும் தெய்வீகத் தன்மை கொண்டவையாக இருக்கின்றது. அவரது கையில் வளையலும், காலில் கொலுசும், கால் விரல்களில் மெட்டியும் காணப்படுவது ஒரு அபூர்வமான தோற்றமாகும்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

அம்பிகையின் அந்தப்புரமாக விளங்கிய தலம்

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. இத்தலம் முற்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது, நான்கு (சதுர்) வேதங்களைப் படித்த வேத பண்டிதர்கள் நிறைந்த ஊர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

சிவபெருமான் பார்வதி திருமணத்தோடு இத்தலம் தொடர்புடையது. சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக, பார்வதி, இத்தலத்துக்கு மிக அருகில் உள்ள பெருவேளூரில் தவம் மேற்கொண்டார். இறுதியில் கரவீரம் என்னும் தலத்தில் சிவபெருமானை மணந்து கொண்டார். சிவன் மற்றும் பார்வதியின் திருமணத்தை இத்தலத்து வேத பண்டிதர்கள் நடத்தினார்கள். திருமணத்திற்குப் பிறகு, அடுத்த நாள் காலை கைலாசத்திற்குச் செல்வதற்கு முன், இத்தலத்திலுள்ள அந்தப்புரத்தில் பார்வதி தங்கினார், எனவேதான் பார்வதிதேவி அந்தப்புர நாயகி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். அம்பிகையின் இந்த திருநாமம் தனிச்சிறப்பு உடையது. வேறு எந்த தலத்திலும் அம்பிகைக்கு இந்த திருநாமம் கிடையாது.

பிரார்த்தனை

சிவபெருமான்-பார்வதி திருமணத்துடனான தொடர்பு காரணமாக, திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கும், குழந்தைகளைப் பெற விரும்புபவர்களுக்கும் இது ஒரு பிரார்த்தனை தலமாகும்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை சேஷபுரீஸ்வரர் கோவில்

பாம்பு ஊர்ந்த தழும்பு கொண்ட சிவலிங்கத் திருமேனி

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் அய்யம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ளது சேஷபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் அந்தப்புர நாயகி. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம்.

ஒரு சமயம், திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன், தனது சாப விமோசனத்திற்காக இத்தலத்து இறைவனான சேஷபுரீஸ்வரரை வணங்கி, விஷேச பூஜைகள் செய்து கடும் தவம் புரிந்து சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இங்குள்ள சிவலிங்கத்தின் பாணத்தில் பாம்பு ஊர்ந்த தழும்பை இன்றும் காணலாம்.

ஆதிசேஷன் வழிபட்ட தலம் என்பதால் ராகு கேது தோஷ நிவர்த்திக்காகவும், நாக தோஷ நிவர்த்திக்காகவும் இத்தலத்தில் பிரார்த்திக்கிறார்கள். இத்தலத்துக்கு வந்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும்.

Read More
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப்  பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் தலம்

திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில், குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோவில். இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மூலவர் வைகுண்ட நாராயணப் பெருமாள், நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்களில், வலது கரத்தில் பிரயோக நிலையில் சக்கரமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தி, கீழ் இரு கரங்கள் வரத, அபய முத்திரையோடும் எழுந்தருளி இருக்கிறார். பெருமாள் வைகுண்ட லோகத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் இங்கு எழுந்தருளி இருப்பதால் இத்தலம் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகின்றது. திருப்பதி ஏழுமலையான், மானுட வடிவில் இந்த தலம் வந்து இங்கு அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டு அலர்மேல் மங்கை தாயாரை திருமணம் செய்ய கடன் பெற்று சென்று தாயாரை திருமணம் செய்து கொண்டு,இழந்த செல்வத்தை பெருமாள் மீண்டும் பெற காரணமாக அமைந்த கோவில் இது

கிபி 14 ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இக்கோவில் சேதமடைந்தது. இந்த ஊரைச் சேர்ந்த, சென்னை மருத்துவக் கல்லூரியின் தலைவராக பணியாற்றியவரும், பிரபல அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சிவராமன் கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு கோவில் கட்டி புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன்படி டாக்டர் சிவராமன் கோவிலை புதுப்பித்து, 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார்.

சுக்கிர தோஷ நிவர்த்தி தலம்

மார்கழி மாதம் அதிகாலையில் சுக்கிர பகவான் தனது ஒளியால் இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை தரிசிப்பதாக ஐதீகம். ஒருவரது ஜனன கால ஜாதகத்தில், சுக்கிரன் பலம் இழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றிருந்தாலோ, அதனை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகின்றது. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த தலத்திற்கு வந்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும். காதல் திருமணம் கைகூட நினைப்பவர்கள், இத்தலத்து பெருமாளின் காலடியில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து அர்ச்சித்து பின்னர் அந்த எலுமிச்சம்பழச் சாறை அருந்தினால், வர்களது வேண்டுதல் நிறைவேறும்.

பிரார்த்தனை

இந்த தலத்தில் உள்ள லட்சுமி குபேரர் திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி திருமணத்திற்கு பணம் தந்து உதவியதால் இவரை வழிபட சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இந்த தலத்தில் உள்ள குபரர் சன்னதியில் நடக்கும் ஹோமத்தில் கலந்து கொள்ள சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை வழிபட்ட 90 நாட்களில், திருமணம் நிச்சயம் கைகூடும்.

Read More
அபிமுக்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

அபிமுக்தீஸ்வரர் கோவில்

அபூர்வ கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன்

திருவாரூர்-கும்பகோணம் பேருந்து சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் மணக்கால் அய்யம்பேட்டை. இறைவன் திருநாமம் அபிமுக்தீஸ்வரர். இறைவி அபினாம்பிகை, .முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் 'பெருவேளூர்' எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,'இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்' என வேண்டினாள்.

கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,'கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,'என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.

Read More