திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
தினமும் பகலில் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்
தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருநல்லூர் என்னும் தலம் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.
இத்தலத்து இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர்,தன் லிங்கத் திருமேனியின் நிறத்தை தினமும் பகல் பொழுதில், 5 முறை மாற்றி காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியின் நிறம் ஆறு நாழிகைக்கு(144 நிமிடம்) ஒரு முறை மாறுகிறது.முதல் ஆறு நாழிகையில் தாமிர நிறம், அடுத்த 6-12 நாழிகையில் இளம் சிவப்பு, அடுத்த 12-18 நாழிகையில் தங்கம், அடுத்த 18-24 நாழிகையில் நவரத்தின பச்சை, அடுத்த 24-30 நாழிகையில் இன்ன நிறமென்று கூற இயலாத தோற்றத்தில் நிறம் மாறி, மாறி பஞ்சவர்ணமாக காட்சி தருகிறார். இந்த அதிசய சம்பவம் இன்றும் கோவிலில் நடந்து வருகிறது.
சிவபெருமானின் சடாரி சாற்றப்படும் ஆபூர்வ நடைமுறை
பெருமாள் கோவில்களில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு திருமாலின் திருவடியை நினைவுகூரும் விதத்தில்(சடாரி) தலையில் சூட்டுவது வழக்கம். சிவாலயங்களில் இந்த வழக்கம் இல்லை. இருப்பினும் நல்லூரில் சிவபெருமானின் திருவடி பதிக்கப்பெற்ற சடாரியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சூட்டும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.
திருநல்லூா் கோவில் குளத்தின் தனிச் சிறப்பு
சிவபெருமான் வசிக்கும் கயிலை மலைக்கு சமமாக இந்த கோவில் விளங்குகிறது. இதை விளக்கும் வகையில் வடபாற் கயிலையும், தென்பால் நல்லூரும் தம் வாழ்பதியே' என்று திருநாவுக்கரசர் தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். கும்பகோணம் மகாமக குளத்துக்கு இணையாக திருநல்லூா் கல்யாண சுந்தரர் கோவிலில் உள்ள சப்தசாகரம் என்ற குளம் மிகவும் சிறப்புடன் விளங்குகிறது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இந்த தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, 'மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்' என்ற பழமொழி உணர்த்துகிறது.
கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்
நல்லூர் அஷ்டபுஜமாகாளி
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநல்லூர். இறைவன் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர். இறைவி கல்யாணசுந்தரி, திரிபுர சுந்தரி.
திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலின் தெற்கு வெளிப் பிரகாரத்தில்தான் நல்லூர் அஷ்டபுஜமாகாளி வீற்றிருக்கிறாள். இக்கோயில் பிரளயத்தில் கூட அழியாது என்று தலபுராணம் சொல்கிறது. எப்போதுமே பிரளயத்தோடு காளிக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
பொதுவாக காளி என்றாலே கோரமுகமும், ஆவேசமும்தான் நம் நினைவுக்கு வரும். . ஆனால், இத்தலத்து அஷ்டபுஜமாகாளி புன்னகை பூக்கும் இனிய நாயகியாய், மூத்த சுமங்கலி போன்ற மஞ்சள் பூசிய சாந்த முகம் கொண்டவளாய், ஆக்ரோஷமே இல்லாது அமைதியாக பேரழகோடு அமர்ந்திருக்கிறாள். எட்டு கைகளுடன் சூலாயுதம் தாங்கி அவள் அமர்ந்துள்ள கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.
மழலைச் செல்வம் இல்லாதவர்கள் அஷ்டபுஜமாகாளியை வேண்டிக் கொண்டு, அவளருளால் தாய்மைப் பேற்றை அடைகிறார்கள்.கருவுற்ற பெண்கள் நல்ல முறையில் குழந்தையை ஈன்றெடுக்க இங்கு காளி சந்நிதியில் வளைகாப்பு போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அவளின் இருகைகளிலும் வளையல்களைப் பூட்டி அழகு பார்க்கிறார்கள்.
Comments (0)Newest First