கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
நல்லூர் அஷ்டபுஜமாகாளி
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநல்லூர். இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில்தான் நல்லூர் அஷ்டபுஜமாகாளி வீற்றிருக்கிறாள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
பொதுவாக காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இத்தலத்து அஷ்டபுஜமாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகியாய், மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவளாய், ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக பேரழகோடு அமர்ந்திருக்கிறாள். எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அவள் அமர்ந்துள்ள கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.
மழலைச் செல்வம் இல்லாதவர்கள் அஷ்டபுஜமாகாளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் தாய்மைப் பேற்றை அடைகிறார்கள்.கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள்.