குடுமியான்மலை சிகாநாதசாமி கோவில்

திருமேனியின் உச்சியில் குடுமியுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கம்

புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து, 18 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது.

மலைக் குன்றில், அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் ஒன்று, அதன் அருகில் ஒன்று, குன்றின் மேல் ஒன்று என இங்கு மொத்தம் நான்கு கோவில்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில் சிகாநாதசுவாமி கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.

குடுமியான் என்றால் உயர்ந்தவன் என்றும், குடுமி என்றால் மலை உச்சி என்றும் பொருள்படும்படி உள்ளது. உயர்ந்த மலைக் குன்றை ஒட்டி அமைந்த கோவிலில் குடிகொண்டுள்ளதால் குடுமியான்மலை என்ற பெயர் வந்தது.

இத்தலத்து இறைவன், சிவலிங்கத் திருமேனியின் உச்சியில், குடுமியுடன் காணப்படுகிறார். இதன் பின்னணியில் ஒரு சுவையான வரலாறு உள்ளது.

ஒரு சமயம் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர், பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து, அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு கோயில் கொடுத்துவிட்டார். அப்போது, கோவிலுக்குள் மன்னர் வந்துவிடவே, அர்ச்சகர் செய்வதறியாது அந்தப் பெண்ணிடம் இருந்து மீண்டும் அந்தப் பூவை எடுத்து, பூஜை செய்து மன்னருக்கு பிரசாதமாக கொடுத்தார். அந்தப் பூவில் இருந்த முடி குறித்து மன்னர் அர்ச்சகரிடம் விளக்கம் கேட்டார். அதற்கு சிவபெருமானின் தலையில் முடி இருப்பதாக அர்ச்சகர் விளக்கினார்..

சந்தேகம் விலகாத மன்னர் இன்று இரவு தான் இங்கேயே தங்க உள்ளதாகவும், விடியற்காலை சன்னதி திறந்ததும், தனக்கு இறைவனின் குடுமியை காட்டவேண்டும் எனவும் கட்டளை இட்டார். இல்லையெனில் அடுத்த நாள் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்றும் ஆணையிட்டார். அரசர் சொன்னது போல அங்கேயே தங்கியும் விட்டார்.

தான் எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்த அர்ச்சகர், சிவபெருமானின் காலடியினைப் பிடித்து மன்றாடினார். தன்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காக்கும்படி வேண்டினார். அவர் முன் தோன்றிய பெருமான், 'நீ உன் தவறை உணர்ந்ததால் வெறும் மூன்று நாழிகை மட்டும் நான் குடுமியுடன் இருப்பேன், அதற்குள் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்'', என்று கூறி மறைந்தார்.

அடுத்த நாள் காலை மன்னனனிடம் சிவபெருமானுக்கு குடுமி உள்ளது என்பதைக் காண்பித்தார் அர்ச்சகர். ஆனாலும் சந்தேகம் நீங்காத அரசர் குடுமியை இழுக்த்துப் பார்த்தார். இழுத்த வேகத்தில் சிவபெருமானின் தலையில் இருந்து இரத்தம் பீறிட்டது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியுற்றனர். மன்னரும் சிவனின் தலையில் குடுமி இருப்பது உண்மைதான் என்பதை உணர்ந்து, சுவாமி தன்னை மன்னித்தருள வேண்டினார். தன் கருணை உள்ளத்துடன் அனைவரையும் மன்னித்தருளிய இறைவன், இது தனது திருவிளையாடல் என்பதையும் அனைவருக்கும் உணர்த்தினார். அன்று முதல் இத்தலத்து இறைவன், அழகிய குடுமியுடன் காணப்படுகிறார்.

 
Previous
Previous

திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

Next
Next

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்