ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில்

விநாயகரும் ஆஞ்சநேயரும் எதிர் எதிரே தனிச் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி

காஞ்சிபுரத்திற்கு 63 கி.மீ. தென்மேற்கில், திருவண்ணாமலைக்கு 60 கி.மீ. வடக்கில் அமைந்துள்ளது ஆரணி புத்திரகாமேட்டீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரிய நாயகி.

ஆர்(அத்தி) மரங்கள் அணி, அணியாய் சேர்ந்து காடாகி இருந்த இடமாக இருந்ததால, இந்த ஊருக்கு ஆரணி என்ற பெயர் ஏற்பட்டது. இக்கோவில் கமண்டல நாகநதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றுப்பாலத்துக்கு இடப்பக்கத்திலிருக்கும் இக்கோவிலுக்கு சில படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இடப்புறத்தில் படித்துறை விநாயகர் சன்னிதி அமைந்திருக்கின்றது. அவருக்கு எதிர்புறம், கோவிலின் வலப்புறத்தில் ஆஞ்சநேயர் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார். இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது அரிது. இங்கிருக்கும் ஆஞ்சநேயர் கையில் சங்கு, சக்கரம் இருப்பதும் ஒரு தனிச்சிறப்பாகும்.

எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கி துவங்குவதும், அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்வதும் நமது வழிப்பாட்டு முறையாகும். இந்த நடைமுறையை சுட்டிக்காட்டும் விதமாக, கோவிலை வலம் வர ஆரம்பிக்கும்போது விநாயகரில் ஆரம்பித்து, இறைவனை தரிசித்து கடைசியில் ஆஞ்சநேயரை வணங்கி நமது கோவில் தரிசனத்தை முடிக்கும் விதமாக இக்கோவில் அமைப்பு அமைந்திருக்கின்றது.

பிரார்த்தனை

ஜாதகரீதியாக ஐந்தாம் இடத்தில் கேது இருப்பதால் உண்டாகும் புத்திர தோஷமும், நாகதோஷமும் நீங்க, இக்கோவிலில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகத்தினை செய்தும் தோஷ நிவர்த்தி பெறுகிறார்கள். பரிகார தலம் என்பதால் திருமணம் செய்ய உகந்த இடமாக விளங்குகின்றது. மேலும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சுப நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறுகின்றது.

எதிர் எதிரே இருக்கும் விநாயகர், ஆஞ்சநேயர் சன்னதி

படித்துறை விநாயகர்

கையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயர்

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டுவோருக்கு பலன் தரும் தலம்

https://www.alayathuligal.com/blog/dx7ap3hrjchpa49hz3pjbff7rhywmd

Previous
Previous

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில்

Next
Next

காஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோவில்