அங்காள பரமேஸ்வரி கோவில்

ஆங்கிலேய அதிகாரியை அடிபணிய வைத்த அங்காள பரமேஸ்வரி

தேனி-போடி சாலையில் கோடாங்கிப்பட்டி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தேனிக்கு அருகிலுள்ள குச்சனூரில் புற்றுக் கோயில் இருந்தது. இந்த கோவிலுக்கு ஊர் மக்கள் ஓர் அங்காள பரமேஸ்வரியின் சிலையைச் செய்ய விரும்பினார்கள். அதன்படி சுப்புத் தேவர் என்பவர், போடிக்கு அருகே உள்ள ஊருக்குச் சென்று அங்காள பரமேஸ்வரியின் சிலையை உருவாக்கினார்.

அந்த சிலையை தங்கள் வசித்த வந்த குச்சனூருக்குக் கொண்டு செல்ல ஊர் மக்கள் சுமந்து வந்தனர். அப்போது போடிக்கு அருகே கோடாங்கிப்பட்டி எனும் ஊரை வந்து அடைந்தபோது களைப்பு உண்டானதால் அங்கு சிலையை இறக்கி வைத்துவிட்டு சற்று ஓய்வு எடுத்தனர். அன்னையின் திருவுளம் அங்கேயே தங்கிவிட எண்ணியது போலும். அதனால் கீழே இறக்கி வைக்கப்பட்ட திருவுருவச்சிலை மீண்டும் எடுக்கவே முடியாதபடி நிலைத்து நின்றுவிட்டது. இதனால் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த ஊர் மக்கள் கண்ணீர்விட்டுப் புலம்பி, 'எங்கள் தாய் இருக்கும் இடமே எங்களுக்கான இடம்' என்று உறுதி கொண்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

அன்னை குடிகொண்ட இடத்தில் ஒரு கோயிலை எழுப்ப விரும்பி போடி ஜமீன்தாரைச் சந்தித்து விண்ணப்பம் செய்தனர், அவரோ இப்போது சிலை இருக்கும் இடம் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஆங்கிலேயர் ஒருவரே அந்த இடத்துக்கு உரிமையாளர் என்றும் கூறினார். நீங்கள் அவரிடம் அனுமதி பெற்று ஆலயம் கட்டிக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினார். அவர்களும் அவ்விதமே அந்த ஆங்கிலேயரை அணுகி அங்காள அம்மனுக்குக் கோயில் கட்ட அனுமதி கேட்டனர். அந்த ஆங்கில அதிகாரியோ கோபமடைந்து, அவர்களை விரட்டியடிக்க தனது காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பயந்துபோன ஊர்மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

அன்றிரவு ஆங்கில அதிகாரியின் மாளிகை எங்கும் தீ பரவியது. அது ஊரெங்கும் பற்றியது. ஆங்கிலேயரும் அவரது காவலர்களும் மாளிகையை விட்டு ஓடினர். தெய்வ அருள் வந்த மூதாட்டி ஒருத்தி, 'அங்காளம்மனுக்கு சொந்தமான இடத்தைக் கொடுத்துவிடுங்கள்! உங்களைப் பாவத்தில் இருந்து மீண்டு கொள்ளுங்கள்' என்று அறிவித்தாள். ஆங்கிலேய அதிகாரிகள் மிரண்டனர்.காவலர்கள் இப்போது ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க வரும்பும்படி ஊர்மக்களைக் கெஞ்சுகிறார்கள். அதிகாரிகள் ஊர்மக்களை வணங்கித் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். அம்மன் நிலை கொண்ட கோடாங்கிப்பட்டி ஏரிக்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையை உடனடியாக மாற்ற உத்தரவிட்டனர், மேலும், 'ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயிலுக்குச் சொந்தமான இடம் அது' என்று செப்பு சாசனத்தையும் வழங்கினர்.

மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கண்கண்ட தெய்வமாக கோடாங்கிப்பட்டி அங்காள பரமேஸ்வரி விளங்கி வருகிறாள். இங்கு இவளுக்கு வெள்ளி மற்றும் பௌர்ணமி பூஜைகள், மாசி அமாவாசை மற்றும் ஆடி மாத விழாக்கள் விசேஷமானவை. ஒருமுறை இவளை தரிசித்தால் போதும், அச்சங்கள் இல்லாத சிறப்பான வாழ்வை அடையலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

Previous
Previous

ராஜகோபாலசுவாமி கோவில்

Next
Next

சிவசைலநாதர் கோவில்