பவானி சங்கமேஸ்வரர் கோவில்
அம்பிகைக்கு தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்த ஆங்கிலேய கலெக்டர்
ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும் உள்ள தேவாரத் தலம் பவானி சங்கமேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சங்கமேஸ்வரர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் சிறந்த பரிகாரத்தலங்களில் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.
இத்தலத்து அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.
இக்கோவிலின் அம்பிகை வேதநாயகிக்கு, ஆங்கிலேயர் ஒருவர் தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்திருக்கிறார். அதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. சுமார் 220 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில், வில்லியம் காரோ என்பவர் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட வில்லியம் காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து வில்லியம் காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். வில்லியம் காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.ஒரு முறை வில்லியம் காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு, திடுக்கிட்டு விழித்து எழுந்த வில்லியம் காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே வில்லியம் காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.