அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில்
பாலகனாக, ஆண்டி கோலத்தில் காட்சி தரும் முத்துக்குமாரசாமி
திருப்பூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோவில். கொங்கு நாட்டின் புகழ்பெற்ற முருகன் தலங்களில் இதுவும் ஒன்று. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் மிகவும் ரம்மியமான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோவிலுக்கு, நடந்து செல்ல 300 படிக்கட்டுகள் உள்ளன. வாகனத்தில் செல்ல சாலை வசதியும் உண்டு. அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் 'அலகு மலை' என்று அழைக்கப்படுகிறது.
கோவில் கருவறையில், முருகன் நான்கரை அடி உயர திருமேனியுடன் பாலகனாக, பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி காட்சி அளிக்கின்றார். மூலவர் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கண்களை சற்றே தாழ்த்திய நிலையில் ஞானகுருவாக அருள்புரிகிறார். வள்ளியும், தெய்வானையும் தனி சந்ததியில் காட்சி தருகிறார்கள்.
முருகனின் அறுபடை வீடுகளுக்கான தனிச் சன்னதிகள் இக்கோவிலில் உள்ளன. ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும்.
சிவபெருமான் கேள்விக்கு முருகன் அளித்த சமயோசித பதில்
ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, 'இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முருகப்பெருமான், 'அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை' என்று முருகப்பெருமான் சமயோசிதமாக பதில் கூறினார். அதாவது 'அறன்மாதா' என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. 'அறம் வளர்த்த நாயகி' என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் 'உயிர்களை காக்கும் நீர்' என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.
திருமணம் கைகூட முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம்
திருமணத்திற்கு காலதாமதம் ஆகும் ஆண் பெண்கள், இந்த முருகனுக்கு தேன் கலந்த அன்னாசி அபிஷேகம் செய்தால், நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார்.