காவேரி அம்மன் கோவில்
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.
பவானி சங்கமேஸ்வரர் கோவில்
அம்பிகைக்கு தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்த ஆங்கிலேய கலெக்டர்
ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவிலும் உள்ள தேவாரத் தலம் பவானி சங்கமேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சங்கமேஸ்வரர். இறைவியின் திருநாமம் வேதநாயகி. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் சிறந்த பரிகாரத்தலங்களில் ஒன்றாகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது. . பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். பவானி கூடுதுறையில் மூழ்கினால் எக்காலத்திலும் பயன் கிடைக்கும். ஆயினும், ஆடி 18, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கூடுதல் சிறப்பு. இங்கு கோபுரமே இலிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.
இத்தலத்து அம்மனுக்கு பவானி, சங்கமேஸ்வரி, வேதநாயகி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி என்ற பெயர்கள் உண்டு. இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.
இக்கோவிலின் அம்பிகை வேதநாயகிக்கு, ஆங்கிலேயர் ஒருவர் தந்தக் கட்டில் காணிக்கையாக அளித்திருக்கிறார். அதன் பின்னணியில் ஒரு சுவையான சம்பவம் உள்ளது. சுமார் 220 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில், வில்லியம் காரோ என்பவர் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும் அழகையும் மக்கள் வியந்து பேசுவது கண்ட வில்லியம் காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்பதால், மதில் சுவரில் சாளரம் போன்று மூன்று துளைகளைச் செய்து வில்லியம் காரோ அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தனர். வில்லியம் காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளன.ஒரு முறை வில்லியம் காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டு, திடுக்கிட்டு விழித்து எழுந்த வில்லியம் காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். அடுத்த நிமிடமே வில்லியம் காரோ குடியிருந்த இல்லத்து மாடி இடிந்து கீழே விழுந்தது. தான் பிழைத்தது அம்பிகையின் அருள் என்று போற்றி, அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
ஆதிகேசவ பெருமாள் கோவில்
வீணை வாசிக்கும் விநாயகர்
பவானியில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வீணை மீட்டும் பெண் விநாயகி உள்ளார். இங்கு நாம் விநாயகரை பெண் வடிவில் தரிசனம் செய்யலாம். விநாயகரின் இந்த தோற்றம் ஒரு அரிதான காட்சியாகும்.